நால்வர் நடத்திய நல்ல நாடகம் - கோமான் வெங்கடாச்சாரி

தொண்ணுற்றாறு வண்ணங்கள் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட இராமகாதையில் தொள்ளாயிரத்திற்கு மதிகமான வினோத யுக்திகளை கையாண்டு நம்மை அவைகளின் அழகிலே மெய்மறந்து விடும்படியாகக் செய்கிறான். தான் எழுத எடுத்துக் கொண்ட சக்கரவர்த்திக் திருமகனின் சரிதைக்கேற்ப சம்பவங்களைப் புகுத்தி நம் சிந்தனைக்கு விருந்தூட்டும் அவனுடைய ஆற்றலைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சம்பவம் நல்லதோ கெட்டதோ அதையும் விமரிசையாக எடுத்துக் கூறி நம்மை வியப்பூட்டும் வினோதத்திறமை அந்தக் கவிச்சக்கரவர்த்திக்கே உரிய பாணியாகும்.

ஒரு எஜமானன். அவன் தன் வாழ்க்கையில் யாருக்குமே அடங்கி நடந்ததில்லை. மற்றவர் யாவரும் தன்னிடம் மிகுந்த பணிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கும் தன்மையுடையவன். மிகுந்த கோபக்காரன். யார் எதைச் சொல்ல வந்தாலும் குறுக்குக் கேள்விகள் கேட்டு அவர்களைத் திக்கு முக்காடச் செய்து அவர்கள் பயத்தினால் கூறும் பதிலைக் கொண்டே அவர்களிடம் குறை கண்டு, அவர்களைச் சினந்து கொள்ளும் சுபாவமுள்ளவன். அத்தன்மையுள்ள எசமானிடத்தில் நன்கு பழகிய வேலைக்காரர்கள் அவன் சுபாவமறிந்து அவன் கேட்பதற்கு முன்னமே எவ்வாறு பேசி அவனைத் திருப்தி செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்திருப்பார்களல்லவா? அதனால் அந்த எசமானர்களுடைய முன்கோபத்திற்கும் ஓர் அணைபோட்டு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் திறமைசாலிகளாகவும் ஆகி விடுகிறார்கள் அந்த வேலைக்காரர்கள்.

இது போன்ற ஒரு சம்பவத்தை நமக்குப்படம் பிடித்துக் காட்டுகிறான் கவியரசன் கம்பன், தன் இராமகாதையின் ஒரு பகுதியிலே. அதை இங்கு காண்போம்.

அசோகவனத்திலே சீதாபிராட்டியைக் கண்டு, அவளுக்கு ஆறுதல் கூறி, அவள் கொடுத்த சூடாமணியை பெற்று, தன் துகிலில் பொதிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினான் அஞ்சனையின் சிறுவன். தான் இலங்கைக்கு வந்து விட்டு ஒருவருமறியாமல் கள்வனைப் போல் வெளியேறுவதை அவன் தன் வீரத்திற்கு இழுக்காக எண்ணினான். மேலும் இராவணனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்ற ஒரு பேரவா அவன் மனதில் எழுந்தது. அதற்கு ஒரு உபாயமும் அவன் கருத்தில் எழுந்தது.

இராவணன் தன் கண்ணுக்குக் கண்ணாக போற்றிக் காப்பாற்றி வரும் அவனுடைய நந்தவனத்தையழித்தால், அரக்கர்கள் தன்னிடம் போருக்கு வருவார்கள். அவ்வாறு வரும் யாவரையும் கொன்றுவிட்டால் கடைசியாக இராவணனே வருவான். அப்பொழுது தன் ஆசையும் நிறைவேறும் என்று கருத்தில் எண்ணினான். உடனே செய்கையிலும் இறங்கி விட்டான். ஒரு குரங்கு பொழிலை அழிப்பதைக் கண்ட அந்தப் பொழிலின் காவலர்கள் அனுமனுடன் போரிட்டு தங்கள் உயிரை இழந்துவிட்டார்கள். அவர்கள் இறந்த விவரம் கேட்ட இராவணன் அனுமனிடம் போரிட பல கிங்கரர்களை அனுப்பினான். அவர்களும் அநுமனால் அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கேட்ட  இராவணன் தானே நேரில் போய் அந்த குரங்கைப் பிடித்து வருவதாக சபதம் செய்து அரியணையினின்று எழுந்தான். அது கண்டு பொறாத சம்புமாலி என்பவன் இராவணனைத் தடுத்து நிறுத்தித் தான் ஒருவனே போய் அந்தப் பாழுங்குரங்கைப் பிடித்து வருவதாகக் கூறி சூள் கொட்டிப் புறப்பட்டான். ஆனால் அவனுக்கும் கிங்கரர்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்பட்டது. 

