இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி

       “இராமகாதையில் ஒரு திருப்பமா?” என்று இந்த கட்டுரையின் தலைப்பைக் காணும் வாசகர்கள் அதிசயத்துடன் என்னைப் பார்த்து கேட்பது என் செவிகளில் விழத்தான் செய்கிறது. கவியாற்றல் படைத்த கம்பனது இராமகாதையில் அப்படிப்பட்ட திருப்பம் என்ன இருக்கிறது? என்றும் பலர் எண்ணலாம். அவர்களுக்கு இந்நூலை எழுத முற்பட்ட நான் விடையளிக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்பதை நன்கு உணராமலில்லை.

ஆம். இராமகாதையில் பல திருப்பங்கள் இருப்பதை, நாம் அதை ஊன்றிக் கவனிக்குமளவில் அறிந்துகொள்ள இயலும். அவைகளுக்கு பல சான்றுகள் உள. அவைகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு கூர்ந்து நோக்குவோம்.

முதலாவதாக தசரத சக்கரவர்த்தியால் தீர்மானிக்கப்பட்டு மறுநாள் காலை நடக்கவிருந்த இராம பட்டாபிஷேகம் அதற்கு முதல் நாள் இரவே கூனியின் சூழ்ச்சியால் நிறைவேறாமல் நின்றுவிடுவதை ஒரு திருப்பம் என்றே கொள்ளலாம். தசரதனின் திட்டப்படி இராம பட்டாபிஷேகம் அன்று நடந்திருக்குமானால் இராமன்  காட்டிற்குச் செல்வதோ, அங்கு சானகியை பிரிய நேரிடுவதோ, அதன் நிமித்தம் இராவணனை அவனுடைய குலத்தோடு வேரறுப்பதோ நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும்.

இராவணனால் தாங்கள் படும் துன்பங்களைத் துடைத்தருள வேண்டுமென்று பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த அந்தப் பரமனிடம் தேவர்கள் சென்று முறையிட்ட சமயம், அந்தப் பரமன் அவர்களுக்கு காட்சியளித்து, அவர்களை அஞ்சாமலிருக்கச் சொல்லி தான் கூடிய விரைவில் அந்தக் கொடியவனான இராவணனைக் கொல்வதற்காக அயோத்தி அரசனாகிய தசரதனின் மகனாக அவனியில் வந்து அவதாரம் செய்யப் போவதாகவும் சொல்லி அவர்களைத் தேற்றி அனுப்பினான். மேற்கூறியவாறு கூனியின் குறுக்கீடு இல்லாமல் இராம பட்டாபிஷேகம் நடந்திருந்தால் அந்தப் பரந்தாமனின் வாக்கு பொய்த்திருக்குமல்லவா? அதனால் அங்கே கூனியின் உருவத்தில் ஒரு திருப்பம் வேண்டியிருந்தது.

ஆனால், இந்தத் திருப்பத்தை காட்டிலும் வேறொரு அதிசயத்தக்க திருப்பத்தையும் வான்மீகி செய்திருக்கலாம். இராமனிடத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் மிகுந்த அன்பினால் கைகேயியின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல் அந்தத் தசரதன் இராமனின் முடிசூட்டு விழாவை நடத்தி வைப்பதில் முனைந்து நின்றிருப்பானேயாகில் அதை ஒரு சிறந்த திருப்பமாக கொண்டிருக்கலாம். ஆனால், அவ்வாறெல்லாம் நடக்கவில்லை. இராமகாதை தங்கு தடையின்றி தன் வழியே திட்டமிட்டபடி சென்று கொண்டு இருக்கிறது. 

இதேபோல், இராமன் தன் தாயின் கொடுமையால் கானகம் செல்ல நேர்ந்ததை அறிந்த பரதன் பதறிப்போய் தன் அண்ணன் சென்ற வழியே சென்று அவனைச் சித்திரகூடத்தில் கண்டு அயோத்திக்கு திரும்பி வருமாறு கேட்டுக்கொண்ட சமயம் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இராமன் அயோத்திக்கு திரும்பி வந்துவிட்டான் என்று ஒரு திருப்பத்தை இராமகாதையில் செருகி இருக்கலாம். ஆனால் அதுவும் கதைக்குப் பொருத்தமான ஒரு திருப்பமாக அமையாது என்பதை நாம் நன்கு அறிவோம்.

பஞ்சவடியில் இராமன், இலக்குவன், சீதை ஆகிய மூவரும் தங்கியிருந்த சமயம் சூர்ப்பணகை அங்கு வருகிறாள். அவளுடைய அரக்கத் தன்மைக்கு ஏற்றவாறு இராமன் பால் ஒருதலைக்காதல் கொள்கிறாள். இப்பிறவியில் பிற மாதர் எவரையும் தன் சிந்தையாலும் தொட விரும்பாத தூயோனாகிய அந்தத் தாசரதி அவளை ஏறிட்டுப் பார்க்கவும் விரும்பினாரில்லை. அவளுடைய பலாத்காரச் செய்கைகளைக் கண்ட இளையவன் அவளிடம் கடுஞ்சினங் கொண்டு அவள் பால் கடுகிச் சென்று அவளது அவயவங்கள் பலவற்றை அறுத்து அவளை அங்கஹீனம் செய்தான். இந்த நிகழ்ச்சியே இராவணன் சீதையை இலங்கைக்கு தூக்கிச் செல்வதற்கு காரணமாக அமைந்தது. இதையும் ஒரு திருப்பம் என்று சிலர் எண்ணுவதற்கு இடமிருப்பினும் இதையும் ஒரு பொருத்தமான திருப்பமாகக் கொள்வதற்கு நம் மனம் இசையவில்லை.

இதேபோன்று இலங்கைக்குச் சென்ற அஞ்சனைச் சிறுவன் அங்கே அசோக வனத்தில் மிதிலைச் செல்வியாகிய சானகியைக் கண்டு அவளிடம் தான் இன்னானென்பதை உணர்த்தி விட்டு, அவளைத் தான் தூக்கிச் சென்று ஒரு நொடியில் இராமனின் பால் கொண்டு விடுவதாகக் கூறிய பொழுது அதற்கு அந்தச் சீதை உடன்பட்டிருப்பாளேயாகில் அத்துடன் இராமகாதை முடிவடைந்திருக்கக்கூடும். இதையும் ஒரு திருப்பமாகக் கொள்ள நாம் முற்பட்டால், அது ஒரு பொருத்தமான திருப்பமாகாது என்று நிச்சயமாகக் கூறிவிடலாம்.

மேற்கூறிய திருப்பங்களைப்போல் பல திருப்பங்களை இராமகாதையில் பொருத்தி அந்த வரலாற்று ஏட்டையே மிகச் சுலபமாக கூடிய விரைவில் கூறி முடித்திருக்கலாம். ஆனால் அவைகளையெல்லாம் சிறந்த பொருத்தமான திருப்பங்களென்று நாம் கொள்வது முறையாகாது.

அங்ஙனமாயின், இவைகள் எல்லாவற்றிலும் சிறந்த பொருத்தமான திருப்பம் வேறென்ன இருக்கிறது அந்த இராமகாதையில் என்று வாசகர்கள் யாவரும் ஒருமித்துக் கேட்பதை நாம் அறிகிறோம். அதை இங்கு இந்த நூலில் சிறந்த முறையில் இனி  விவரிப்பதுதான் நாம் செய்யும் ஒரு முக்கியப் பணியாகும்.

இராமனுக்கும் இலங்கேஸ்வரனுக்கும் நடந்த முதல் நாள் போர். அறத்திற்கும் அநீதிக்கும் இடையே நடந்த போர் என்றும் அதைக் குறிப்பிடலாம். என்றும் போல் அன்றும் நீதி வென்றது. அநீதி தோற்றது. இராமவதார காலத்தில்-அறம் வளர்த்த அயோத்தி அண்ணலின் காலத்தில் அறப்போருக்குத்தான் இடம் உண்டு. இக்காலத்தைப் போல் எதிர்பாராத சமயங்களில், எதிர்பாராத விதத்தில் ஒரு நாட்டின் மேல் மற்றொரு நாடு குண்டுமாரி பொழியும் கொடும் காலம் அல்ல அது. தன்னுடன் வீரப்போர் புரிந்த இராவணன் படை வலியிழந்து தன்னந்தனியனாய் தகவிலாமல் நிற்பதைக் கண்ட இராமன் அவனை மேலும் துன்புறுத்தல் அறத்தின் பாலதன்று என்று எண்ணியவனாய், அவனை, “இன்று போய் நாளை வா” என்று சொல்லி அனுப்புகிறான்.

அடுத்த தன் அவதாரமாகிய கிருஷ்ணாவதாரத்தில் தான் செய்யவிருக்கும் சூழ்ச்சிகளுக்கும், மாயைகளுக்கும் முன்னதாகவே பரிகாரம் தேடி வைக்கும் வகையில் தன் எதிரி வலியிழந்து நிற்கும் தருவாயில் அவனை அழிக்காமல் அவனிடம் பரிவு காட்டி அறப்போர் வழி நின்று அவனை “இன்று போய் நாளை வா” என்று சொன்ன பெருமிதத்தை அயோத்தி வள்ளலாகிய இராமனிடத்தேயன்றி வேறு யாரிடத்தில் காணமுடியும்?

இத்தருவாயில் எனக்கு ஒரு சம்பவம் பற்றிய நினைவு வருகிறது. ஆங்கிலேயர் அரசு புரிந்து வந்த காலம் அது. நான் ஐந்தாவது வகுப்பில் படித்து வந்த சமயம் என்று எண்ணுகிறேன். இந்து தேச சரித்திரம் என்ற பெயரில் ஆங்கிலேயரின் புகழ்பாடும் சரித்திர ஏடுகள் எனக்குப் பாட புத்தக வடிவில் அமைந்திருந்தன. அதில் பிரிட்டிஷ் ஆட்சியை நம் பாரத நாட்டில் நிலை நிறுத்திய இராபர்ட் கிளைவ் என்பவனின் வரலாறுகளும், அதே சமயம், பிரெஞ்சு ஆதிக்கத்தை நம் நாட்டில் நிலைநாட்ட அரும்பெரும் பாடுபட்ட பிரெஞ்சுக்கார ‘டூப்ளே’ என்பவனின் வரலாறுகளும் இணைந்து காணப்படும். நம்மைப் பொறுத்த வரையில் மேற்படி இரண்டு நபர்களுமே அயோக்கியர்கள் தான். இருவருமே நாடு பிடிக்கும் வெறிகொண்டவர்கள்தான். அவர்கள் இருவருமே வியாபாரம் என்ற பெயரால் நம் நாட்டில் புரிந்த அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் வரையறை கூறமுடியாது. இந்த உண்மை இப்பொழுது எனக்குத் தெரிகிறது. ஆனால் என் சிறுபிராயத்தில் மேற்சொன்னபடி ஐந்தாவது வகுப்பில் சரித்திர ஏடுகளைப் படிக்கும் சமயம் ராபர்ட்கிளைவ் டூப்ளேயை தோல்வியுறச் செய்தான், கிளைவ் வெற்றி பெற்றான் என்று பாடம் வரும் பொழுதெல்லாம் என் கிட்டிய உறவினன் எவனோ ஒருவன் வெற்றி பெற்றதைப் போன்ற மனஉணர்ச்சி என்னுள் ஓங்கி நிற்கும். கிளைவ் தோல்வியுற்றான் என்று பாடம் வரும்  பொழுதெல்லாம் என் உறவினன் எவனோ தோல்வியுற்ற மாதிரி ஒரு அவல உணர்வு ஏற்படும். இந்த என்னுடைய மன நிகழ்ச்சிக்குக் காரணம் மேற்படி சரித்திரத்தை எழுதிய சரித்திர ஆசிரியர்களின் எழுத்துத் திறமை என்றுதான் கூற வேண்டும். அத்தனைத் திறமையாக எழுதும் ஆற்றலை மேற்படி சரித்திர ஆசிரியர்கள் பெற்றிருந்தார்கள்.

இக்காலத்திலேயே இத்தகைய திறமை நம் சரித்திர ஆசிரியர்களுக்கு இருந்ததென்றால் இராமகாதையை எழுதிய கம்பனுக்கு எத்தகைய திறமை இருந்திருக்க வேண்டும்? ஆம். அவனுக்குத் திறமை இருக்கத்தான் செய்தது. அவன் தன் திறமையை தக்க சமயத்தில் தகுந்த முறையில் தனக்கேயுள்ள பாணியில் தயவு தாட்சணியமின்றி எடுத்துக்காட்டத் தயங்கினானில்லை. இராபர்ட் கிளைவ் தோற்றுவிட்டான் என்று படிக்கும் சமயங்களில் என் மனவெழுச்சி எப்படியிருந்ததென்று நான் முன்னர் கூறினேன் அல்லவா? அத்தகைய சூழ்நிலையை, மனவெழுச்சியை தனது படைப்பாகிய இராமகாதையில் முதல்நாள் போரில் இராவணன் இராமனிடம் தோற்று நின்ற நிலையை நமக்கு இராவணனிடம் இரக்கம் உண்டாகும் வகையில் படைக்கிறான் கம்பன் தன் கவிதையை.

இராவணன் போரில் தோற்றுவிட்டான் என்று சொன்னால் மூவுலகங்களுமே ஏற்றிராது. காரணம் அவன் தனது வாழ்க்கையில் தோல்வியைக் கண்டறியாதவன். கம்பனும் அதைப்பற்றி தன் சிந்தனைக்கு இடம் கொடுக்கிறான். அவன் உற்ற தோல்விக்கு இரங்குகின்றான். அவன் இதுகாறும் பெற்றிருந்த பெரும் நலன்களையும் இன்று அவன் நிற்கும் அவனது அவல நில¬யையும் நமக்குத் தெள்ளத் தெளியக்காட்டி அந்தக் கொடுங்கோலனின் பால் நம்மையும் இரக்கம் கொள்ளும்படி செய்கிறான். எங்கே? இதோ நாமும் கம்பன் வழி சென்று அதைக் காண்போம்.

இலங்கேஸ்வரன் தேவாசுரர்களையெல்லாம் வெற்றி கண்டு அந்த வெற்றிக் களிப்பினால் எட்டு திசைகளிலும் சென்று எண்டிசைக் காவலர்களையும் வெற்றி காண எண்ணினான். எண்ணியவாறே கீழ்த்திசையாகிய கிழக்கு திசைக்குச் சென்றான். கிழக்கு திசையில் தாங்கி நின்ற யானை இராவணனைத் தாக்க முற்பட்டது. என்ன ஆச்சரியம்! அத்தெய்வமாக் களிறு தேவாதி தேவர்களையும் வெற்றிகண்ட இலங்காதிபதியிடம் தோற்று வலியிழந்து ஓடிவிட்டது. போரில் தனது வலிய தந்தத்தையும் இழந்து ஓடியது அந்த வாரணம். அவ்வாறென்றால் இராவணனின் மார்பின் வலிமையை நாம் என்னவென்று கூறுவது?

மற்றொரு சமயம், குபேரனிடமிருந்து பறித்து வந்த புட்பக விமானத்தின் மேலேறி வடதிசையை நோக்கிச் சென்றான், பெருமிதத்துடன் இராவணன். திடீரென்று விமானம் தடைபட்டு நின்றது. உற்று நோக்கினான் தசமுகன். கயிலேசன் வாழும் கயிலைதான் இத்தடைக்குக் காரணம் என்பதை அறிந்தான். வெகுண்டெழுந்தான். அவனுடைய கர்வம் அவன் கண்களை மறைத்தன. செயற்குரிய செய்கையா என்பதையும் எண்ணிப்பாராமல் ஈசன் வாழும் கயிலை வெற்பை தனது இருபது தோள்களாலும் எடுத்து அப்புறப்படுத்த முயன்றான். இவனது இச்செய்கையைக் கண்டு இமவான் நடுங்கினான். இமையவர் நடுங்கினர். இமவான் மகளாகிய மலைமகளும் நடுங்கினாள். ஏதோ விபரீதம் நேர்ந்து விட்டதென்றெண்ணி பார்வதி தன்பதியாகிய கங்காதரனைக் கட்டிக் கொண்டார். பார்த்தான் பார்வதிநாதன். இராவணனின் செய்கை மங்கை பாகனுக்கு ஏளனமாகப்பட்டது. தனது கட்டை விரலால் கயிலையை அழுத்தினான். தசமுகனின் பத்து தலைகளும் கயிலைக்குக் கீழ் அகப்பட்டுத் துன்புற்றன. அகந்தை ஒழிந்தது. ஆணவம் அகன்றது. இன்புறும் சாமகானத்தினால் ஈசனைத் துதிக்க முற்பட்டான். உமையவள் கணவன் உகந்தான் கானத்தை. ஊரைப்பார்த்து ஓடிவிட்டான் இராவணன். ஈசனின் ஆற்றலுக்கு ஆற்றாது தோற்றுச் சென்றாலும் அவனது கயிலை எடுத்த வீரத்தை இன்றும் புராணங்கள் மிக மேன்மையாக பாடத்தானே செய்கின்றன.

கயிலைநாதனை தன் திறலொழிந்த காலத்து சாமகீதம் பாடி அவனை மகிழ்வித்து இராவணன் தப்பி வந்த பெருமை மிகுந்த சோக காவியத்தை கவிச்சக்கரவர்த்தி எவ்வளவு பரிபக்குவத்துடன் நமக்கு ஓவியமாக தீட்டிக் கொடுக்கிறான்! அவனது பாடலைப் படிக்கும்பொழுது நாமும் கம்பனோடு ஒன்றிப்போய் விடுகிறோம். இத்தனை மந்திர சக்தியுள்ள அந்தப் பாடல் கும்பகருணன் வதைப்படலத்தில் முதல் பாடலாக (ஏன்? அந்தப் படலத்திற்கு தோற்றுவாயாக என்று கூட சொல்லலாம்) அமைந்துள்ளது. அந்தப் பாடலைப் பார்ப்போம்.

“வாரணம் பொருத மார்பும் வரையினை யெடுத்ததோளும்
நாரத முனிவற்கேற்ப நயம்படவுரைத்த நாவும்
தாரணி மவுலிபத்துஞ் சங்கரன் கொடுத்தவாளும்
வீரமுங்களத்தே போக்கி வெறுங்கையே மீண்டு போனான்.”

இராவணன் எத்தனைப் படித்தவனாயிருந்தாலும், அநீதி செய்பவன், பிறர் தாரத்தை பறித்துக்கொண்டு போனவன் என்று நமக்குத் தெரிந்தும் கம்பனின் மேற்படி பாடலை நாம் படித்தவுடன் அவன்பால் நமக்கு உண்மையில் இரக்கம் உண்டாகிறதல்லவா? இந்து தேச சரித்திரத்தில் ராபர்ட்கிளைவிடம் எனக்குப் பரிவு உண்டாகும்படி எழுதிய சரித்திர நூலாசிரியரையும் ஒருபடி மிஞ்சிப் போய்விட்டான் அல்லவா? கவிச்சக்கரவர்த்திக் கம்பன்.

இராவணன் இராமனிடம் தோற்று நின்ற பரிதாபக் காட்சியை நமக்குப் படம் பிடித்துக் காட்டிய கம்பன் அடுத்தபடியாக, தசமுகன் ஊர் திரும்பும் காட்சியை நமக்கு விளக்கத் தவறினானில்லை. எவராலும் வெல்லமுடியாத வீரத்தைக் கொண்ட வானவர்களையும் தன் வலிமையினால் வெற்றி கண்டு அவர்களைத் தன்னிடம் ஏவல் புரிய பணித்து மூவுலகங்களையும் ஆண்டு வருபவனாகிய இராவணன் இப்பொழுது போர்க்களத்தில் இராமன் எதிரில் தன் படைபலமிழந்து,  தோள் வலியிழந்து; இலங்கை நோக்கித் திரும்பிச் செல்லும் காட்சியைக் கம்பன், “தொடர்ந்து போம் பழியினோடுந் தூக்கிய கரங்களோடும் நடந்துபோய் நகரம் புக்கான்” என்று அந்த அவலக் காட்சியை நமக்குத் தெள்ளத் தெளிய சித்தரித்துக் காட்டுகிறான். இதுகாறும் நிகழ்ந்த போர்கள் எவற்றினும் வெற்றி வாகையே சூடி வந்திருந்த இராவணன் இன்று சிறு மனிதர் இருவரிடத்தில் தோல்வியுற்று திரும்பிச் செல்லும் அவல நிலையைத்தான் “தொடர்ந்து போம் பழியினோடும்” என்று கூறுகிறான். தனக்கு இருபது கரங்கள் இருந்தும் இரண்டே கரங்களையுடைய சிறு மனிதர்களிடம் தோற்று திரும்பும் இராவணனைக் கண்ட எவர்தான் “தூக்கியக் கரங்களோடும் நடந்துபோய் நகரம் புக்கான்” என்று அந்த அவலக் காட்சியை நமக்குத் தெள்ளத் தெளிய சித்தரித்து காட்டுகிறான். இதுகாறும் நிகழ்ந்த போர்கள் எவற்றினும் வெற்றி வாகையே சூடி வந்திருந்த இராவணன் இன்று சிறு மனிதர் இருவரிடத்தில் தோல்வியுற்று திரும்பிச் செல்லும் அவல நிலைதான் “தொடர்ந்து போம் பழியினோடும்” என்று கூறுகிறான். தனக்கு இருபது கரங்கள் இருந்தும் இரண்டே கரங்களையுடைய சிறு மனிதர்களிடம் தோற்றுத் திரும்பும் இராவணனைக் கண்ட எவர்தான் “தூக்கியக் கரங்களோடும்” என்று சொல்ல மாட்டார்கள். போர்க்களத்திற்கு வரும் பொழுது நால்வகை சேனைகளுடன் அவன் வந்திருக்க வேண்டுமென்பதையும், முதல் நாள் போரிலே அவை யாவற்றையும் இழந்து, போர்க்களத்திலிருந்தும் திரும்பினான் என்பதையும் சொல்லாமல் சொல்கிறான் கம்பன், “நடந்து போய் நகரம் புக்கான்” என்ற சொற்றொடரில். போக்களத்தினின்றும் திரும்பி தன் நகருக்குள் வந்து சேருவதற்கு ஒரு தேர் கூட தன் வசமில்லாது நின்ற அந்த இராவணனின் பரிதாப நிலை நம்மையும் உண்மையிலேயே அவன் பால் பரிவு கொள்ளத்தான் செய்கிறது. இதுவும் கவி கம்பனின் கவித்திறன்தான்.

இவ்வாறு பலமிழந்து தன் பகைவர்களிடம் தோற்றுத் திரும்பி வரும் அந்த தசமுகனின் தன்மையை நமக்கு மேலும் விளக்கிக் காட்டுகிறான் தன் அடுத்த பாடலின் மூலம் கம்பன். வெற்றி கண்ட எவரும் தலை நிமிர்ந்து நடப்பதும், தோல்வியுற்ற எவரும் சிரம் குனிந்து நடப்பதும் உலக இயல்பு.  அது மட்டுமல்ல. வறுமையின் வாடையைக் கண்டறியாத ஒரு செல்வச் சீமான் விதிவசத்தினால் வறுமையுற நேர்ந்து அவர் விதிவழி செல்லுங்கால் அவரது பார்வை அவரைச் சூழ்ந்துள்ள எந்தப் பொருள் மீதும் படாது. அவரை அறியாமலேயே அவரது மன உணர்ச்சி அவரது சிரத்தை கீழே குனியச் செய்துவிடும். இது உலக இயல்பு. உலகமென்னும் பள்ளியில் நன்கு கற்றுணர்ந்து அதில் முதன்மையாகத் தேறியவன் கம்பன். அவன் அந்த இயல்பிற்கு ஏற்பட இராவணன் போர்க்களத்தினின்றும் திரும்பி செல்லுங்காட்சிக்கு மேலும் வண்ணம் தீட்டுகிறான் “மாதிரம் எவையும் நோக்கான்” என்னும் பாடலில். இதற்கு முன்னரெல்லாம் இலங்கேஸ்வரனுடைய பத்து தலைகளும், பத்து திக்குகளிலும் அவனை அறியாமலேயே பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தனவாம். இப்பொழுதோ அவைகள் அந்த திக்குகளை ஏறிட்டும் பார்க்கவில்லையாம். அது மட்டும்தானா? வளம் பொருந்திய கனகமயமான இலங்கை அவன் கண்களின் முன்னால்தான் நின்றது. அவனால் காதலிக்கப்பட்டும், அவன் பால் என்றும் ஆராத காதல் கொண்ட காதற் கிழத்தியர் பலர் அவனை நோக்கி அவனது அயர்வு போக்க அவன் பால் ஓடி வந்தனர். தங்கள் அரசன் போர்க்களம் சென்றிருக்கிறானே; அவனிடமிருந்து எந்தச் சமயத்தில் தங்களைப் போர்க்களம் வருமாறு ஆணை பிறக்குமோ என்று காத்திருந்த கடற் பரப்பு போன்ற சேனையும் அங்கிருக்கத்தான் செய்தது. இவை எவற்றையும் இலங்காதிபன் ஏறிட்டுக்கூட பார்க்கவில்லையாம். அவனது சிரங்கள் அவமானத்தினால் கவிழ்ந்திருந்த தன்மையை இவ்வண்ணம் நமக்கு சித்தரித்துக் காட்டுகிறான் கம்பன். 

ஆமாம். இராவணன் இவை எவற்றையுமே பார்க்காமல் சென்றான் என்பது எப்படிப் பொருந்தும்? எதையாவது ஒன்றை நோக்கியவாறுதானே சென்றிருக்கவேண்டும். அப்படி நோக்காமல் கண்களை மூடிக்கொண்டா சென்றான். இந்தக் கேள்விக்கும் தகுந்த விடையைத் தயாராக வைத்திருக்கிறான் கவிச் சக்கரவர்த்தி, “பூதலம் என்னும் மங்கை தன்னையே நோக்கிப் புக்கான்” என்னும் சொற்றொடரில். ஆணவம் மனிதனை அழித்துவிடும். ஆணவம் கொண்டோர் ஆண்டவனை அடைய முடியாது. ஆணவத்தை வென்றவன் அகிலத்தையே வென்றவனாவான் என்பனவெல்லாம் ஆன்றோர் வாக்கு. ஆணவம் கொண்ட எவனும் தலைநிமிர்ந்து நிற்பான். சிற்றறிவு உடையோர் பாலிடந்தான் ஆணவம் அடைக்கலம் புகும். புல்லறிவு உடையோர் தான் பூரித்து நிற்பர். இந்த உண்மை நாம் என்றும் காணும் காட்சியாகும். இடும்பைகூர் நம் வயிற்றைக் காக்க அரிசியைத்தான் நாம் அடைக்கலப் பொருளாகக் கொள்கிறோம். இந்த அரிசியின் உற்பத்தியைக் கவனிப்போம். வயற்காட்டிலே தேவையான சில நெற்களைத் தூவுகிறோம். அவை சில நாட்களில் வேரூன்றி சிறுபுட்களாக வயற்காட்டிலே காட்சியளிக்கின்றன. நாளாக நாளாக அவை செழுமையுற்று ஒரு முழக்கதிர்களாக தலைநிமிர்ந்து நிற்கின்றன. அப்பொழுது அவைகளில் நெற்கதிர்கள் காணப்படுவதில்லை. மேலும் சில நாட்கள் கழித்து அதே நெற்பயிர்களைப் பார்ப்போமாகில் அவைகளில் நெற்கதிர்கள் தோன்றி அதன் பளுவால் நெற்பயிர்கள் சற்று வளைந்து நிற்பதைக் காணலாம். அதே நெற்பயிற்கள் மேலும் அறுவடைக்குத் தயாராக நிற்கும் காலம் வரும்பொழுது அவை நன்றாகவே தரையை நோக்கித் தாழ்ந்திருப்பதை நாம் நம் கண்கூடாகக் காணலாம். அரைகுறை அறிவு படைத்தவனை நெற்கதிர்கள் இல்லாத நெற்பயிருக்கும், முதிர்ந்த அறிவுடையவர்களை முற்றிய நெற்கதிர்களைக் கொண்ட நெற்பயிர்களுக்கும் ஒப்பிட்டுக் கூறுவர் சான்றோர். இவ்விடத்தும் இந்த உதாரணம் சற்று எடுத்துக்காட்டுவதற்கு இயல்வதாகவேயுள்ளது. எப்படியென்றால் போருக்குச் சென்ற இராவணன் தன் புயவலியையும், படைபலத்தையும் பழைய வெற்றிகளையும் எண்ணி அவைகளின் மேல் நம்பிக்கை வைத்து ஆணவத்துடன் செருக்களம் சென்றிருந்தான். முதலில் கண்டவாறு அங்கே அவன் யாவற்றையுமிழந்து, அதனால் ஆணவம் தொலைந்து, இப்பொழுது தன் மனநிலையில் ¢மாற்றங்கண்டு திரும்பி வருகிறான். அதனால் அவன் பூமி என்னும் மாதையே நோக்கியவாறு திரும்பி வருகிறான் என்னும் கருத்து மிகவும் போற்றத்தக்கதாகவே அமைகிறது. 

