திரும்பி வாராத் தூது - கோமான் வெங்கடாச்சாரி

ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் அன்றொரு நாள், பச்சைமா மலைபோல் மேனியும், பவளவாயும் கமலம் போன்ற செவ்வியக் கண்களும் உடைய அந்த அரங்கத்து அரவணையானை கண்குளிரக்கண்டு விட்டு வந்திருந்திருந்தாள், அந்தப் பதினெண்பிராயம் நிறையாத பருவமங்கை.

அவனுடைய பரந்தநெற்றியும், அகன்று நீண்டு செவ்வரி படர்ந்த கண்களும், கொவ்வைக் கனிவாயும், பரந்த மார்பும், நீண்ட கரங்களும் மூவுலகை, ஈரடியாக அளந்த திருவடிகளும் விரிஞ்சனை ஈன்ற வனசம் போன்ற திருநாபியும் அவளை அவன்பால் மயக்கமுறச் செய்தன. அவனை மறக்க எண்ணியும் அவளால் மறக்க முடியவில்லை. அதே ஏக்கத்தினால் உடல் மெலிய வானாள். எப்பொழுதும் அரங்கத்தாய், அரவணையாய், அழகிய மணவாளா என்றெல்லாம் தன்மனத்திற்குள்ளேயே சொல்லிச் சொல்லி ஏக்கம் கொள்வாள். உற்றார் உறவினர்கள் இடையே சொல்லிக் கொண்டால் தன் ஒரு தலைக் காதலைக் கண்டு பரிகசிப்பார்களோ என்று அவர்களிடமும் சொல்லாமல் இருந்து விட்டாள். எப்பொழுதும் ஒரு உணர்ச்சியற்ற நிலையில் அவள் இருந்து வந்தாள்.

அன்றும் அப்படித்தான். அரங்க மாளிகையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தலைவிக்கு அவள் பின்னால் அவளுடைய அருமைத் தோழிகள் வந்து நின்றது கூடத் தெரியவில்லை. சில நாட்களாகத் தங்கள் தலைவி இவ்வாறு மயக்க நிலையில் இருந்து வருவதை அந்தத் தோழிப் பெண்கள் கண்டிருக்கிறார்கள். அதன் காரணத்தை அறிய அவர்களுக்கு மிகுந்த அவா தான். ஆயினும் தங்கள் தலைவி என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற அச்சம். இன்று தலைவியின் துயரத்திற்குக் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். அதைப்பற்றி கேட்டும் விட்டார்கள்.

தான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாகவும் அதன் விளைவு தான். தன் துயரத்திற்கு காரணம் என்றும் தலைவி சொன்னாள். அது என்ன விவரம் என்று தோழிகள் கேட்டார்கள். தலைவி சொன்னாள்:

“என் மனக்கருத்தை அறிந்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து என் நலத்திலேயே நாட்டம் கொண்ட எனதருமை தோழிகளாகிய நீங்களெல்லாம் இருந்தீர்கள். வேளைக்கு வேளை பாலும், பழமும் ஊட்டி என்னால் வளர்க்கப்பட்ட என் அருமைக்கிளிகள் தாமிருந்தன. நான் வைத்துப் பயிராக்கிய பூச்செடிகளில் பூத்த பூக்களிலிருந்த ஊறிய தேனைக்குடித்து விட்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளிருந்தன. பெண்களாகிய நம்மிடம் நடை பயின்று தோற்கும் அந்த அன்னமும் இருந்தது. நான் அந்தக் கருங்கடல் வண்ணனிடம் கொண்ட காதலைத் தெரிவித்து அவனுடைய ஆதரவைத் தேடிக்கொள்ள உங்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் என் நெஞ்சத்தை விட உண்மையான தூதுவன் வேறு யாருமில்லை என்று எண்ணி என் நெஞ்சையே தூது விடுத்தேன்” என்று சொல்லி முடித்தாள். அவள் மேலும் தொடர்ந்தாள்.

“நான், ஏன் உங்களையெல்லாம் தூது அனுப்பவில்லையென்று கேட்கிறீர்களா? நீங்களும் என்போல் பெண்கள் தாமே? உங்களை தூதாக அனுப்பினால் அவனுடைய முகச் சோதியிலே கடைக்கண் நோக்கிலே கருத்தையிழந்து என் காதலை அவனுக்குத் தெரிவிக்காமல் இருந்து விட்டால் என்ன செய்வது? என்ற ஒரு அவ நம்பிக்கை. அதுதான் உங்களை தூதாக அனுப்பாத காரணம்.

