எனது பாட்டனாரின் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய படைப்புகளை அவரது நூறாவது பிறந்தநாள், சித்திரை மாதம் விசாகத்தன்று (24 04 2016) அவர் நினைவாக பதிவேற்றப்படுவதுதான் இந்த சிறுதொகுப்பு.

கோமான் வெங்கடாச்சாரி செங்கல்பட்டை அடுத்த பொன் விளைந்த களத்தூர் அருகாமையிலுள்ள மணப்பாக்கத்தில் பிறந்தவர். ரசிகமணி தி.க.சிதம்பரநாதரிடம் முறையாக கம்பராமாயணம் பயின்றவர். அவருடன் படித்த மற்றொரு மாணாக்கர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள்.

அன்றைய நாட்களில் ‘விசாகன்’ என்றும் ‘கோமான்’ என்றும் புனைப்பெயரில் பல்வேறு புதினங்களை, சிறுகதைகளை படைத்தவர். ஆனால் அவைகளில் ஒன்றுகூட இன்று எங்களிடம் கைவசம் இல்லை என்பது துரதிர்ஷடவசமே!. இலக்கியத்திற்காக ‘வீரமுரசு’ என்ற மாத இதழை நடத்தியவர். அவரை போற்றும் விதமாகத்தான் எனது தந்தையும் அவரது தொழிற்சங்கத்தில் ‘வெற்றி முரசு’ என்ற ஏட்டினை நடத்தினார். திரைத்துறை செய்திகளைக் கொண்ட மற்றொரு ஏடு ‘கலா ரசிகன்’. இவரது இதழில் அன்றைய திரையுலக நட்சத்திரம் எம்.கே.டி. பாகவதருக்கு விருது அளித்திட்டபோது அது தவறென சுட்டிக்காட்டி திறமையானவர்களை அடையாளம் காட்டிடவில்லை என எழுதிய கட்டுரைக்கு மறுப்பளிப்பதற்காகவே ‘பயாஸ்கோப்’ என்ற இதழை துவக்கி ஓரிதழுடன் அது காணாமல் போனதாம். எனது பாட்டனாரின் ‘வீரமுரசு’ இதழுக்கு துணையாசிரியராக பணிபுரிந்திட திரு சாவி அவர்கள் எழுதிய கடிதத்தை எனது தந்தையே பார்த்திருக்கிறார்.

இந்திய விடுதலைப்போரில் அமரர் ராஜாஜியுடன் அரிஜன ஆலய பிரவேசத்தில் பங்கேற்றவர். முற்போக்கு சிந்தனையாளர். அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே அக்ரகாரத்தில் சமபந்தி போஜனம் நடத்திய, அதுவும் எனது பாட்டியின் திருக்கரத்தால் செய்திட்ட புரட்சியாளர். சமஸ்கிருதத்தில் பெரும் புலமை. விடுதலைப் போரில் பங்கேற்ற போராளியாக இருந்தாலும், வறுமையில் உழன்றிட்ட போதிலும் ‘தியாகிகள் ஓய்வூதியம்’ பெற மறுத்திட்டவர். அதனை ‘சந்தனக்குடம்’ என்ற சிறுகதையில் மிக அழகாக சித்தரித்துள்ளார். அவரது எழுத்துக்கள் பாதுகாக்கப்படவில்லை. அனைத்தும் அழிந்து போயின.

ஆனாலும் அவரது இறுதிகாலத்தில், இரு கண்பார்வையும் இழந்த நிலையில், நூல் எதனையும் மறுபார்வைக்கு ஆட்படுத்திடாமல் கூற கூற எனது தகப்பனார் அவைகளை எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டதால் சிலவற்றை கொண்டு மட்டும் ‘கோமானின் பக்கங்கள்’ என்னும் இந்த சிறு நூலாக இங்கே தொகுக்கின்றேன். அவரது கம்ப மேதையும், ஆழ்வார்களிடமிருந்த ஈடுபாடும் தெள்ளென இதில் விளங்கும்.

அவரது இரு பெரும் ஆய்வு நூல்களான ‘சொல்லின் செல்வனும் மிதிலைச்செல்வியும்’ மற்றும் ‘வென்றவன் வாலியே’ ஆகிய இரண்டும் வருமாண்டுகளில் தொடர்ந்து வெளியிட உள்ளோம். ஓர் தமிழறிஞரின், முற்போக்கு சிந்தனையாளரின் வழிவந்த நாங்கள், எங்கள் பாட்டானாருக்கு சமர்ப்பித்திடும் சிறுகாணிக்கைதான் இந்த தொகுப்பு.

பாராட்டுங்கள் வாழ்த்துங்கள் எங்கள் பாட்டனாரை. அவரது தமிழ் அறிவை அவரது நூற்றாண்டு தினத்தில்.

Comments

Popular posts from this blog

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

திரும்பி வாராத் தூது - கோமான் வெங்கடாச்சாரி

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - கோமான் வெங்கடாச்சாரி