  “மாதிரமெவையு நோக்கான் வளநகர் நோக்கான் வந்த
காதலர் தம்மை நோக்கான் கடற்பெருஞ்சேனை நோக்கான்
தாதவிழ் கூந்தன் மாதர் தனித்தனி நோக்கத்தானப்
பூதலமென்னு நங்கை தன்னையே நோக்கி புக்கான்”    

இவ்வாறு போர்க்களத்தினின்றும் நகரந் திரும்பிய இராவணனை அவனுடைய காதற் கிழத்தியரும், கவின்மிகு மக்களும் எதிர்கொண்டு வந்து வரவேற்றார்கள். ஆனால், அவனோ அவை எதையும் ஏறிட்டும் பார்க்கவில்லை. ஆனால், அந்த அழகிய அப்பொழுதுதான் அலர்ந்த செந்தாமரை மலர் போன்ற முகத்துடைய அந்தக் காதலிகள் அவனை நோக்கி சிரிக்கும் போதெல்லாம் அவனுக்கு அந்த முகங்கள் வாட்களை ஒத்தனவாம். அவர்களுடன் வந்திருந்த சிறார்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு இராகவனின் அம்புகள் போன்று இருந்தனவாம். அவனது துயரநிலை, அதனது எல்லையைக் கடந்து நின்ற தன்மையை இவ்வாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறான் கம்பன். இராவணனது இந்த நிலை அங்கு நின்ற அவனது மந்திரிகள் தந்திரிகள், சுற்றத்தார், காதலிகள் இவர்கள் யாவரையும் வியப்படையச் செய்துவிட்டது. இலங்கேசன் இதற்கு முன்னர் எந்தச் சமயத்திலும் இவ்வாறு இருந்ததை அவர்கள் கண்டதில்லை. அதனால் அவர்கள் இயந்திரப் பதுமைகள் போல் வாயடைத்து திகைப்புற்று நின்று கொண்டிருந்தனர். அவ்வமயம் இராவணன் போர்க்களத்திற்குச் சென்று தோற்றுத் திரும்பி வந்த காட்சியை, நெற்றியிலே அடிபட்டு இரத்தம் சிந்தத் திரும்பி வந்து தன் இருப்பிடத்தை அடையும் ஒரு யானையைப் போன்று விளங்கினான் என்று கம்பன் நமக்குக் காட்டுகிறான். அவனது சுற்றத்தார், மந்திரிகள் மற்றும் யாவரும் அவன் என்ன சொல்வானோ என்று ஏங்கி அவனது அவல நிலையைக் கண்டு அவனிடம் எதையும் வலியச் சென்று கேளாமல் வாயடைத்து நின்ற தருணத்தில் அந்த இராவணனோ அவர்கள் யாரிடத்திலும் ஒன்றும் பேசாமல் ஒரு யானை தன் இருப்பிடத்தைச் சென்று அடையுமாறு போல் தன் கோயிலை அடைந்தான் என்று கூறும் கவியின் கூற்று இங்கு நோக்கற்பாலது.

இவ்வாறு தன் இருப்பிடத்தை அடைந்த இலங்கேசன் அங்கு நின்றிருந்த தன் பணியாளனைக் கூப்பிட்டுத் தம் தூதர்களை உடனே அவ்விடம் அழைத்து வரும்படி பணித்தான். அவனும் அவ்வாறே செய்தான். 

மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்ற இப்பெயர்களை உடைய பல தூதர்கள் அவ்விடம் வந்து சேர்ந்தனர். இராவணன் அவர்களை நோக்கி உடனே அவ்விடத்தினின்றும் போய் எட்டு திக்குகளுக்கும் சென்று அங்கங்குள்ள அரக்கர் சேனைகளை உடன் அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

இப்பொழுது இராவணனின் மனநிலையை நமக்குக் காட்டுகிறான் கம்பன். ஒரு பெரும் யானை அது யாவருக்கும் அடங்காதது. தன் போக்கில் போய்க் கொண்டிருந்த அதை ஒரு தினம் எதிர்பாராத விதத்தில் ஒரு சில வேடர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களிடமிருந்த வேலாலும் சூலாலும் அதைத் தாக்க முற்பட்டார்கள். அந்த ஆயுதங்களினால் துளைக்கப்பட்டு தோல்வியுற்று ஓடிய அந்த யானை தனது இருப்பிடத்திற்குச் சென்று சேர்ந்து, அந்தக் காயங்களினால் அடைந்த துன்பத்தை எப்படி ஆற்றிக்கொள்ளுமோ அவ்வாறே இராவணனும், தான் இராமனிடம் அடைந்த தோல்வியை மறப்பதற்காக தனது படுக்கையைச் சென்றடைந்தான் என்று கவி கூறிச் செல்லும் விதம் நம்மை, அந்த இராவணன் பால் மேலும் இரக்கம் கொள்ளத்தானே செய்கிறது.

தன் தங்கையாகிய சூர்ப்பணகையின் மூலம் சீதையின் சிறப்புகளை கேட்டறிந்த இராவணனின் மனம் அன்றே அந்தச் சீதையின் அழகில் பறிபோய் விட்டதையும், அப்பொழுது முதலே இராவணன் சீதையைத் தன் இதயத்தில் குடிபுகச் செய்துவிட்டான் என்பதையும் நாம் நன்கறிவோம். அவனுடைய மனதில் சீதையைத் தவிர வேறு எதற்குமே இடந்தரவில்லை. அவன் உள்ளக் கோயிலில் சீதை என்றும் உறைந்து கொண்டிருந்தாள் என்றே சொல்லாம். அன்று காலை போர்க்களத்திற்குச் சென்று சேரும்வரை அவனது உள்ளம் சானகியைத் தவிர வேறு எவருக்குமே இருக்க இடமளிக்காமல் இருந்ததாம். இராமனின் பேராற்றலின் முன் தோற்று, தன் நகரத்திற்குத் திரும்பும் காலை அவனது உள்ளத்தில், அதாவது சீதைக்கு மட்டுமே வாழ இடம் கொடுத்திருந்த உள்ளத்தில் வேறொன்றும் குடிபுகுந்துவிட்டதாம். அது என்ன? அதுதான் நாணம். பகைவனிடம் தோற்று வெறுங்கையனாய் திரும்பிவர நேரிட்டதின் விளைவாகத் தோன்றிய நாணம். அந்த நாணம் என்ற பொருள் அவன் உள்ளத்தில் குடியேறியவுடன் ஏற்கனவே மனதில் குடிகொண்டிருந்த அந்தச் சீதையின் நினைவை அந்த உள்ளத்தினின்றும் ஓடச் செய்து விட்டதாம். நாணம் என்ற பொருள் குடியேறி அவன் உள்ளமெங்கும் நிரம்பியதால் மானம் என்ற பொருளை ஒவ்வொரு நிமிடமும் பெருமூச்சுடன் கூடிய சொற்களால் உமிழ்ந்து கொண்டு இருந்தானாம். தோல்வியடைந்து காணப்பட்ட அவனுடைய மானம் நிறைந்த உள்ளமாகிய கோயிலில் இதுகாறும் சீதை என்ற ஒரு பொருளுக்கு மட்டுமே இடம் கொடுத்திருந்தான். ஆனால், இப்பொழுதோ மானம் பறிபோய் நாணம் என்ற பொருள் அந்த உள்ளத்தில் குடியேறி உளம் எங்கும் நிறைந்து நின்றுவிட்டதால், சீதையையும் மறந்து தன்மானம் போய்விட்டதற்காக சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தான், அந்த இலங்கேசன்.

    “பண்ணிறை பவளச் செவ்வாய்ப் பைந்தொழச்சீதையென்னும்
    பெண்ணிறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்க்
    கண்ணிறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற
    உண்ணிறை மானந்தன்னை யுமிழ்ந்தெரியுயிர்ப்பதானான்”.

இந்த நிலைமையில் அவன் தனது புண்பட்ட நெஞ்சத்துடன் புலம்பிக் கொண்டிருந்த அந்த வேளையில் அவன் கண்முன்னால் பல காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவெடுத்து அவன் மனதை புண்படச் செய்தன. முதல் முதலாக அவன் கண் முன்னால் வானவர்கள் வந்து நின்றார்கள். என்ன ஆச்சரியம்! அவர்கள் முகங்களில் இத்தனைக் களிப்பை இதுவரை அவன் கண்டதில்லையே. ஆஹா! அவர்கள் களிப்பில் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவதாகவே இராவணனுக்குத் தோன்றியது. தன்னால் தோற்கடிக்கப்பட்டு தனக்கு இதுகாறும் குற்றேவல் செய்து வரும் அந்த தேவர்களா தன்னைப் பார்த்து இவ்வாறு ஏளனம் செய்வது? வேறு சமயமாயிருந்தால் இதுவரை அவர்களை விட்டு வைத்திருப்பனா அவன்? ஆனால் அவ்வாறு அந்தத் தேவர்கள் தன்னைக் கண்டு நகைப்பதை அவன் அப்பொழுது சிறிதும் பாராட்டவில்லை. அந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி. இந்தப் பரந்த உலகில் உயிர்வாழும் அத்தனை பேர்களும் அவன் கண்களின் முன்வந்து காட்சியளித்தார்கள். இதுகாறும் அவன் புரிந்து வந்த வீரதீர செயல்கள் இப்பொழுது இராமபாணத்தின் முன் என்ன ஆயிற்று என்று தன்னைப் பார்த்து நகையாடுவது போல் அவனுக்குத் தோன்றியது. ஒருகணந்தான். அதைப் பற்றியும் அவன் சிறிதளவும் கவலைப்படவில்லை.

இந்தக் காட்சியும் மறைகிறது. சிறந்த மனிதர்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்த தன்னுடைய வயிரத் தோள்களால் அந்த இராவணன் எத்தனையோ பகைவர்களை வென்று கொன்று அழித்திருக்கிறான். அவனிடம் அவனது ஆற்றலுக்கு எதிர்நிற்க முடியாமல் ஓடி ஒளிந்த பகைவர்களும் அநேகர் உண்டு. அந்தப் பகைவர்களெல்லாம் இச்சமயம் தன்னுடைய அவலநிலைமையைக் கண்டு தன் பால் இரக்கம் காட்டும் வகையில் தன்னை எள்ளி நகையாடுவதைப் போல அவன் கண் முன்னால் காட்சியளிக்கிறார்கள். ஆனால் அதைக் கூட அவன் சிறிதும் பாராட்டவில்லை.

தன்னால் அடிமையாக்கப்பட்ட தேவர்கள், இந்த பரந்த உலகின் கண்ணுள்ள அத்தனை மனிதர்கள், இதற்கெல்லாம் மேலாகத் தன்னிடம் தோற்று ஓடிப்போய் மறைந்து வாழ்ந்திருந்த வலிய பகைவர்கள், இவர்களெல்லாம் தன்னைக் கண்டு- தான் இராமனிடம் தோல்வியுற்று திரும்பி வந்திருக்கும் நிலையைக் கண்டு நகுவார்களே என்றெல்லாம் அந்த இராவணன் சிறிதும் கவலைப்படவில்லையாம். அவ்வாறென்றால் இவைகளுக்கெல்லாம் மேலான வேறோரு பொருள் தன்னைக் கண்டு நகைக்குமே என்ற ஒரே ஏக்கந்தான் அவன் மனதில் நிறைந்திருக்கவேண்டும் என்று தானே தெரிகிறது.

‘வானகு மண்ணுமெல்லா நகும் நெடுவயிரத்தோளான்
நானகு பகைஞரெல்லா நகுவரென்றதற்கு நாணான்.”

என்று வரும் இரண்டு அடிகள் நம்மை சிந்திக்க வைக்கத்தான் செய்கின்றன. 

இவ்வாறு மேற்கூறிய பகைவர்கள் யாவரும் தன்னைப் பார்த்து நகைப்பதை சிறிதும் பொருட்படுத்தாத இராவணன் வேறு யாருடைய நகைப்பையோ எதிர்பார்த்து ஏக்கமுறுவதாகத் தானே நாம் கொள்ள வேண்டும். அதையுந்தான் பார்த்து விடுவோமே. 

“வேனகு நெடுங்கட் செவ்வாய் மெல்லியள் மிதிலைவந்த
சானகி நகுவளென்றே நாணத்தாற் சாம்புகின்றான்”

என்ன அழகான கருத்து! பகைவரைப் பதம் பார்க்கும் நெடிய கூரிய வேலைக் கூடப் பழிக்கும் வகையில் அழகு பெற்று விளங்கினவாம் அந்தச் சானகியின் நீண்டு பரந்து விளங்கிய கயற்கண்கள்; தொண்டையங்கனியின் சிவப்பு நிறத்தையுங்கூட தோற்கடிக்கும் விதத்தில் விளங்கினவாம் அவளது செவ்விதழ்கள். மிதிலை வந்த செல்வியாகிய அந்தச் சானகி ஒரு மெல்லியல் என்பது நாம் மட்டும் அல்லாமல் இராவணனும் அறிந்திருந்த உண்மை. ஆனால், மாவீரர்களாகிய வானவர்களும் மண்ணின் மேலுள்ள மகாவீரர்கள் பலரும் தன் வலிமைக்கு புறங்காட்டி ஓடிய அவனது கொடிய பகைவர்களும், தன்னைக் கண்டு ஏளனம் செய்வார்களே என்பதைக் கூட சிறிதும் பொருட்படுத்தாத அவன் அந்த மெல்லியளாகிய சானகி தன்னைக் கண்டு நகுவதற்காக மட்டும் ஏன் நாணிச் சாம்ப வேண்டும்? அதற்குக் காரணம் அறிய விரும்பும் நாம் சற்றுப் பின்னோக்கிச் சென்று சுந்தரகாண்டத்தில் நிந்தனைப் படலத்தில் உளம் செலுத்த வேண்டும். அங்ஙனமே செய்வோம். அரக்கிகள் சுற்றிலும் சூழ்ந்திருக்க அனைத்துலகிற்கும் அன்னையாகிய அந்தச் சீதை அல்லலுடன் வீற்றிருக்கிறாள் அந்த அசோகின் அடியில். அவளைத் தான் அடையவேண்டுமென்று ஆசைகொண்ட அந்த அறிவிலியாகிய தசமுகன் அவள்முன் வந்து நிற்கின்றான். அவனை அவ்விடத்தில் கண்ட சீதை புலியைக் கண்ட மான் போல் ஆகி விடுகிறாள். அந்த அற்பன் அவளைத் தன் இச்சைக்கு உட்படும் படியும் தன்னை அவள் ஏற்றுக்கொண்டால், அவளது காலடியில் இம்மூவுலகையும் அடிபணியச்செய்யும் ஆற்றல் தன்னிடம் இருக்கிறது என்று சொல்லி அவளை நயந்து வேண்டுகிறான். ஆனால், அந்த அறிவிலியின் வேண்டுகோள் அவளை சீற்றமடையச் செய்கிறது. அவள் சொல்கிறாள், “உனக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் இருக்கின்றன என்று எண்ணி நீ இறுமாந்திருக்கிறாய். ஆனால், வித்தகனாகிய, வில்லாற்றலுள்ள என் கணவனாகிய இராமனுக்கு உன்னுடைய இந்தத் தலைகளும், தோள்களும் விளையாட்டுப் பொருட்களாக அமையும். அவனுடன் நீ போர்புரியும் பொழுது உன்னுடைய ஆற்றல் சிறிதும் பயன்படாது போய்விடும். நீ உன்னைப் பெரிய வீரன் என்று மனதில் எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால், என்னை பஞ்சவடியிலிருந்து இவ்விடத்திற்கு கொண்டுவரும் வழியில் சடாயு என்ற பறவை வேந்தனால் தடுக்கப்பட்டு அவனால் கீழே தள்ளப்பட்ட காட்சியை நான் என் கண்களால் கண்டு கொண்டிருந்தேனே அவ்வாறிருக்க உன் வீரம் என் இராமனிடம் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறாள்.

‘பத்துள தலையுந் தோளும் பலபல பகழிதூவி 
வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற்கேற்ற
சித்திர விலக்கமாகுமல்லது செருவிலேற்கும்
சத்தியை போலுமேனால் சடாயுவாற்றரையின் வீழ்ந்தாய்”

இராவணனின் கண்முன்னால் இந்தக் காட்சித் தோன்றி அவனை சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. அவள் சொல்லியவாறுதானே இன்று அவன் இராமனிடத்தில் தோல்வியுற்று திரும்பி வந்திருக்கிறான். சீதை சொல்லியதில் சிறிதும் மாற்றமில்லையே. இராமனின் வில்லாற்றலை அவன் நேரிலேயே இப்பொழுது கண்டு கொள்ள முடிந்துவிட்டதல்லவா? இதை எண்ணிப் பார்க்க நேர்ந்த பொழுது அவன் மனம் நாணத்தால் சாம்பாமல் எவ்வாறிருக்கமுடியும்?

அவ்வாறு மனங்கலங்கிய நிலையில் வீற்றிருந்த இராவணனைக் காணும் பொருட்டு, பல போர்களில் வெற்றி வாகை சூடியவனும் வயதில் மிக மூத்தவனாகிய மாலியவான் அங்கு வந்து சேர்ந்தான். அந்த மாலியவான் இராவணனின் பாட்டன் ஆவான். இதுகாறும் எக்காலத்திலும் வாட்டமுற்றிராத இராவணனின் முகம் அன்று மிகவும் வாட்டமுற்றிருப்பதையும் அதன் விளைவால் தான் அங்கு வந்து நிற்பதைக் கூட அறியாமல் அவனது ஆசனத்தில் வீற்றிருந்த இராவணனின் அவல நிலைமையும் கண்ட அந்த மாலியவான் இராவணனின் பக்கத்தில் போடப்பட்டிருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தான்.

அவ்வாறு ஆசனத்தில் அமர்ந்துகொண்ட அந்த மாலியவான் தன் பேரனாகிய இராவணனின் அத்தகைய அவதியுறும் நிலைமையைக் கண்டு மனம் பொறாதவனாய் அவன் பாலிரக்கம் கொண்டு, “இராவணா! இன்று நடந்த போரில் உனக்குத் தோல்வி கிட்டியது போலும். நீ மனம் வருந்தி வீற்றிருக்கும் நிலையும் என்றும் தோல்வி கண்டிராத உனது வைரத்தோள்கள் வாடி வருந்தி காட்சியளிக்கும் வகையும் உன்பால் எனக்கு இந்தச் சந்தேகத்தை ஏற்படச் செய்கின்றன. என்றும் எவராலும் பெறமுடியாத வரங்களைப் பெற்றிருப்பவனாகிய உனக்கு இப்பொழுது என்ன நேர்ந்தது? என்று இராவணனின் புண்பட்ட மனமும், பண்படும் விதத்தில் பேசினான், அந்த மாலியவான்.

பகைவனிடம் தோல்வியுற்று திரும்பிவர நேரிட்டதால் ஏற்பட்ட துயரம் நிறைந்த மனத்தினானும் அந்தத் துன்பம் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிகின்ற காரணத்தினால் சிகப்பேறிய கண்களை உடைவயனும், சுவைக்குந்தோறும் இன்பத்தை அளிக்கும் இனிப்பான வெல்லப்பாகு மட்டுமல்லாமல், அமுதத்தைச் சுவைக்கினும் அது கசப்பாகத் தோன்றும் அளவிற்கு அமைந்துவிட்ட நாக்கையும், உள்ளத்தில் எழுந்த வருத்தம், கொல்லனின் துருத்தியிலிருந்து வெளிப்படும் தீயைப் போல் வெளியேறும் திறந்த பெரிய நாசியை உடையவனுமாகிய அந்த இலங்காதிபன் மாலியவானின் கேள்விக்குப் பதில் கூற ஆரம்பித்தான்.

“பாட்டா! நான் அந்த தாபதர்களாகிய அவ்விரு வீரர்களையும் முதற் தோற்றத்தில் சாதாரணமானவர்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், உண்மையைப் பிறகுதான் உணர்ந்தேன். பல போர்களிலும் பகைவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்த வீரனாகிய நான் இன்று இந்த இராம, இலக்குவரிடம் தோற்று நின்று விட்டேனென்றால் அவர்களுடைய வீரத்தைப் பற்றி என்னவென்று சொல்வது. அது போகட்டும். இந்தப் போர் எனக்கும் அந்த இருவருக்குமிடையே தானே நடந்தது. இந்த தேவர்கள் & என் முன் வலியிழந்து ஓடிய இந்த தேவர்கள் -எதற்காக எங்கள் போரைக் காண்பதற்கு வரவேண்டும். நான் இன்று அவர்களிடம் தோற்றுத் திரும்பி வந்த செய்கை எனக்கு மட்டுமா அவமானத்தைக் கொடுக்கிறது. என்னுடைய குலத்தோர்க்கெல்லாமல்லவா மீளாப்பழியை வாங்கி வைத்து விட்டேன்.

இவ்வாறு கூற ஆரம்பித்த இராவணனுக்கு அன்றையப் போர்க்காட்சிகள் கண்முன்வந்து நிற்கின்றன. இராவணன் தன்னால் முடிந்த வரையில் இராம இலக்குவர்களை வென்றுவிட முயற்சிக்கிறான். ஆனால், இலக்குவனுடைய வீரம் அவனைத் திகைக்க வைக்கிறது. தன்னுடைய எந்த முயற்சியும் இலக்குவணனை வெல்வதற்கு உபயோகப்படாது என்பதை அவன் அவ்விடத்திலேயே அறிந்து கொண்டான். அதை அவனால் தன் உள்ளத்தில் இப்பொழுது- அடக்கி வைக்க முடியவில்லை. வாய்திறந்து கூறலுற்றான்.

முளைத்தெழுந்த மூன்றாம் பிறைச் சந்திரனைத் தன் முடியில் தரித்திருப்பவனும், நெற்றிக்கண்ணை உடைய நிமலனும், மூவர் என்று சிறப்பித்துக் கூறப்படும் மூவருமே ஒன்றுகூடி வந்து எதிர்த்து நிற்பினும், உலகிலுள்ள வீரர்கள் யாவரும் திரண்டு வந்து எதிர்த்துப் பொர நின்ற போதிலும் அந்த மாவீரனாகிய இலக்குமணனின் வில்லாற்றலை எதிர்த்து நிற்க முடியாது. உண்மை அவ்வாறிருக்க நான் மட்டும் அவனிடம் தோற்றுத் திரும்புவதைத் தவிர்த்து வேறு என்ன செய்துவிட முடியும்? அவனுடைய இந்தக் கருத்தை அவர் வாயிலாகவே கேட்பதில் தவறில்லையல்லவா? இதோ பாடலைப் பாருங்கள்.

“முளையமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வராகக் 
கிளையமை புவன மூன்றும் வந்துடன் கிடைத்தவேணும்
வளையமை வரிவில்வாளி மெய்யுற வழங்குமாயின்
இளையவன்றனக்கு மாற்றாதென் பெருஞ்சேனை நம்ப.”

தேவரும் மூவரும் மற்ற உலகத்துள்ளார் யாவரும், மூவுலகையும் வென்ற தானும் அந்த இலக்குவணனின் ஆற்றலுக்கு அடிபணிய வேண்டுமென்று சொல்லுங்கால் நம் வசத்திலிருக்கும் பெரும்படைகள் ஒன்றுக்கும் உதவாமற் போய்விடும் என்று இராவணன் மனம் விட்டு தன் பாட்டனிடம் கூறும் நயம் நம்மை சிந்திக்க வைக்கிறது.

“என்னுடன் போர்க்களத்திற்கு வந்திருந்த எனது சேனை முழுவதும் அந்த அவ்விரு மனிதர்களின் வில்லாற்றலுக்கு ஆற்றாது அலைந்து குலைந்து ஓடுவதை என் கண்களால் கண்டேன். அதைக் கண்ட எனக்கு எத்தனை துயரம் ஏற்பட்டது என்பதை சொல்லி முடியாது. ஆனால், அதே சமயம் நான் ஒரு விந்தையைக் கண்டேன். அது என்னை முற்றும் வியப்படையத்தான் செய்தது. என்னுடைய பெரும் சேனையை சிதறி ஓடும்படி செய்த அவர்களை உற்று நோக்கினேன். அவர்கள் ஒரு சிறிதும் அயராமல் சிறிதும் களைப்பின்றி நம்மவர்மேல் அம்புகளை செலுத்திக் கொண்டிருந்த அந்தக் காட்சி என்னை வேறொரு காட்சிக்கு இழுத்துச் சென்றது என்ற உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த இராமன் அவனது இளம் பிராயத்தில் தனது அம்புகளின் நுனியில் மண் உருண்டைகளைப் பொருத்தி அவைகளினால் கூனியின் முதுகைக் குறிபார்த்து அடித்தான் என்ற செய்தியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நம் வீரர்களின் மேல் அவன் ஏவிய அம்புகள் அந்த வரலாற்றைத்தான் எனக்கு நினைவூட்டினவேயன்றி அவன் பெரும் முயற்சி எதுவும் செய்யவில்லையென்பதையும் என் கண்கூடாகக் கண்டேன்.