கிளியை ஏன் அனுப்பியிருக்கக் கூடாது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள் சொன்னதை மட்டுந்தான் சொல்லும் திறமை வாய்ந்தது கிளி. அதிகமாகவோ, குறைவாகவோ தலைவனின் கருத்தறிந்து பேசும் திறமை அதற்குக் கிடையாது. அதனால் நன்மைக்குப் பதில் தீமை பயந்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணத்தினால் கிளியைத் தூதராக அனுப்பவில்லை.

தூதிற்கு வண்டுகள் சிறந்தனவாயிற்றே அதை ஏன் தூதாக அனுப்பிருக்கக் கூடாது என்று கேட்பீர்கள். வண்டுகளது இயற்கை பூக்களுக்குள் சென்று ஆங்காங்குள்ள தேனை உண்டு தன்னை மறந்து திரியும் தன்மையுடையன. அரங்கனின் திருத்துளவ மாலையிலே கசியும் தேனையுண்டு அந்த மதுவுண்ட காரணத்தால் மதி மயங்கித்தான் சென்ற காரியத்தையும் மறந்து அவனையே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும். ஆதலால் அவைகளையும் நல்ல தூதாக அனுப்பத் துணியவில்லை.

இதெல்லாம் தான் போகட்டும். தூதுவிடுவதற்கு அன்னம் ஒரு சிறந்த பொருளாயிற்றே. முன்னர் தூது சென்று காரியத்தை வெற்றியுடன் முடித்திருக்கிறது என்று கதைகள் கூறுகின்றனவே. ஏன் அதை அனுப்பியிருக்கக் கூடாது என்று கேட்கிறீர்களா? நீரையும், பாலையும் தனித்தனியாகப் பிரிக்கும் சக்தி உள்ளது அன்னம் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அதேபோல் எங்கள் நட்பையும் பிரித்துவிட்டால்? அதனால் அன்னத்தையும் அனுப்பவில்லை.

ஆனால் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா? என் நெஞ்சைத் தவிர எனக்கு உற்ற துணை யாருமில்லை என்று நினைத்தேன். அந்த நம்பிக்கையில் என் நெஞ்சையே தூதாக விடுத்தேன் அரங்கத் தரவணையானிடம். ஆனால் நான் எதிர்ப்பார்த்ததற்கு நேர் விரோதமாக காரியங்கள் நடந்து விட்டன. அரங்கனிடம் தூதாகச் சென்ற என் நெஞ்சானது அவன் தந்த துளபத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி என்னிடம் வாராமல், திருமகளாரையும் அப்பரந்த மார்பின் அழகிலே, திரண்ட புயங்களின் வடிவழகிலே மயங்கி இன்புற்று தன்னையும் மறந்து, என்னையும் மறந்து அங்கேயே நின்றுவிட்டது. தோழிகளே! நான் என்ன செய்வேன். நான் உங்களையெல்லாம் நம்பாமல் என் நெஞ்சத்தையே உரிய தூதாக நம்பி அழகிய மணவாளனின் கருணையைப் பெற அவனிடம் அனுப்பி வைத்த பிழையை நினைத்து விசனப்படுகிறேன். இதுதான் நடந்த செய்தி என்று அந்தத் தலைவி தன் தோழிகளிடம் சொன்னாள்.

தன்னைத் தலைவியாகவும், அரங்கனைத் தலைவனாகவும் தான் அவனிடம் கொண்டுள்ள பக்தியை காதலாகவும் உருவகித்துக் கூறும் இந்தச் சிறப்பான அழகிய மணவாள தாசர் என்கிற பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றியுள்ள பின்வரும் பாடலில் நாம் காண்கிறோம். அப்பாடல்,

நீரிருக்க மடமங்கையீர் கிளி கடாமிருக்க மதுகரமெலா,
நிறைந்திருக்க மடவன்னமன்ன நிரையோயிருக்க வுரையாமல்யா
னிருக்கிலு மென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லையென்
றாதரத்தினொடு தூதுவிட்ட பிழையாரிடத்தரை செய்தாறுவேன்
சீரிருக்கு மறைமுடிவு தேடரிய திருவரங்கரை வணங்கியே
திருத்துழாய்தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதலின்றியே
வாரிருக்கு முலைமலர் மடந்தையுறை மார்பிலே பெரிய தோளிலே
மயங்கியின்புற முயங்கியென்னையு மறந்து தன்னை மறந்ததே.

Comments

Popular posts from this blog

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - கோமான் வெங்கடாச்சாரி

இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி