Skip to main content

முரண்பாடுகள் - கோமான் வெங்கடாச்சாரி

     ‘முரண்பாடுகளின் மொத்த தொகுப்பே மனித வாழ்க்கை. முரண்படுவைகளிலிருந்து பிறப்பதே முழுமையான இலக்கியம். முரண்பாடுகளின் சிறப்புகளே மனித வாழ்வைப் பரிமளிக்கச் செய்கிறது’ - ஏதோ ஒரு ஆங்கில கவிஞன் கூறியதைப் படித்ததுண்டு. 

தொலைக்காட்சியிலே ‘தமிழக இசை மகான்கள்’ குன்னக்குடியும் வேதவல்லியும் ஸ்வரங்களின் சிறப்பையும், தியாகையரின் கீர்த்தனைகளையும் எடுத்துக் கூறி விவரிக்கின்றனர். ‘நிதி சால சுகமா’- கேட்பதில் தான் என்ன சுகம், தியாகையர் முத்துசாமி தீட்சதரின் மணிப் பிரவாள கீர்த்தனைகள்- இப்படி அரைமணி நேரம் இசையில் மூழ்கியிருந்த நான் - ஏதோ பிதற்றியிருக்க வேண்டும். அருகிலிருந்த என் மகள் ‘அப்பா, நீ சரியான முரண்பாடுகள் உள்ளவர். ஒருநாள் ஜேசுதாஸில் மூழ்குகிறீர்கள். மறுநாள் SPB திடீரென்று ஜாக்சன், மடோனா, போதாக்குறைக்கு சினிமா பாட்டுகள். உன்னைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. “Highly Contraversial” என்றாள். யோசித்தேன்.

நண்பர்கள் கூட என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு; ‘உன் அரசியல் என்ன? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே. ஒருநாள் எங்களைத் தாக்குகிறாய். மறுநாள் அவர்களைத் தாக்குகிறாய், “இப்படி இப்படி. . . நானும் இன்னும் சிந்திக்கின்றேன். நான் எந்த அரசியல் கட்சியில் ஈடுபாடுள்ளவன் என்று. இன்னும் புரியவில்லை. முரண்பாடுகள் இப்படி எத்தனையெத்தனையோ! என் சொந்த வாழ்க்கையிலே பல முரண்பாடுகளை சுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன்; முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய அறிவியல், அன்றைய விஞ்ஞானம் - ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அன்றைய பாடம் நீர், மண் இவைகளைப் பற்றியது. மண்ணைக் கரைக்கும் சக்தி நீருக்கு உண்டென்றும் அதே சமயம் நீரைத் தன்னுள் இழுத்து மறைத்துக் கொள்ளும் சக்தி மண்ணுக்கு உண்டென்றும் ஆசிரியர் விளக்கினார். ஓர் உதாரணத்தையும் அதற்காகச் செய்து காண்பித்தார்.

ஓர் கண்ணாடிப் பாத்திரம். அதில் முக்கால் பங்கு தண்ணீர். அதில் சிறிதளவு மண்ணை எடுத்துப்போட்டார், அந்த மண் தண்ணீரில் கரைந்து திரவ ரூபத்தில் காட்சியளித்தது. அதிக அளவு தண்ணீரில் சிறிதளவு மண்ணைப் போட்டால் அந்த மண் தண்ணீரில் கரைந்துவிடும் என்று நீரின் சக்தியையும் மண்ணின் இயற்கையும் விளக்கினார். மறுபடி அதே அளவு நீரை எடுத்தார். அருகிலிருந்த மண் தரையில் ஊற்றினார், நீர் குறைவாக இருந்தால் அந்த மண்ணை நீரால் கரைத்திட முடியாது என்றார். அப்பொழுது எங்களுக்கு இந்நிகழ்ச்சி அருமையான விளக்கமாக அமைந்தது.

மறுநாள் அதே ஆசிரியர் புவியியல் பாடம் தொடர்ந்தார். உலக வரைபடத்தை கரும்பலகையில் மாட்டி உலக இயற்கை அமைப்பையெல்லாம் பற்றி விவரித்தார். உலகத்தில் நான்கில் மூன்று பங்கு கடல் நீரும் ஒரு பங்கு நாம் வசிக்கும் பூமியும் இயற்கையாக அமைந்ததாக குறிப்பிட்டார். பாடம் முடிந்தது. ஆசிரியர் கேட்டார், ஏதேனும் ஐயம் உள்ளதா என்று.

ஒரு மாணவன் எழுந்து நின்றான். “ஐயா! நேற்று அறிவியல் பாடம் நடத்தினீர்கள். அப்பொழுது நீங்கள் நீர் அதிக பங்கும், மண் குறைந்த பங்கும் இருந்தால் அந்த மண் நீரில் கரைந்துவிடும் என உதாரணங்களுடன் விளக்கினீர்கள். இன்றோ நீங்கள் இவ்வுலகில் மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு மட்டுமே நிலப்பரப்பும் உள்ளதாகக் கூறுகிறீர்கள். நேற்று நீங்கள் கூறியபடி பார்த்தால் சிறிதளவேயுள்ள நாம் வசிக்கும் இந்த பூமி பெரும் பரப்பான கடல் நீரில் அல்லவா கரைந்து போயிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு நிகழவில்லையே! எனவே நேற்றுச் சொல்லிய பாடம் தவறா? அல்லது இன்றைய பாடம் தவறா? விளக்க வேண்டும்.”

அந்த மாணாக்கன் யாரென்று ஊகித்திருக்கக்கூடும். அவனுக்குக் கிடைத்த பதில். ‘சரியான அதிகச் பிரசங்கி; முரண்பாடுகளுள்ள பையன்.’ பாடத்தின் முரண்பாடுகள் மறைந்தது. கேள்வி எழுப்பிய மாணவன் முரண்பாடுள்ளவனான். எப்படி திருமூலரின் ‘மரத்தில் மறைந்தது மாமதயானை’ போன்று. புவியீர்ப்பு. அதன் பொருள் அவன் அப்பொழுது உணர்ந்தானில்லை. 

வேறொரு நாள், தமிழாசிரியர் திருக்குறளை விளக்குகிறார். ‘புலால் உண்ணாமை’ என்னும் பகுதியை கருத்துப்பட விளக்கினார்.

‘கொல்லான், புலானை வெறுத்தானை கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்’ 

அக்குறளின் கருத்துக்களை உணர்ச்சி ததும்ப எடுத்துரைத்தார். உண்மையிலே பரவசமடைந்தோம். புதிதாக வந்த தமிழாசிரியர் எவ்வளவு அழகாக பாடம் சொல்லி தருகிறார்!

மறுநாள் காலை. வழக்கம் போல கடைவீதி பக்கம் போக நேரிட்டது. அங்கே கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. முன்தினம், கொல்லாமையைப் பற்றிய கருத்துக்களைப் புகட்டிய அதே தமிழாசிரியர் அங்கிருந்த கசாப்புக்கடை ஒன்றில் அந்தக் கடைகாரருக்கு உதவியாயிருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததை கண்ணால் பார்க்க நேரிட்டது. மனம் ஆறவில்லை. மறுநாள் அவ்வாசிரியரிடம் அளவுக்கு மீறிய உரிமையுடன் அவர் செய்கைக்கு விளக்கம் கேட்டபோது அவர் கூறிய பதில், “படிப்பது வேறு, தொழில் வேறு.” இதுபோன்ற சம்பவங்கள், பொருந்தாக் கருத்துக்கள் இன்று மட்டுந்தான் நிகழ்கின்றனவா? புராண இதிகாசங்களை எடுத்து அலசி ஆராய்ந்து பார்க்கும் போது அவைகளை நமக்களித்தோர் முன்னுக்கு பின்னான- முரண்பாடான கருத்துக்களை அங்கங்கே அள்ளித் தெளித்திருப்பதை அறிய முடியும். 
(குறிப்பு : இதுவரை நான். இனி என் தந்தையின் கருத்துக்கள் - கோ.வெ. ஸ்ரீதரன்)

நம் யாவராலும் தமிழ் மூதாட்டி என்று பாராட்டிப் பேசப்படும் ஒளவை பிராட்டி தன் நூல் ஒன்றில் “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றதொரு பாடலை பாடியிருக்கிறார். அவர் கருத்துப்படி உலகத்தோரில் நம்மை நாடி வந்தவர்களுக்கு சிறிதேனும் இயன்ற அளவில் ஐயம் அளித்து எளியோர்களை ஆதரிப்பவர்தான் உயர்ந்த ஜாதியினர் என்றும் அவ்வாறு பிச்சை இடாதவர் இழிகுலத்தோர் என்றும் கருதப்படுகிறது.

“சாதி இரண்டொழிய வேறில்லை” எனப் பகன்ற அதே ஒளவை பிராட்டியார் “குலத்தளவே ஆகும் குணம்” என்று வேறொரு இடத்தில் குறிப்பிடும் விந்தை நம்மை சிந்திக்கத்தான் செய்கிறது.

“நீரளவே ஆகுமாம் நீராம்பல், தாம் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு, மேலைத் தவத்தளவே ஆகுமாம் தாம் பெற்ற செல்வம்” என்ற உண்மைகளை உலகத்தாருக்கு விளக்கப் புகுந்த அந்த பேரறிவாளர், “குலத்தளவே ஆகும் குணம்” என்று கூறும் விந்தையைப் பார்த்தால் முதலில் அவர் பாடலின் கருத்துக்கு முழுதும் மாறுபட்டு முரண்பாடாகத்தான் காண முடிகிறது.

அதுமட்டுமல்ல “ஏற்பதிகழ்ச்சி” - அதாவது யாசிப்பது இழிவானது என்று கூறும் நீதி நூல் ஆசிரியர் உடனடியாகவே, “ஐயம் இட்டுண்” என்கிறார். ஏற்பதற்கு எவருமேயில்லையென்ற நிலை ஏற்பட்டுவிட்டால் ஐயம் இடுவது எங்ஙனம்? யாசிக்கும் தொழில் இழிவானது என்று கூறிய அவரே “ஐயம் இட்டுண்” என்று எவ்வாறு கூறலாம்? 

கவிச்சக்கரவர்த்தியைத் தொடாவிட்டால்?... கம்பரின் நாட்டுப் படலத்தில் அந்த தயரதனின் ஆட்சியில் கொடுப்பவர் யாருமேயில்லையென்று கூறி, கொள்பவர் அங்கு எவருமேயில்லை. அதனால் தான் கொடுப்பவரும் கொல்லாடும் இல்லாமல் ஆகிவிட்டது என்று தசரதனின் ஆட்சிமுறையைப் பற்றி மிகப் புகழ்ந்து பாடுகிறார். அவ்வாறு கொடுப்பவரும், கொள்வாரும் எக்காலத்துமே இல்லாமலிருந்ததாக நாம் அறிவதில்லை. கம்பனின் கவியுள்ளந்தான் அவனை அப்படிப் பாடச் செய்ததே தவிர அது இயற்கைக்கு புறம்பான ஒரு செய்தியேயாகும். “ஏற்பதிகழ்ச்சி” என்பதற்குத் தானே சென்று யாசித்தல் இழிவானது என்று கூறி “ஐயம் இட்டுண்” என்பதற்கு வறியோரைத் தேடிச் சென்று தன்னால் இயன்ற வகையில் உணவளித்த  பிறகு உண்பதைத்தான் புலவர் எடுத்துக் காட்டுகிறார் என்று என் நண்பர்கள் சிலர் வாதாடுவது வழக்கம். இருப்பினும் என் அறிவு அதை ஏற்றுக்கொள்ள மறுக்கத்தான் செய்கிறது. இதுதான் போகட்டும்.

நம் நாட்டின் அரும்பெரும் நீதிநூலாகிய திருக்குறளையும், அதை நமக்குப் பாடித்தந்தருளிய திருவள்ளுவப் பெருந்தகையையும், அறியாதவர்கள் எவரும் நம்மிடையே இருப்பதரிது. அந்தத் தெய்வப் புலவர், ஒரு இடத்தில் “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்கிறார். அவரது நூலின் மற்றொரு பகுதியில், அதே ஆசிரியர்,

“ஊழின் பெருவலியாவுள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்” 

என்று சொல்லும் விந்தையைப் பார்த்தால் நம்மை அந்தப் பெருந்தகை ஏமாற்றப் பார்க்கிறாரோ என்று கூட எண்ணத் தோன்றும். முதற்பாடலில் ஒருவன் மனத்தளர்ச்சியடையாமல் விடாமுயற்சியோடு எதிர்த்துப் போராடி செயல் புரிவானாகில் அவன் ஊழ்வினை என்று சிறப்பாகக் கூறப்படும் விதியையும் வென்று விடலாம் என்று கூறிய அவரே, இரண்டாவது பாடலில் ஊழ்வினையைக் காட்டிலும், வலிமையுள்ளது எதுவும் கிடையாது. அதை எதிர்த்து செய்யப்படும் முயற்சிகள் எதுவும் அதை முந்திக் கொள்ள முடியாது என்று அறுதியிட்டு திட்டவட்டமாகக் கூறுகிறார்.

திருவள்ளுவர் ஒரு தீர்க்கதரிசி. பெரும் அறிவாளி. அவர் பொய் கூற வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஆனால் மனிதன் ஊழ்வினையின் மேல் பழியை சுமத்திவிட்டு வாளாயிருந்துவிட்டால் உலகமே ஒரு சோம்பேறி மடமாக ஆகிவிடுமே என்பதற்காகத் தான், நமக்கு ஊக்கமளிக்கும் வகையில், “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்ற திருக்குறளை இயற்றியிருக்க வேண்டுமேயல்லாது அவருக்கு விதியின் பால் நம்பிக்கையில்லையென்று முடிவு கட்டிவிட முடியாது. இதை நான் இங்கு குறிப்பிடுவது அன்னாரிடத்து எனக்குள்ள மதிப்பு குறைவினால் என்று வாசகர்கள் நினைத்து விடக் கூடாது. அன்னாரின் புலமைக்கு யான் தலை தாழ்த்துகிறேன். ஆயினும் அவர்தம் வாய் மொழியாகவே நம்மை அறிவுறுத்தியிருக்கும்,

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
  அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற குறட்பாவின் படி நாம் இங்கு அவர்தம் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கியிருப்பதை அவரோ அல்லது அவருடைய அன்பர்களோ தவறாகக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு மேலே தொடர்கிறேன்.

கவிச் சக்கரவத்திக் கம்பர் மேற்படி தெய்வப் புலவரின் காலத்திற்குப் பிந்தியவர் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மை. அவர்தம் மாபெரும் இலக்கியமாகிய இராம காதையில் திருக்குறள், சீவக சிந்தாமணி, ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்கள் ஆகிய அருந்தமிழ் நூல்களிலிருந்து சில சிறந்த கருத்துக்களைத் திரட்டி அதை மிகச் சிறந்த முறையில் தன் நூல் முழுவதிலும் கையாண்டிருக்கிறார். அன்னாருக்கு விதியின் பால் மிகுந்த நம்பிக்கை. விதியை எவராலும் வெல்ல முடியாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை அவருக்கு உண்டு என்ற உண்மையை அவர்தம் பாடலிலேயே நாம் தெள்ளத் தெளியக் காண்கிறோம்.

சிற்றன்னை கைகேயி காகுத்தனைக் கானகம் செல்லப் பணித்து விட்டாள். அவன் சிறிதும் மனங்கலங்கவில்லை. கானகம் செல்லத் தயாராகி விட்டான். ஆனால் அவனது தம்பி இலக்குவன் ஆற்றொணா சீற்றம் அடைந்தான். தன் அண்ணனைக் கானகம் செல்லப் பணித்த தன் சிற்றன்னையை மட்டுமல்லாமல் மற்ற யாவரையுமே தன் அம்புக்கு இரையாக்கி விடுவதாக வெகுண்டு எழுந்தான். அண்ணன் தம்பியைத் தடுத்தான், “தம்பி! இது நமது தந்தையின் பிழையோ, தாயின் பிழையோ அன்று. இது நம் விதியின் பிழை. நதியில் நீர்ப் பெருக்கில்லை யென்றால் அது நதியின் பிழையாகுமா? நீ இதற்காக வெகுளல் வேண்டாம்” என்று அவனை சமாதானம் செய்தான். இந்தக் கருத்தைக்  கம்பர் தமக்கே உரித்தான சிறந்த நடையில் நமக்கு ஒரு ஓவியமாக எடுத்துக் கூறுகிறார் பின் வரும் பாடலில்,

“நதியின் பிழையன்று நறும்புன லின்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்த நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது.”

கம்பரைப் போலவே நானும் விதியின் பால் அதிக நம்பிக்கை உள்ளவன் என்பதை இங்கு ஒப்புக் கொள்கிறேன்.

இதே கம்பர் தமது மாபெரும் இலக்கியப் படைப்பாகிய இராமாயணத்தில் சில இடங்களில், சில முரண்பாடுகள் செய்திருக்கிறார் என்பது நாம் நோக்கற்குரிய தொன்றாகும். பாலகாண்டத்தில் அகலிடைப்படலம் என்று ஒருபடலம் இருக்கிறது. 

இராமன் கௌசிகரின் யாகத்தை பூர்த்தி செய்துவிட்டு அன்னாருடனும், தன் தம்பியுடனும் மிதிலை நோக்கிச் செல்லும் வழியில் அவனது கால் துகள் பட்டதின் பயனாக அங்கு அவள் தம் கணவரின் சாபத்தால் கல்லுருக் கொண்டு அதுகாறும் காத்திருந்த அகலிகை என்பவள் தன் சுய உருக்கொண்டு அழகியப் பெண்ணாக இராமன் முன் நிற்கிறாள். அவளை அங்கு கண்ட இராமன் அவளது வரலாற்றைக் கூறும்படி கோசிகரைக் கேட்கிறான். அவரும் அதற்கிசைந்து அவளுடைய சரிதையை இராமனுக்குக் கூறுகிறார். அகலிகையின் கதை நம் நாட்டு மக்கள் யாவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய ஒன்றானதால் அதைப்பற்றி வரலாறுகளை இங்கு நான் விவரித்துக் கூற வேண்டிய அவசியமில்லையென்று அதை விவரிக்காது விடுக்கிறேன்.

“புக்கவளோடுங் காமப் புதுமண மதவின்றேற
லொக்க வுண்டிரத்தலோடு முணர்ந்தனளுணர்ந்த பின்னுந்
தக்க தன்றென்ன வோரா டாழ்ந்தனளிருப்பத்தாழா
முக்கணனனைய வாற்றான் முனிவனும் முடுகிவந்தான்”

அகலிகையின் பாற் கொண்ட மறக்கொணா மையலினால் அவளைத் தேடி வந்து வஞ்சனையால் அன்னாளின் கணவராகிய கௌதமரை நீராட ஆற்றிற்கு செல்லுமாறுச் செய்துவிட்டு அவர் போன்று உருக்கொண்டு அகலிகையின் பால் சிற்றின்ப நுகர்ச்சியில் ஈடுபட்டான் இந்திரன். முதலில் தம் கணவர் தாம் தன்னைப்புணருகிறார் என்று நம்பிய அந்த அகலிகை சிறிது நேரத்திலேயே அவர் தம் கணவர் அல்ல என்பதையும் இந்திரன் தான் அவ்வாறு வந்திருக்கிறான் என்பதையும் உணர்ந்து விட்டாளாம். அவ்வாறு உணர்ந்தும் அவள் அவன்பால் உணர்ச்சி வசப்பட்டு ஒன்றுமே மறுத்துப் பேசாமல் இருந்துவிட்டாள் என்று ஒப்புக்கொள்கிறார் நம் கவிச் சக்கரவர்த்தி, “உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும் தக்க தன்றென்ன வோராள்” என்ற அவரது பாடலின் அடியைத் திருப்பித்திருப்பிப் படித்துப் பாருங்கள். நீங்களே அவள் செய்தது மாபெரும் தவறு என்ற முடிவிற்கு வருவீர்கள். அவளோ ரிஷி பத்தினி. அவளுடைய கணவருக்கு இருக்கும் சக்திகளில் பெரும்பாலானவை அவளிடத்தும் இருந்திருக்க வேண்டும். தன்னை இந்தச் சிற்றின்பத்தில் ஈடுபடச் செய்திருப்பவன் தன் கணவரல்ல. இந்திரன்தான் அவ்வாறு உருக்கொண்டு வந்திருக்கிறான் என்று அவளுக்குத்தெரிந்த உடனேயே அவளே அவனைச் சபித்து இருக்கலாமே? இதற்கு கௌதமர் எதற்காக வரவேண்டும். அவள் மனமறிந்து தான் இந்தத் தவறைச் செய்திருக்கிறாள் என்பது சொல்லாமலேயே விளங்குகிறதல்லவா. இதைச் சொல்லிய அதே வாய், கம்பரின் வாய் - அதே படலத்தில் மற்றொரு இடத்தில் என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஊன்றிக் கவனித்தால் கம்பன் செய்திருக்கும் முரண்பாடு நமக்கு நன்கு விளங்கும்.

கல்லுரு தவிர்ந்த அகலிகையை இராமன் முதலிய மூவரும் அவளுடைய கணவராகிய கௌதமரின் பால் அழைத்துச் செல்லுகிறார்கள். 

“அஞ்சன வண்ணத்தான்றனடித் துகள் கதுவா முன்னம்
வஞ்சி போலிடையாண் முன்னை வண்ணத் தளாகி நின்றோ
ணெஞ்சினாற் பிழைப்பிலாளை நீயழைத்திடுக வென்னக் 
கஞ்சமா முனிவனன்ன முனிவனுங் கருத்துட் கொண்டான்” 

இத்தனை வரலாறுகளையும் இராமனிடம் கூறிய அதே கோசிக முனி, கௌதமரிடம் அகலிகையை அழைத்துச் சென்று அவளை ஏற்றுக் கொள்ளுமாறு அவரிடம் சொல்லுமிடத்தில்; ‘நெஞ்சினாற் பிழைப்பிலாளை’ என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்பதை வாசகர்கள் அவசியம் ஊன்றிக் கவனிக்கவேண்டும். 

இந்த முரண்பாட்டை கவிச்சக்கரவர்த்தி என்றுபட்டப் பெயர் பெற்ற கம்பர் போன்ற ஒருசிறந்த கவியே முரண்பாடாகப் பேசுகிறார் என்றால் நம்போன்றோர் என்ன செய்ய முடியும்?


இத்தகைய முரண்பாடுகள் மேலும் பலநூல்களிலிருந்து நாம் எடுத்துக் கூறும் விதத்தில் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அவைகளைப் பன்னி உரைக்குங்கால் பாரதமாய் முடியும். ஆதலின் விரிவஞ்சி இத்தடன் இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். 

Comments

Popular posts from this blog

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது. கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்கு ம

ஒருவயது குழந்தை....

ஒரு வயதுக் குழந்தை மானுடம் கலந்த பசிகள் போல, தந்தையின் தோள்களில் இருக்கமாய் பிணைப்பு அது ஒரு பேருந்துச் சந்திப்பு….. மனித உயிர்கள் எழுபதைத் தாண்டலாம்.. யாரும் அவர்களுக்காக எழுவதைக் காணவில்லை…. நின்ற நபர்களில் நானும் ஒன்று….. யாராவது மடியேந்திக் கொள்ளலாம் என்றாலும், எவர் மடியும் பிடிக்காத ஒரு தகப்பன் குழந்தை…. இதனினும் கொடுமை தாய்க்கு இடம் கிடைத்தும் தாய் மடி சேராத குழந்தை…… அந்தப் பிணைப்பு எனக்குப் பிடித்தது…… அறுபதைத் தாண்டிய ஒரு முதுமை, பிணைப்பை விடு.. நாளை உன் தோள்கள் தோல்விகளை ஏற்காது என்றது…. தோள்கள் தாங்க வேண்டியது தந்தையின் கடமை…. என் மகன் என் உதிரம் என்ற சுயநலம் வேணாமே….. அவன் உலகம் தாண்டும் உயரத்தை ஒதுங்கிக் கூட இரசிக்க்லாமே…. நாளைய தோல்விகளுக்காக இன்றைய வெற்றிகளை இழக்க இயலாது…. அந்தக் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தேன்…. அந்தப் பிடிப்பில்தான் அவனது எதிர்காலம்….. பிடித்துப் பிடித்தால் எல்லாம் பிடிக்கும்…. நான் சுமந்த என் குழந்தை, கண்ணீராய் வெளிவந்தது…. இன்னமும் என் குழந்தை எனக்கு குழந்தையாய் இருப்பது அவன் என்னைப் பிடித்துப் பிடித்தது,,,,,, -

இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி

       “இராமகாதையில் ஒரு திருப்பமா?” என்று இந்த கட்டுரையின் தலைப்பைக் காணும் வாசகர்கள் அதிசயத்துடன் என்னைப் பார்த்து கேட்பது என் செவிகளில் விழத்தான் செய்கிறது. கவியாற்றல் படைத்த கம்பனது இராமகாதையில் அப்படிப்பட்ட திருப்பம் என்ன இருக்கிறது? என்றும் பலர் எண்ணலாம். அவர்களுக்கு இந்நூலை எழுத முற்பட்ட நான் விடையளிக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்பதை நன்கு உணராமலில்லை. ஆம். இராமகாதையில் பல திருப்பங்கள் இருப்பதை, நாம் அதை ஊன்றிக் கவனிக்குமளவில் அறிந்துகொள்ள இயலும். அவைகளுக்கு பல சான்றுகள் உள. அவைகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு கூர்ந்து நோக்குவோம். முதலாவதாக தசரத சக்கரவர்த்தியால் தீர்மானிக்கப்பட்டு மறுநாள் காலை நடக்கவிருந்த இராம பட்டாபிஷேகம் அதற்கு முதல் நாள் இரவே கூனியின் சூழ்ச்சியால் நிறைவேறாமல் நின்றுவிடுவதை ஒரு திருப்பம் என்றே கொள்ளலாம். தசரதனின் திட்டப்படி இராம பட்டாபிஷேகம் அன்று நடந்திருக்குமானால் இராமன்  காட்டிற்குச் செல்வதோ, அங்கு சானகியை பிரிய நேரிடுவதோ, அதன் நிமித்தம் இராவணனை அவனுடைய குலத்தோடு வேரறுப்பதோ நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு இடமில்லாமல் போயிருக