இராம, இலக்குவர்கள் இளம்பிராயத்தினராக இருந்த சமயம். வில் வித்தையில் வல்லவர்களாக விளங்கிய அவர்கள் தன் சிற்றன்னை கைகேயியின் பணிப்பெண்ணாகியக் கூனி என்பவளின் முதுகில் மண் உருண்டைகளை செலுத்தி அவளுடைய முதுகை வளையச் செய்துவிட்டார்கள். அந்த அவர்களின் விளையாட்டு வினையாக முடிந்தது. இராமனைக் காட்டிற்கு அனுப்பவும் அந்த விளையாட்டுக் காரணமாக அமைந்தது. கூனி மட்டும் கைகேயியின் மனதை மாற்றியிராவிட்டால், அன்றே இராமப் பட்டாபிஷேகம் நடந்தேறியிருக்கும். இராமாயணக் கதையும் முடிந்திருக்கும். இந்தக் கூனியின் வரலாற்றை இராவணன் அறிந்திருந்துதான் கூறுகிறானா அல்லது கம்பனின் கவியுள்ளம், அவன் இராமன்பால் கொண்ட காதல் மிகுதியால் அவனை அவ்வாறு பாட வைக்கிறதா என்று நாம் யோசிக்குமளவில் நன்கு அமைந்திருக்கிறது. எது எவ்வாறாயினும் சரி. கவியிலே கருத்திருக்கிறது. கருத்திலே நயமிருக்கிறது என்பதை நன்கு உணரலாம். கூனியை இராமன் விளையாட்டாகத்தான் அடித்தான் என்ற உண்மையை அறிந்திருந்த இராவணன், அதே இராமன் தன்னையும் தன் சேனையையும் நிலைகுலைந்து ஓடிய சமயத்திலும் விளையாட்டாகப் போர்புரிவது போலவே விளங்கினான் என்று கூறும் கவிநயம் நம் யாவராலும் போற்றப்படவேண்டிய ஒன்றாகும்.

“எறித்த போரரக்கராவியெண்ணிலா வெள்ள மெஞ்சப்
பறித்தபோது என்னையந்தப் பரிபவமுதுகிற் பற்றப்
பொறித்தபோது அன்னானந்தக் கூனி கூன் போகவுண்டை
தெறித்தபோது ஒத்ததன்றிச் சினமுண்மை- தெரிந்ததில்லை.

இராவணின் சேனையில் இருந்த அரக்கர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். பெரிய மலைகளையத்த உருவத்தினராயும், ஒளிவீசுகின்றப் பெரிய நீண்டு வளைந்தக் கோரைப் பற்களை உடையவராயும் விளங்கினர் அந்த அரக்கர். அவ்வாறுள்ள அரக்கர்களின் கூட்டம் நூற்றிரண்டு வெள்ளம் கொண்டதாகவும் இருந்தது. அத்தனை சேனையையும் கொன்று அழித்துவிட்டனவாம் அந்த இரு தாபதர்களின் வில்லினின்றும் புறப்பட்ட அம்புகள். அரக்கர்களை மட்டுமா கொன்றது அந்த வாளிகள். இல்லை. அவர்களுடன் அணிவகுத்து முன்னணியில் நின்ற யானைப் படையையும், உதவிப் படையையும், அவைகளில் ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் அழித்து விட்டனவாம், அந்த வாளிகள். இதில் என்ன விந்தையிருக்கிறது? அதையும் தான் பார்ப்போமே. அந்த இருவரும் விடுத்த வாளிகள் அந்த அரக்கர்களின் தலைகளையும், குதிரை, யானைகள் முதலியவற்றின் தலைகளையும் கொய்துவிட்டு அவைகளின் உடல்களில் தங்காமல் காற்றெனக் கருகிச் சென்றுவிட்டனவாம். இதை இராவணனே ஒப்புக்கொள்ளும் பொழுது நாம் எங்ஙனம் இதை ஐயுற முடியும்?

அவ்வாறு தன் படையை முற்றிலும் அழித்த பின்னராவது அந்த வாளிகள் ஒன்றும் செய்யாது வாளாயிருந்து விட்டனவா? இல்லை. அந்த வாளிகள் உலகமெங்கணும் சுற்றி, சுற்றித் திரிந்து உலகத்திலுள்ள என்னைப் போன்றோர்களை யெல்லாம், அழிக்கும் முயற்சியில் முயன்று நின்றன. அப்படி விரைந்து பாய்ந்து செல்லும் அந்தத் தாபதர்களின் வாளிகள் ஊழி மாறினும் தங்கள் வலிமைக் குன்றாது நிலைத்து நின்று தீயையும் மாய்க்கும் சக்தி வாய்ந்தவைகளாய் இருந்தன.  அது மட்டுமா? அவைகள் சென்ற திசைகளெல்லாம் தீய்ந்துவிடும். அந்த வாளிகளைப் பற்றி கூறப்புகுந்தால் நம் வாயையும் தீய்த்துவிடும். அவைகளைப் பற்றி மனத்தினால் எண்ணப் புகுந்தால் அந்த மனதையே தீய்த்து விடும். சக்தி வாய்ந்தவைகளாக இருந்தனவென்றும் இராவணன் தன் பாட்டனிடம் சொல்லத் தவறவில்லை. இராவணனுடைய இந்த வாய்மொழியைக் கேட்குங்கால் அவனுக்கு இராம இலக்குவர்களின் வாளிகள் எத்தனை பயமூட்டியிருக்கின்றன என்பதை நமக்கு நன்கு தெளிவாக்குகிறது.

இவ்வாறு சொல்லிக் கொண்டு வந்த இராவணனின் மனதில் மறுபடியும் அந்த அசோகவனக் காட்சி முன்வந்து நின்றது. அப்பொழுது தன்னை நிந்திக்கும் வகையில் அந்த மிதிலைச் செல்வியாகிய சானகி இராமனுடைய வில்லினின்றும் புறப்படும் வாளிகள் எத்தகைய வீரம் வாய்ந்தவை என்று அவனுக்கு விளக்கிக் கூறும் வகையில் சொன்ன சொற்கள் அவனது மனதில் இந்த வேளையில் அம்புபோல் தைத்தன. அன்று அவள் சொன்னாள்; 

    “மேருவையுருவல் வேண்டின் விண் பிளந்தேகல்- வேண்டின்
     நீரெழுபுவனம்யாவு முற்றுவித்திடுதல் வேண்டின்
     ஆரியன் பகழிவல்ல தறிந்திருந்தறிவிலாதாய்
     சீரியவல்ல சொல்லித்தலைபத்துஞ் சிந்துவாயே.”

“தசமுகப்பதரே! என் பதியாகிய இராமனுடைய வாளிகளின் பெருமையை நீ அறியமாட்டாய். உலகிலேயே மிகப் பெரியதாகச் சொல்லப்படுகின்ற மேருமலையை உருவிச்செல்ல வேண்டுமா? அல்லது மிகத் தொலைவிலுள்ள வானத்தையே பிளந்து கொண்டு செல்லல் வேண்டுமா? அல்லது பெரியோர்களால் புகழ்ந்து பேசப்படும் ஏழு உலகங்களையுமே அழிக்க வேண்டுமா? இதில் எதையும் தங்கு தடையின்றி நிறைவேற்றக்கூடியன எனது இராமனின் வாளிகள் என்பதை நீ அறிந்திருந்தும் என்னிடம் சொல்லத்தகாதவைகளையெல்லாம் சொல்லி நீ உனது பத்து தலைகளையும் ஒரு சேர இழக்க விரும்புகிறாய். உன் தலைகள் தப்ப வேண்டின் என்னிடம் இந்த முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளாதே,” என்று இவ்வாறு அன்று சீதை தன்னிடம் கூறியபொழுது அவைகளை அலட்சியம் செய்த அதே இராவணன் சீதை சொன்ன சொற்களின் உண்மையை இன்று உணர்ந்து கொண்ட நிலைமையில் அந்த அசோக வனக்காட்சி அவன் மனத்தில் எண்ண அலைகளை அள்ளி வீச ஆரம்பித்தன. அவன் மாலியவானிடம் தன் அனுபவங்களை வாய்விட்டுக் கூறிவிடுகிறான். “மேருவைப் பிளக்க வேண்டுமா! விண்ணைக் கடந்து செல்ல வேண்டுமா? ஈரேழு உலகங்கள் என்று சொல்லப்படுகின்றனவே, அவைகளை ஊடுருவிச் செல்ல வேண்டுமா? அல்லது கடல் நீர் அத்தனையையும் பருகிவிட வேண்டுமா? இவைகள் யாவற்றையும் ஒரே கணத்தில் ஒருங்கே செய்து முடிக்க வல்ல ஆற்றல் அமைந்தவை இராமன் கைவாளிகள். அவ்வாறு நோக்குங்கால் அனேக கோடி மேரு மலைகளும், அநேக கோடி விண்களும் பலப்பல உலகங்களும் தேவைப்படும் என்று என் மனம் அஞ்சுகின்றது. “அன்று சீதை சொன்ன சொற்களின் உண்மையை இன்று நன்கு உணர்ந்த நிலைமையில் இருந்தான் அந்த இராவணன் என்று சொல்வது மிகையாது. அவன் வாய்மொழியாகவே விளங்கும் கீழ்வரும் பாடலையும், மேற்கூறிய நிந்தனைப் படலப் பாடலையும் ஒப்பு நோக்குவோர் யாரும் அந்தக் கருத்தினை ஒப்புக் கொள்ளத் தவற மாட்டார்கள். 

“மேருவைப் பிளக்கவென்றால் விண் கடந்தேகவென்றால்
பாரினியுருவவென்றால் கடல்களைப் பருகவென்றால்
ஆருமே யவற்றினாற்றல் ஆற்றுமேலனந்த கோடி
மேருவும் விண்ணு மண்ணுங் கடல்களும் வேண்டுமன்றே…”

“இவ்வாறு பேராற்றல் படைத்த அந்தப் புண்ணியர்கள் வாளிகளை எங்ஙனம் தங்கள் விற்களில் பொருத்துகிறார்கள் என்பதையோ அல்லது அந்த வாளிகள் எங்ஙனம் புறப்பட்டு அரக்கர்களின் ஆவிகளைப் பறித்து செல்கின்றன என்பதையோ நம்மால் அறிய முடியாது. அந்த தேவர்களாலேயே அதை அறிய முடியாது என்று சொன்னால் நாம் எம்மாத்திரம். ஆனால், ஒன்று அவர்கள் விட்ட வாளிகள் எங்கும் எல்லாத் திசைகளிலும் பரந்து காணப்பட்டன என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்”

இராவணன் வேதம் முற்றிலும் ஓதி உணர்ந்தவன். சாமகீதம் பாடுவதில் மிக்க தேர்ச்சி அவனுக்கு உண்டு. நல்லிலக்கணம் நன்கு கற்றவன் இவ்வளவிருந்தும் என்ன பயன்? காமத்தினால் கருத்தழிந்து விட்டான். இராமனிடம் தோல்வியுற்று திரும்பி வந்திருந்தானாயினும் அவனது கவியுள்ளம் இராமனது வாளிகளின் வேகத்தை வியந்து பேசத் தூண்டுகிறது. மிகத் தேர்ச்சி பெற்றக் கவிவாணர்களின் நாவிலிருந்து புறப்படும் நல்ல பாடல்களைப் போன்றும், என்றும் குன்றாத இசையைப் போன்றும் வெளிப்பட்டுப் பாய்ந்து வந்தன என்று அவனே அந்த வாளிகளின் ஆற்றலைப் புகழ்ந்து பேசுவதைக் கேட்கும் நாம் அவனுக்கு கலையின் பால் இருந்த ஈடுபாட்டை நன்கு காண முடிகிறது. காகுத்தன் என்று இராமனை இராவணன் கூறுவது அவன்பால் இராவணன் கொண்ட மதிப்பிற்கு சிறந்த சான்றாகும் என்பதையும் நாம் இந்தப் பாடலிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. 

“நல்லியற் கவிஞர் நாவிற் பொருள் குறித்தமர்ந்தநாமச்
சொல்லெனக் செய்யுள்கொண்ட தொடையெனத் தொடையை நீக்கி
எல்லையில் செல்வந்தீரா விசையெனப் பழுதிலாத
பல்லலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ.”

“நான் பலமுறைகள் இந்திரனோடு போர் புரிந்திருக்கிறேன். மூவிலைவேல் ஈசனையும் முற்றுகையிட்டிருக்கிறேன். மாயையில் வல்ல மகாவிஷ்ணுவையும் போரில் எதிர்த்து நின்றிருக்கிறேன்.  அச்சமயங்களில் இந்திரன் கையிலிருக்கும் வஜ்ராயுதத்தின் வலிமையும், அந்த முக்கணானுடைய மூவிலைவேலின் ஆற்றலையும், மாயனாகிய அந்த மாதவனின் சக்ராயுதத்தின் வேகத்தையும் யான் கண்டு அச்சம் கொள்ளாமல் அவர்களையெல்லாம் எதிர்த்து நின்றிருக்கிறேன். ஆனால், இன்று நான் பட்ட பரிபவம் என்னால் சொல்ல முடியாத தொன்றாகும். தாபதர்களாகிய அந்தச் சகோதரர்கள் வெளிப்படுத்திய அந்த வாளிகளின் ஆற்றலை என்னால் தாங்க முடிந்ததேயன்றி மற்று எவரால்தான் முடியும்?” என்று இராவணன் கூறினான்.

“பித்துப்பிடித்தவனாய், பேய்கணங்களோடும் இடுகாட்டில் ஆனந்தமாக ஆடும், அந்த கங்காதரனின் எட்டு தோள்களும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் இரண்டு தோள்களும், இந்த ஈரேழு புவனங்களையும் ஊழிக்காலத்தில் தன் வயிற்றில் அடக்கி வைக்கும் பேராற்றல் கொண்ட அந்தப் பரமனின் ஆயிரம் தோள்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்றால்கூட அந்த இளையவனின் ஒருவிரலின் ஆற்றலுக்கு எதிர்நிற்கமாட்டா என்று சொன்னால் அது நம்பத்தகாத ஒன்றல்ல” என்று இராவணன் தன் பாட்டனிடம் கூறுவதைக் கேட்கும் நமக்கு அவனது உள்ளம் இராம இலக்குவர்களின் வீரத்தைக் கண்டு அதில் அவன் மனம் எத்தனை ஈடுபட்டிருக்கிறது என்பதை நன்கு உணர்த்துவதாயிருக்கிறது.

மேற்கூறியவாறு இராம இலக்குவர்களின் ஆற்றலைப் பற்றிக் கூறி வந்த இராவணனின் கண்முன் மற்றோர் முறை அசோகவனக்காட்சி வந்து நின்றது. அவன் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை சுட்டிக் காட்டி தன்பால் அவன் கொண்ட ஒருதலைக் காதலை அறவே கைவிட்டுவிடும்படி அவனிடம் சீதை கூறியும், அவன் அவளைத் தன் கருத்திற்கு இசைய வேண்டும் என்று வேண்டி நிற்கும் தருவாயில், சீதை சொன்ன சொற்கள் அவனது இருபது செவிகளிலும் ஒலிக்க ஆரம்பித்தன. சீதை சொன்னாள், “நல்வழி எது? தீயவழி எது? என்பதை சற்றும் அறியாத நீசனே! இதை கேள். முன்னொரு சமயம் நீ ஆயிரம் வலிய கரங்களையுடைய கார்த்தவீரியன் என்னும் பேராற்றல் கொண்ட அரசனிடம் போருக்குச் சென்றாய். அவனோ உன்னுடைய இருபது கைகளையும் அனாயாசமாகப் பிடித்து உன் வாய்களில் இரத்தம் வெளிப்படும்படி உன்னைக் குத்தி வாட்டி வதைத்து சிறையிலும் வைத்துவிட்டான். நீ அவனிடம் மன்னிப்பு பெற்றுக் கொண்டு மீண்டும் உன் நகரை அடைந்தாய். இந்தச் சம்பவத்தை நீ இதுகாறும் மறந்திருக்கமுடியாது. அந்தத் தூயவனான கார்த்த வீரியனின் ஆயிரம் கரங்களையும் பரசினால் துணித்து எறிந்தான் பரசுராமன் என்ற பராக்கிரமசாலி. நீ இதைப் பற்றிய விவரத்தையும் கேட்டறிந்திருப்பாய். அந்தப் புயவலிபடைத்த கார்த்தவீரியனையும் கட்டோடழித்த அந்த பரசுமுனிவன் என் கணவன் முன்னால் வலியிழந்து தன் தவப்பயனையும் இழந்து தனியனாய் எங்கோ சென்றுவிட்டான் என்பது உனக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நீ இப்பொழுது இவ்வாறு நடந்து கொள்வதைப் பார்த்தால், இந்த விவரங்கள் உனக்குத் தெரிந்திருக்காதோ என்று என்னை சந்தேகமுறச் செய்கிறது. இனியாவது திருந்தி நல்வழியில் நடந்து செல்” என்று சீதை சொல்லியது இப்பொழுதுதான் சொல்வதைப்போல் அந்த இராவணனின் செவிகளில் ஒலித்தன.

“ஆயிரந்தடக்கையானின்னைந் நான்கு கரமும் பற்றி
வாய்வழிகுருதி சோரக்குத்தி வான் சிறையில் வைத்த
தூயவன் வயிரத்தோள் கடுணித்தவன்றொனலந்த மாற்றம்
நீயறிந்திலையோகுவே நெறியறிந்திலாத நீசா.”

தன்னைத் துன்புறுத்தும் கொடியவனாகிய இராவணனைத் துன்பத்திற்கு உள்ளாக்கினான். ஆதலால், அந்தக் கார்த்தவீரியனைத் தூயவன் என்று கூற சீதை முன்வந்தாள். அதுமட்டுமல்ல. கார்த்தவீரியனின் புயவலியும், பெருந்தோற்றமும் தோன்றும் விதத்தில் ‘ஆயிரம் தடக்கையான்’ என்று அவனை வியந்து கூறி அவன் எதிரில் இராவணனின் எளிமை தோன்ற அவனை, ஐந்நான்கு கரங்கள் உடையவன் என்று சீதை வாயிலாக கவிகூறும் நயம் இங்கு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அசோகவனக் காட்சியும், தன்னிடம் சீதை கூறிய அந்தச் சொற்களும் அப்பொழுதுதான் நடப்பதைப் போன்ற ஒரு பிரமையை இராவணனுக்கு உண்டாக்கியிருக்கவேண்டும். அவனது மனம் பல வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை அவன் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.

சூரிய குலத்தில் வந்த கார்த்தவீரியன் என்ற பலசாலியான அரசன் ஒருவன் மாகிஷ்மித் என்ற நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு பலம் பொருந்திய ஆயிரம் கைகள் உண்டு. அவனுடைய வீரப்பிரதாபங்களை கேட்டறிந்த இலங்காதிபனாகிய தசமுகன் ஒருநாள் அந்தக் கார்த்தவீரியனை வென்று வருவதற்காக அவனுடைய நகரத்தை நோக்கிச் சென்றான். அவனை அங்கு காணாத இராவணன் சிவபூஜைக்குரிய வேளை நெருங்கிவிட்டபடியால் பூஜை செய்வதற்காக கங்கையாற்றங்கரையில் அமர்ந்து பூசையில் ஆழ்ந்தும் விட்டான். அதே சமயம் தன் மனைவியருடன் நீர் விளையாடும் பொருட்டு கங்கையாற்றில் இறங்கித் தனது ஆயிரம் தடங்கைகளாலும் அவ்வாற்று நீரைத் தேக்கியிருந்த கார்த்தவீரியன் நீர் விளையாட்டு முடிந்து கரையேறிவிட்டான். ஆதலால் அவன் கைகளால் தேக்கப்பட்டிருந்த அந்த ஆற்று நீர் வெகு வேகமாக பரந்து வந்து அங்கு பூஜை செய்து கொண்டிருந்த இராவணனின் பூஜைக்குரிய பொருட்களை அடித்துச் சென்றுவிட்டது. பூசை கலைந்து எழுந்த இராவணன் கங்கையாற்றின், திடீர் நீர்ப்பெருக்கிற்குக் காரணத்தை உணர்ந்து கார்த்தவீரியன் பால் போருக்கு எழுந்துவிட்டான். அதன் விளைவு. அந்தக் கார்த்தவீரியனின் ஆயிரம் தடக்கைகளாலும் மொத்துண்டு பத்து வாய்களிலிருந்தும் இரத்தம் சிந்த பரிதாப நிலையில் சிறைப்பட்டு விட்டான் தசமுகன். இது விவரமறிந்த இராவணனது மூதாதையாகிய புலத்தியர் கார்த்தவீரியனிடம் சென்று அவனை இராவணன் பால் இரக்கம் காட்டும்படி வேண்ட அவனும் இராவணனை மன்னித்து சிறையிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இந்தக் காட்சி இராவணனின் கண்முன் வந்து நின்று அவனை ஏளனம் செய்வது போலிருந்தது. இப்பொழுதுதான் அந்தச் சம்பவம் நடப்பது போன்றும், தான் அந்த கார்த்தவீரியனிடம் தோற்று அவன்முன் இறைஞ்சி நின்று கொண்டிருப்பது போலவும் அவனை எண்ணச் செய்தது. அன்று அவன் பட்ட பரிபவம் அவனைக் கார்த்தவீரியனைக் காட்டிலும் ஒரு சிறந்த வீரன் உலகத்தில் எவருமே கிடையாது என்ற நம்பிக்கையை அவன் மனதில் நிலைத்திருக்கும்படி செய்திருந்தது. ஆனால், இன்று நடந்த முதல்நாள் போரிலேயே அந்தக் கார்த்த வீரியன் இலக்குவனின் கால் துகளுக்கும் இணையாக மாட்டான் என்று அவனை எண்ணும்படி செய்துவிட்டது. அவன் தன்னுடைய பாட்டனிடம் அவனது உள்ளக் கருத்தைத் தெள்ளத் தெளிவாகக் கூறுவதை அவன் வாயிலாகவே இங்கு காண்போம்.

“சீர்த்தவீரியராயுள்ளார் செங்கண்மாலெனினுமியானக்
கார்த்தவீரியனை நேர்வாருளரெனக் கருதலாற்றேன்
பார்த்த போதவனுமற்று அத்தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்ததோர் துகளுக்கொவ்வான் ஆரவற்காற்றகிற்பார்”

“உலகின் கண்ணுள்ள வீரர்களிலெல்லாம் மிகச்சிறந்தவன் கார்த்தவீரியன் ஒருவனே என்று இன்று வரை நான் எண்ணியிருந்தேன். பாட்டா! என்னுடைய அந்த எண்ணம் மிகத் தவறானது என்பதை இன்றுதான் என்னால் உணர முடிந்தது. இளையவனாகிய இலக்குவனோடு அந்தக் கார்த்தவீரியனை ஒப்பு நோக்குங்கால் அவன் இந்த இளையவனின் கால் துகளுக்கும் ஈடாக மாட்டான் என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன்” என்று தான் நினைத்தது நினைத்தபடியே கூறினான் இராவணன்.

“முன்பொரு சமயம் முப்புரம் எரித்தானே அந்த முக்கணான். அவனுடைய வலிமை பொருந்திய அந்த வில்லும் இராமனின் வில்லுக்கு எதிரில் ஒன்றும் செய்யமுடியாது. இராமனுடைய வில்லாற்றலுக்கு வேறு எந்தப் பொருளையும் உவமை கூறலாம் என்று எண்ணினால் அது முடியாத ஒரு செயலாகி விடும்.  நானிலத்தோர் புகழ்ந்து போற்றும் நான் மறைகள் ஒரு காலத்தில் தவறினாலும், தவறலாம். ஆனால், அந்த இராமனின் தனுவினின்றும் புறப்படும் வாளிகள் ஒரு காலத்தும் தப்பினதாக யான் அறியவில்லை. அத்தனை சிறந்த வில் வல்லான் அந்த இராமன் என்பதை நான் கண்கூடாகக் கண்டேன்”

“என்னைத் தோல்விகண்ட அந்த வில்லாளன் அவனது வில்லில் அம்புகளைப் பொருத்தி நாணேற்றி அவைகளை விடும் பொழுது படைப்புக் கடவுளாகிய பிரம்மதேவனை ஒத்திருந்தன அவைகள். அவைகள் வேகமாக பகைவரை நோக்கிச் செல்லும் பொழுது ஆதிமூலமாகிய அந்த திருமாலையே ஒத்திருந்தன. பகைவனாகிய என்னுடைய படையின் நடுவே புகுந்து என்னுடைய படை வீரர்களை கலங்கி ஓடச் செய்த பொழுது ஊழிக் காலத்தில் உலகத்தையெல்லாம் அழித்து நிற்கும் உருத்திரனைப் போலும் காட்சியளித்தன என்றால் அவைகளுக்கு ஒப்புவமை கூற வேறு என்ன இருக்கிறது. அது மட்டுமா? எந்தச் சந்தர்ப்பத்திலும் - கலக்கமுறாத என்னையே அவனது வில்லாற்றல் இன்று கலங்க வைத்துவிட்டது என்றால் பின்னர் எவரால் தான் அவனுடைய ஆற்றலை எதிர்த்து நிற்க முடியும்”

“அந்த வீரனுடைய வில்லினின்றும் புறப்பட்ட அம்புகள் எங்கிருந்து புறப்பட்டு எவ்வாறு வருகின்றன என்பதை என்னால் இன்னும்கூட அறியமுடியவில்லை. சில சமயம் மேற்கு திசையிலிருந்து வருவன போலும், சில சமயங்களில் கிழக்கு திசையிலிருந்து வருவன போலவும், மற்ற சில சமயங்களில் வடக்கு, தெற்கு திசைகளில் இருந்து வருவன போலவும் காணப்பட்டன. அவைகளின் வருகையை இவ்வாறு வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்த நான் அதேசமயம் அவனுடைய வாளிகள் விண்ணிலும், மண்ணிலும் பரந்து காணப்பட்டதையும் என் கண்களால் கண்டேன். அவ்வாறென்றால் அந்த இராமனுடைய வில்லாற்றலை வியந்து கூறுவதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்”

இராமனின் வில்லாற்றலைப் பற்றித் தன் பாட்டனிடம் வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்த அந்த இராவணனின் கண் முன்னால், இராமனின் தோற்றம் மறைந்து அனுமனின் தோற்றம் வந்து நின்றது. இராமனின் பாணங்கள் எந்த திசையிலிருந்து பாய்ந்து வந்தன என்று தன்னால் அறிய முடியவில்லை என்று இராவணன் சொன்னானல்லவா? அதற்கு அந்த இராமனின் வில்லாற்றல் மட்டுமே காரணமாய் இருக்கமுடியாது என்ற இராவணனின் உள்ளுணர்ச்சி அவனைத் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தவும் செய்தது. அவன் சொன்னான். “வில்லாற்றல் படைத்த அந்த இராமன் ஒரு குரங்கை வாகனமாகக் கொண்டு அதன் மேல் இருந்து கொண்டுதான் அவனுடைய பேராற்றலை விளங்கச் செய்து கொண்டிருந்தான். இராமனின் வெற்றிக்கு அவனுடைய பேராற்றல் மட்டும் காரணமில்லை. அவனைச் சுமந்து கொண்டு பல திக்குகளிலும் பாய்ந்துப் பாய்ந்து சென்று கொண்டிருந்ததே அந்தக் குரங்கின் ஆற்றல்தான் அவனுடைய வெற்றியில் பெரும் பங்கு கொண்டது என்று நான் திட்டவட்டமாகக் கூறுவேன். அந்தக் குரங்கு சீறியெழுங்கால் தீயைப் போலவும், கடுவேகமாகப் பாய்ந்து செல்லுங்கால் சண்டமாருதத்தைப் போலவும், சுற்றிச் சுற்றி போர்க்களத்தை சூறையாடிக் கொண்டிருக்கும்  பொழுது எமனைப் போலவும் என் கண்களுக்கு காட்சியளித்தது. அது மட்டுமா? அந்த இராமனுடைய ஊர்தியை ஒருசிறு குரங்கு என்று ஏளனமாகச் சொல்லிவிட முடியுமா? முடியாது. ஆற்றல் மிகப்படைத்த அந்தக் கருடனேயானாலும் இந்தக் குரங்கின் முன் தன் ஆற்றல் அழிந்துதான் நிற்கவேண்டிய நிலை ஏற்படும். அதனால் அந்தக் குரங்கை ஏளனமாகப் பேச என் நாவெழவில்லை. இனி மிகமிகப் பேசி யாது பயன்? இராமனின் ஓவியத் தெழுதவொண்ணா எழிலையும், அவனது புடைத்தெழுந்த மார்பினையும் உருண்டு திரண்டிருக்கும் வலிமை கொண்ட புயங்களையும் கண்டு அவைகளைத் தன் மனதில் இருத்திக் கொண்ட அந்தச் சனககுமாரி என்னை ஏறிட்டுப் பார்க்க விரும்பவில்லையென்றால் அது அவளுடையத் தவறில்லை என்பதை நான் இப்பொழுது உணர்கிறேன். ஏனெனில் தீய குணங்களுக்குத் தாயகமாயுள்ள நான், இராமனின் திருவடிவில் தன் மனதைப் பறி கொடுத்த சீதைக்கு ஒரு இழிவான நாயைப் போன்று காட்சியளிப்பேன் என்றால், அது எங்ஙனம் மிகையாகும். நான் எம்மாத்திரம்? அந்தக் காமனே அவள்முன் வந்து நின்று வேண்டினாலும், அவனையும் அவள் விரும்பமாட்டாள் என்பது திண்ணம்” 

எதையும் யாரிடமும் மனம் விட்டுப் பேசும் நிலைமையில் இராத அந்த இராவணன் தன் பாட்டனும் மகாவீரனுமாகிய மாலியவானிடம் மட்டும் தன் மனதில் தோன்றியதை தோன்றியவாறே சொல்லி வந்தது, ஏனென்றுப் பார்க்கப் புகின் அன்று முதல் நாள் போரில் தோல்வியுற்றதினால் மன அமைதி இழந்திருந்த அவன், அதை மீண்டும் பெறுவதின் பொருட்டுத்தான் என்று கூட சொல்லலாம். முன்னர் பல சமயங்களில் அவன் திருமால் அயன், அரன், வாசவன் மற்றும் பல முக்கியவானவர்கள் முதலானவர்களுடன் போர்புரியும் வாய்ப்புகள் கிடைத்திருந்தன. அப்போர்களிலெல்லாம் இராவணனே வெற்றி பெற்றான் என்பது நாம் அறிந்த உண்மை. அவர்களையெல்லாம் எளிதில் வென்றுவிட்ட அதே இராவணன் இன்று இரண்டு மனிதர்களை எதிர்த்து போரிட நேர்ந்தது. அது மட்டுமா? அந்த முயற்சியில் தோற்று நிற்கும் தன்மையும் உண்டாயிற்று. ஆனால், அவன் மனதில் ஒரு திருப்தி. அது என்ன? தான் நாசமடையப் போவது திண்ணம். அந்த நாசம் தன்னால் ஏற்கனவே முறியடிக்கப்பட்டு முடுகி ஓடிய மூவராலோ அல்லது வேறு தேவர்களாலோ அல்லாமல் அவர்களைக் காட்டிலும் வீரத்தில் சிறந்து விளங்கும், பகைவர்களால் நேரிடப் போவதைக் குறித்து அவன் மனம் திருப்தி அடைந்தது. அதையும் அவன் தன் பாட்டனிடம் மனம் திறந்து பேச தயங்கவில்லை. அவன் சொன்னான். “பாட்டா! நான் நாசமுறப் போவது என்னவோ நிச்சயம். ஆனால், என் மனதில் என்றும் காணாத ஒரு அமைதி நிலவுகிறது. அது எங்ஙனம் என்று கேட்கிறாயா! என்னைக் காட்டிலும் பராக்ரமத்தில் இழிந்தவர்களான அந்த மூவரோ மற்ற தேவரோ என்னை இப்பொழுது எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் என்னைக் காட்டிலும் பலசாலிகளான வீரர்களின் பகையைப் பெற்று அதனால் நாசமடையப் போவதை என் மனம் வரவேற்கிறது. நான் நாசமடையப் போகும் வேளையிலும் நல்லதோர் பகையைப் பெற்ற நன்மதிப்போடு இந்த மாநிலத்தினின்றும் மறையப் போகிறேன்”

இராவணன் கொடியவன், பிற தாரத்தை பெண்டாள நினைத்தான்; தருமநெறி பிறழ்ந்து விட்டான், என்றெல்லாம் அவனைப் பற்றி எண்ணங் கொண்டிருக்கும் நம்மை அவனுடைய மேற்கூறிய வீரம் செறிந்த வார்த்தைகள் அவன்பால் இரக்கம் கொள்ளச் செய்வதோடு மட்டுமல்லாமல் அவனுடைய வீரத்திற்கு வணக்கம் செலுத்தும்படி நம்மைத் தூண்டுகிறது என்று கூடச் சொல்லாம்.

இராவணன் இவ்வண்ணம் மனம் மாறுவான் என்றோ, மனம் விட்டு தன் வீரத்தைக் குறைத்தும், பகைவனின் வீரத்தை மிகுத்தும் பேசுவான் என்றோ, அந்த மாலியவான் எதிர்பார்த்திருந்தானில்லை. இராவணனின் கருத்து ஒவ்வொன்றும் மாலியவானை மனதில் மகிழ்ச்சியூட்டுவனவாய் இருந்தன. ஒரு தவறு செய்யும் பொழுது பெரியவர்கள் அவனுக்கு எத்தனை நற்புத்திகள் சொல்லினும் அதை அவன் அகங்காரத்தினால் அச்சமயம் ஏற்றுக் கொள்ள மாட்டான். பின்னர் ஒரு சமயத்தில் அவன் மனமே தெளிவு பெறும். அந்த வேளை அவனுக்கு புத்திமதிகள் எதுவும் தேவைப்படாது. அவனே, தன் தவறுகளை உணர்ந்து மனம் மாறி நிற்கும் அளவில் அவனுக்கு புத்திமதிகள் எதற்காகத் தேவைப்படுகின்றது. மனம் மாறிய அந்த மனிதன் பின்னர் எக்காலத்தும் நல்வழியில் நடந்து செல்லவே நாட்டம் கொள்வான். இதுதான் மனித இயற்கை.

அதேபோல் இங்கு இராவணனும் தன் மனநிலை மாறி நின்றான். பேரனின் பெருந்தன்மையையும், அவனது மனமாற்றத்தையும் நேரில் கண்ட மாலியவானின் மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது. தன் பேரன் திருந்திவிட்டான். வீடணனுக்கு கிடைத்ததுப் போலவே இவனுக்கும் இராமனின் கருணைக் கிட்டிவிடும். சீதை இலங்கையை விட்டுச் சென்று விடுவாள். இராம, இராவணப் போர் இன்றோடு முடிவுற்றது என்று எண்ணி மனங்களித்தான் மாலியவான்.

மாலியவான் மட்டும்தானா களித்தான்? நாமும்தான் களிப்படைகிறோம். இராமன் யாரென்பதை இராவணன் அறிந்து கொண்டுவிட்டான். அவ்வாறு அறிந்ததினால் அவன் மனமும் மாறுபட்டு நல்வழிக்குத் திரும்பிவிட்டான். இனி இத்துடன் இராமகாதை முடிந்துவிட்டது. அடுத்து இராமனின் முடிசூட்டுப் படலம்தான் என்று எண்ணி நாமும்தான் மனக்களிப்படைகிறோம்.

ஆனால், ஒரு பௌராணிகர் கேட்கிறார். இராவணனின் மனமாற்றத்துடன் இராமகாதை முடிந்துவிடுவதென்றால், இராவணன் வதம் எங்ஙனம் நடைபெறும்? இலங்கை அரசை இராமன் வீடணனுக்கு கொடுத்து விட்டதாக சத்தியம் செய்தானே. அந்த சத்தியம் என்ன ஆவது? இராவணன் கொல்லப்படுவான், இலங்கை அழிந்துவிடும் என்று இலங்கணி, அநுமனிடம் கூறினாளே. அந்தக் கூற்றுப் பொய்யாவதா? 

ஒரு தினம் திடீரென்று தோன்றி தசரதனின் கலங்காத மனமும் கலக்கமுறும் வகையில் கட்டழகனாகிய இராமனைத் தன் வேள்வியைக் காக்கும் பொருட்டு தன்னுடன் அவனைக் கானகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோபத்தின் சிகரமாகிய கோசிகன் இரந்து நிற்க அதற்கு இசையாது மன்னன் மறுத்து நிற்பதைக் கண்ட அவனது குலகுருவாகிய வசிட்டர் வருங்காலம் உணர்ந்திருந்தவராதலின் அந்தக் கோசிகரின் கடுஞ்சினத்திற்கு அவனை ஆளாகாது இருக்குமாறு கேட்டுக் கொண்டு அந்த முனிவன் விரும்பியபடியே இராமனை அவனுடன் அனுப்பி வைக்குமாறு சொன்னார். அந்தக் குலகுரு அவ்வாறு கூறியதற்கு காரணமாயிருந்தது முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியே யாகும். தேவர்களின் துன்பம் துடைக்கத்தான் அயோத்தியில் தசரத புத்திரனாய் வந்து அவதரிக்கப் போவதாக பாற்கடலில் பள்ளிகொண்ட அந்தப் பரமன் கூறியருளிய இன்ப காட்சி அவர் மனக்கண்ணில் தோன்றி மறைந்ததுதான் அவருடைய கட்டளைக்குக் காரணமாயிருந்தது. இந்த உண்மையைத் தான் பாடிய இராமகாதையிலேயே கவிச்சக்கரவர்த்தி முன்கூட்டியே மிகத் தெளிவாகப் பாடி போந்தனன் என்பது இங்கே சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இதோ அந்தப் பாடல்.

“மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர்
நிசரத கணைகளால் நீறு செய்ய யாம்
கசரத துரகமாக் கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி”

இவ்வாறு கூறிய பாற்கடலில், பாம்பனைமேல் பள்ளிகொண்ட அந்தப் பரந்தாமனின் வாக்குறுதிகள் தான் பொய்யாக முடியுமா? இவ்வாறெல்லாம் பல கேள்விகளை அந்தப் பௌராணிகர் நம் மேல் தொடுப்பதை நாம் நன்கறிகிறோம். அவசரம் எதற்கு? பொறுத்துத்தான் பார்ப்போமே என்பது தான் அவருக்கு நாம் அளிக்கும் பதில். இப்பொழுது வரலாற்றிற்குச் செல்வோம்.

இராவணன் மனமாற்றத்தினால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த மாலியவான் அவனிடம் பேச ஆரம்பித்தான். “தசமுக! நான் முன்பே உனக்குச் சொல்லியிருந்தேன். பிற தாரத்தை விரும்ப வேண்டாம். அது உன்னை வீழ்த்திவிடும். சீதையைத் திருப்பி இராமனிடம் அனுப்பிவிட்டு அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள் என்று நான் உனக்கு நல்லுரைகள் வழங்கிய பொழுது நீ அவைகளை ஏற்க மறுத்துவிட்டாய். நான் மட்டுமா சொன்னேன்? உன் தம்பியாகிய வீடணன் சிறந்த அறிவாளி. அவன் உனக்கு வரப்போகும் விபத்துகளை தெளிவாக எடுத்துக்கூறி உன்னை இராமனின் கை வில்லிற்கு இலக்காக வேண்டாம் என்று நயமாகக் கேட்டுக் கொண்டான். நீ அவனுடைய சொற்களுக்கும் செவி சாய்க்கவில்லை. அதன் விளைவுகளை விபரீதப் போக்கை இன்றையப் போரில் நீ நன்கு தெரிந்து கொண்டாய். அதன் விளைவால் இப்பொழுது நீ மனம் மாறியும் இருக்கின்றாய். நீ குறையுணர்ந்து குணம் மாறி நிற்கும் உன் நிலைமை என்னைப் பரவசமூட்டுகிறது. மேகத்தினின்று எழும் மின்னலையும், தீயின் மிக்க ஒளியையும் நாணுறச் செய்யும், நீண்ட பளபளப்பான வேலாயுதத்தை உடைய வீரனாகிய என் பேரனே! நீ கூறும்,சொற்களுக்கு நான் மறுப்பென்ன சொல்லப் போகிறேன்”.

“உன் குடியில் மூத்தவனாகிய நானும் என்னைப் போன்ற பல பெரியோர்களும் வருங்கால முணர்ந்து உனக்கு நல்லுரை வழங்கிய போதெல்லாம் அவற்றை அறவே ஏற்க மறுத்துவிட்டாய். இப்பொழுது அவ்விரு மனிதர்களின் வீரத்தின் முன்னால் முடிகளைத் துறந்து வருத்தமுற்று நிற்கிறாய். இவ்விதமே நிகழ்ச்சிகள் மேலும் தொடர்ந்தால் உனது சுற்றம், துணை சேனையும் இழந்து, உன்னையும் நீ இழந்து நிற்பாய். இது சத்தியம்” என்று மாலியவான் தன் பேரனாகிய இராவணனுக்கு நல்லுரைகள் வழங்கினான். இந்த வரலாற்றுடன் இராவணன் மேற்கொண்ட மனமாற்றத்துடன் இராமகாதை முடிந்திருக்குமானால் மேற்கூறியவாறு அந்த பௌராணிகரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் நாம் திகைத்துப் போய் நிற்க நேரிடும். 

எதற்கும், எதிலும், எக்காலத்திலும் ஓரு திருப்பம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு ஏற்படும் திருப்பம் நன்மையிலிருந்து தீமைக்கோ அல்லது தீமையிலிருந்து நன்மைக்கோ திருப்பிச் செல்வதுதான் இயற்கை. அவ்வாறே இந்த இராம காதையைத் திருப்பி அதன் முடிவிற்கு நம்மை அழைத்துச் செல்ல ஒரு முக்கிய திருப்பம் அவசியமாயிற்று. அது என்ன திருப்பம். அந்த திருப்பம் யாருடைய உருவத்தில் வந்து நின்றது?

காஞ்சி திருவாரூர் போன்ற பெரிய தலங்களில் ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வரும் தேர் திருவிழாக்களை நம்மில் பலர் கண்டிருக்கிறோம். திருவாரூர் தேரானது அதன் நிலையிலிருந்து புறப்பட்ட அன்றே மறுபடி அதன் நிலைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் காஞ்சி வரதருடைய தேர் அவ்வாறே ஒரே நாளில் நிலைக்கு வந்து சேர்வது மிகவும் துர்லபம். அந்தத் தேரும் யாதொரு இடையூறுமின்றி ஓடிவந்து அதன் நிலையை அடைவதென்பது மேலும் துர்லபம். அத்தனைப் பெரியதேர் ஓடுவதற்கு அதன் சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அச்சாணிகள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் அதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதும். அவ்வப்பொழுது தேவைப்படும் பொழுதெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறவர்கள் அந்தத் தேருக்கு முட்டுக்கட்டைகள் போட்டு அதைப் பக்கவாட்டத்தில் இழுத்துச் செல்லாதிருக்குமாலும், மிக அவசியமான திருப்பங்களில் எளிதாக திரும்புமாறும்¢ முட்டுகட்டைகள் போட்டுக் கொண்டு அந்தத் தேரைச் செலுத்துவதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இராமகாதையிலும் அவ்வாறான முட்டுக்கட்டை ஒன்று தேவையாக இருந்ததை கம்பன் கண்டிருக்க வேண்டும். கம்பன் அவனுடைய சொந்த அபிப்பிராயத்தில் அந்த முட்டுக்கட்டையைத் தயாரித்திருப்பான் என்று எண்ணுவதும் ஏற்றதாகாது. இயற்கையாகவே அந்த முட்டுக்கட்டை வந்து அமைவதையும் அதன் உதவியால் இராமகாதையென்றும் தேர் ஒரு நல்ல திருப்பம் பெற்று தங்கு தடையின்றி மேலும் ஓடி கடைசியில் அதனுடைய நிலையான இருப்பிடத்தையும் சென்றடைகிறது.

இராவணனுக்கு இராம, இலக்குவர்களின் பேராற்றல் அவர்கள் பால் அச்சத்தை உண்டாக்கி அவர்களோடு மேலும் தொடர்ந்து போர் செய்யாமல் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டதை நாம் மேலே கண்டோம். இவ்வரலாற்றுடன் இராமகாதை முடிந்துவிட்டால் தேவர்களுக்கு திருமால் அளித்திருந்த வாக்கு என்னவாகும்? இராமன் தண்டகாருண்யவாசிகளான இருடிகளிடம் தான் இராவணனை அழித்து அவர்களுக்கு அருள்புரிவதாகச் சொன்ன சொற்கள் என்ன ஆவது? இராவண வதம் நடந்தேயாக வேண்டும். இவையெல்லாம் நடந்தேறினால்தான் இராமன் அயோத்திக்குத் திரும்பி தனது ஆட்சியைத் துவக்க முடியும். அதற்குத் துணை புரிவது போல் நல்ல சமயத்தில் ஒரு முட்டுக்கட்டையாக இராவணனின் முன்வந்து நின்றான் மகோதரன் என்னும் மாயைகள் பலவல்ல அவனுடைய மந்திரி.

இராவணனும் மாலியவானும் இதுகாறும் பேசிக் கொண்டிருந்தவற்றையெல்லாம் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மகோதரன் என்னும் அந்த மந்திரி கண்கள் கொள்ளிக்கட்டைகளைப் போல் விளங்க மிக்க சீற்றத்துடன் தன் அரசனைப் பார்த்து பேச ஆரம்பித்தான்.

“நீ நல்ல காரியம் செய்யத் துணிந்தாய். நீ யாரென்பதையும், உன்னுடைய வீரத்தையும், இதுகாறும் நீ செய்திருக்கும் மாபெரும் செயல்களையும் அறவே மறந்துவிட்டனை போலும். நரிகளாகிய அவ்விருநரர்களைக் கண்டு சிங்கமாகிய நீ பயந்துவிட்ட தன்மை பரிகாசத்திற்குரியதாயிருக்கிறது. நீ தீர்மானித்தபடி சீதையைக் கொண்டுபோய் அவனிடம் விட்டுவிட்டு அவன் காலடியில் விழுந்து வணங்கினாலும் உனக்கு ஏற்பட்டிருக்கும் பழியை துடைத்துவிட முடியுமா? முடியாது. மேலும் முன் வைத்த காலை பின் வைத்தல் என்பது உன் போன்ற பெரிய வீரர்களுக்கு அழகல்ல. நீ செய்ய விரும்புவதைப் போல் எந்த ஒரு வீரன் நடந்து கொண்டாலும் அவன் மீளா நரகத்தை அடைவான். உயிருள்ளவரை எதிரிகளை எதிர்த்து நின்று மார்பில் அடிபட்டு மாயும் வீரன் வீர சொர்க்கத்தை அடைவான் என்று உன்னைப் போன்ற அறிவாளிகளுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை”

“திரிபுராந்தகனாகிய அந்தச் சிவன் அவனது ஒரே சரத்தினால் திரிபுரத்தையும் எரித்தான். அத்தனை ஆற்றலுள்ளவன் அவன். அந்தத் திருமாலோ தனது திருவடி ஒன்றினாலேயே இந்தப் புவனங்கள் மூன்றினையும் அளந்துகொண்டான். அந்தத் திரிபுரம் எரித்த செல்வனும் உலகளந்த உத்தமனும் உன்னோடு போர் செய்து உனது ஆற்றலுக்கு ஆற்றாது அஞ்சியோடி மறைந்துவிட்டனர். இன்றோ உன்மனம் அந்த இருவரின் ஆற்றலுக்கு சிறிதும் எதிர்நிற்க முடியாத இந்தச் சிறு மனிதர்களைக் கண்டு அஞ்சுகின்றது. அதிசயத்திலும் அதிசயம். அன்று உன் கையினால் கயிலையை எடுத்தாயே. அதை இன்று நீ மறந்து விட்டாயா?”

“நீ நன்கு கற்றவன். உனக்குத் தெரியாத உண்மைகள் எதுவும் இருக்கமுடியாது. இன்று வென்றவர் நாளை தோற்பர். இன்று தோற்றவர் நாளை வெல்வர். வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருபவை. இன்று தாழ்ந்த நிலைமையில் இருப்பவர் நாளை உயர்ந்துவிடலாம். இன்று உயர்நிலையில் இருப்பவர் நாளை தாழ்ச்சியுற நேரிடலாம். இவையெல்லாம் உலக இயல்புகள், இவைகள் என் சொந்தக் கருத்தில்லை என்பதையும், கற்றறிந்த சான்றோர்களின் கருத்துக்களே இவைகள் என்பதையும் நீ நன்கறிவாய். உண்மை இவ்வாறிருக்க நீ அந்த இரு மனிதர்களின் வீரத்தைப் புகழ்ந்து பேசுவது என்னை கதிகலங்க வைக்கிறது”

ஏற்கனவே ஒரு முடிவிற்கு வந்து, அந்த தனது முடிவையும் மாலியவானிடம் இராவணன் கூறிக் கொண்டு வந்தவற்றையெல்லாம் மகோதரன் மறைந்திருந்து கேட்டிருந்தானாதலால் தன் வார்த்தைகளால் இராவணனின் மனதை விரைவில் மாற்றிவிட முடியாது என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். மேலும் தொடர்ந்தான். இப்பொழுது அவன் கூறவிருக்கும் உண்மைகள் தசமுகனின் மனதிற் சென்று பதிய வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகக் கருத்துடன் பேச ஆரம்பித்தான்.

“இராமனின் தேவியாகிய சீதையை நீ அவனிடத்தில் கொண்டுபோய்விட்டு விடுவதாகவே வைத்துக் கொள்ளலாம். நீ அவளிடம் வைத்திருக்கும் அன்போ அளவிடற்கரியது. உன் உயிரைப் போன்ற அந்தத் தேவியை நீ பிரிய நேரும்பொழுது உன் ஆவி உன்னைவிட்டு நீங்கிவிடும். அப்பொழுது, நீ என்ன சுகத்தைக் கண்டு விடப்போகிறாய். அல்லது உன்னைத்தேடி வந்த பழி ஓடி விடவாப் போகிறது இராவணன் வீரம் குன்றிவிட்டான். மனிதர்களின் முன் மண்டியிட்டான். அவனது ஆவியைப் போன்ற சீதையை தன் பகைவர்களிடம் திருப்பி அனுப்பிவிட்டான்” என்று உலகத்தார் சொல்லும் பழியை நீ எவ்வாறு தாங்குவாய். ஆதலின் நீ இறந்துபட்டாலும் பரவாயில்லை. போர் செய்து அதில் வீரமரணம் எய்துவதுதான் நீ அடுத்தபடியாக செய்யவேண்டிய காரியமே தவிர்த்து இவ்வாறு அயர்ந்திருத்தல் அல்ல. அரசனே! அச்சம் கொண்டவன் அவனையே அழித்துக் கொண்டவனாவான். அப்படிப்பட்ட அச்சத்தை இனி நீ விட்டுவிடு. அதனால் ஏற்பட்டுள்ள உன் கவலையை இக்கணமே மறந்துவிடு”

“இனி நீ ஒரு கணம் தாழ்த்தினாலும் அதுவும் உன் முடிவிற்கே காரணமாகும். வானரச்சேனை இலங்கையினுள்ளே ஒரு நொடியில் புகுந்துவிடும். நம் அரக்கர் சேனை அந்த குரங்குகளுக்கு மரங்களிலுள்ள பழங்கள் போலாகி விடும். தினந்தோறும்தான் தினகரன் கீழ்திசையில் உதயமாகி மேற்றிசையில் மறைகிறான். உலகப்பரப்பிலுள்ள நீர் நிலைகளிலுள்ள நீரை அவன் தனது வெப்பக் கிரணங்களால் உண்டு செல்கிறான். அவன் பெரும் நீர்பரப்பான கடலினின்றும் கூட சிறிதளவு தண்ணீரைத் தன்கிரணங்களால் பருகத் தவறுவதில்லை. அதற்காக அந்தக் கடல் அச்சமுற்று தன் அலைக்கரங்களை வீசி விளையாடாமல் இருக்கிறதா? அல்லது பேரிரைச்சல் செய்து தன் பேரானந்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா? இராமன் சூரியனாக இருக்கலாம். உன் சேனை அளப்பதற்கரிய ஆழ் பெருங்கடல். அவனுடைய வில்லாற்றலினால் நீ உனது பெரிய சேனையின் ஒரு சிறிய பகுதியை இழக்க நேரிட்டிருக்கலாம். அதற்காக நீ அஞ்சுவதா? தளர்வுறாதே! மறுபடியும் போர் செய்வதற்கு முயற்சி செய். உனக்கு வெற்றிகிட்டும்”

“என் தலைவனே! இலங்காபதி! நான் முன்னர் கூறியதை நீ மறந்திருக்க மாட்டாய். உன் வீரத்திற்கு இணையானவர்கள் என்று புகழப்பட்ட அந்த மூவருமே உன் ஆற்றலுக்கு தோற்று ஓடிவிட்டார்கள். தேவர்களையும் உனக்கு ஏவல் செய்யுமாறு பணித்து நீ மூன்றுலகங்களையும் ஆண்டுகொண்டு வருகின்றாய். இன்று உன்னை எதிர்த்து நிற்கும் இவ்விருமனிதர்கள் புல்லின் நுனியில் தோன்றி மறையும் பனித்துளிக்குச் சமமானவர்கள். இந்தப் பனித்துளிகளைக் கண்டா நீ அஞ்சுவது? அப்படித்தான் என்ன நேர்ந்துவிட்டது. உனக்கு இளையவனும், போரில் புறங்கொடாது பேராற்றல் உடையவனும், எவனுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மூவுலகத்தோரும் அஞ்சி நடுங்குவார்களோ அப்படிப்பட்ட அந்த கும்பகருணனை நீ மறந்துவிட்டாய் போலும். உடனே அவனை எழுப்பும் முயற்சியில் இறங்குவாய். அவனை போர்க்களத்திற்கு அனுப்பி வெற்றி வாகை சூடுவாய்” என்று அம்மகோதரன் சொல்லி முடித்தான்.

மகோதரனின் அந்த மொழிகள் இராவணனுக்கு போதையை ஊட்டின. தான் இதுகாறும் மாலியவானிடம் சொல்லிக் கொண்டிருந்தவைகளை அறவே மறந்துவிட்டான். பிறகு அவன் குணப்பெருங்குன்றாகிய கும்பகருணனை போருக்கு அனுப்பியதும்; அவன் அங்கு மாண்டதும், பின்னர் இராவணன் மட்டுமல்லாமல் அரக்கர் குலமே இராமன் கைவில்லால் அழிந்ததும் நாம் அறிந்த உண்மை.

இராமகாதை என்னும் தேர் தங்குதடையின்றி தன் நிலைக்கு வந்து சேருவதற்கு முட்டுக்கட்டை போடுபவனாக மக்கோதரனும், முட்டுகட்டைகளாக அவனது சொற்களும் விளங்குமாறு பாடல்கள் அமைத்துக் கொடுத்து கவியரசன் கம்பன் கவித்திறனை நாம் என்னவென்று சொல்வது! இதை இராம காதையில் ஒரு திருப்பம் என்று சொல்லுவது பொருத்தம் தானே?

Comments

Popular posts from this blog

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - கோமான் வெங்கடாச்சாரி