அவன் மாண்டு போன விவரம் அறிந்த இராவணன் மிகுந்த சினத்துடன் அங்கிருந்த பஞ்ச சேனாதிபதிகள் எனச் சிறப்பாகக் கூறப்படும் ஐந்து சேனைத் தலைவர்களை அனுமன்பால் போருக்கு விடுத்தான். அவர்களும் மிகுந்த சீற்றத்துடனும் படைக்கலங்கள் பல பயின்ற சுத்த வீரர்களுடனும் அனுமனை பிடித்து வரச் சென்றார்கள். அவர்களும் யானை வாய் அகப்பட்ட கரும்பு போல அனுமன் கையால் அடிபட்டு மடிந்து விட்டனர். இங்குதான் கம்பன் தனக்கே உரிய பாணியில் ஒரு நான்கடிப் பாடலில் ஒரு நாடகத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

இராவணன் அரியணையில் அமர்ந்திருக்கின்றான். அவனுடைய பத்துத் தலைகளிலும் அணிந்திருந்த மோலிகள் பளப்பளக்கின்றன. இருபது நயனங்களும் எதையோ எதிர்பார்த்து துடிப்பதுபோல் வட்டமிடுகின்றன. இதுகாறும் வெற்றியைத் தவிர மற்ற எதையுமே கண்டிராத அவனது இருபது புயங்களும் ஆவேசத்தினால் கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன. தன் மதிப்பிற்குரிய, இதுவரை தோல்வியையே கண்டிராத பஞ்ச சேனாதிபதிகள் படையுடன் போனார்களே! குரங்கை பிடித்துவர; அவர்கள் இன்னும் ஏன் வரவில்லை? ஒருக்கால் குரங்கை அடித்துக் கொன்று போட்டுவிட்டு கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறார்களோ? அல்லது குரங்கை பிடித்துவிட்ட பெருமிதத்தில் இலங்கையின் வீதிகளிலே ஊர்வலமாக அந்தக்குரங்கை அழைத்து வருகிறார்களோ? அதுதான் கால தாமதத்திற்குக் காரணமாகியிருக்குமோ? என்றெல்லாம் யோசிக்கிறான். சபைக்கு வெளியே ஒரு சிறு ஆரவாரம் கேட்டால் கூட குரங்கு தான் வருகிறதோ என்று வாயில் பக்கம் நோக்குகிறான்.

அவ்வமயம் நான்கு அரக்கர்கள் அவைக்கண் நுழைகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் இராவணனின் மனதில் ஓர் அச்சம் உண்டாகிறது. அவர்கள் வெற்றி வாகை சூடி வந்திருப்பவர்களாக அவனுக்குத் தோன்றவில்லை. நடந்த விவரம் என்னவென்று கேட்பதற்கு வாயெடுக்கிறான். ஆனால் அந்த அரக்கர்கள் இராவணனிடம் நீண்டகாலம் வேலைசெய்து வந்திருப்பதால் இராவணகோபம் என்னவென்பது நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் அவர்கள் இராவணன் வாய் திறக்கு முன்னரே சேதி கூற ஆரம்பித்து விடுகிறார்கள்.

என்னதான் நெருங்கிப் பழகியவர்களாக யிருந்தாலும் தாங்கள் கூறப்போகும் செய்தி இராவணனுடைய கோபத்தை கொழுந்து விட்டெறியத்தான் செய்யும் என்ற எண்ணம் அவர்களுக்கு மேலிடுகிறது. அஞ்சி, அஞ்சி தடுமாற்றத்துடன் தங்கள் வாய்களை கைகளால் பொத்திக் கொண்டு இராவணனிடம் விவரம் கூற ஆரம்பிக்கிறார்கள். நால்வரில் ஒருவன் துணிந்து முன் வருகிறான். “தானையு முலந்தது”

குரங்கை பிடித்துவரச் சென்ற சேனை அடியோடு அழிந்துவிட்டது என்ற துயரச் செய்தியை பயந்தவாறே சொல்கிறான் அவன். இராவணனின் கண்கள் சினத்தினால்  சிவப்பேறின. சேனை தான் போய்விட்டது. தன் உயிருக்குயிரான சேனைத் தலைவர்கள் ஐவரும் எங்கே என்ற அடுத்த கேள்வியை அடுத்தப் படியாக இராவணன் கேட்பது நிச்சயம் என்று அறிந்த இரண்டாமவன் இராவணன் கேட்குமுன்னரே அவனுக்கு பதில் சொல்லி விடுகிறான். “ஐவர் தலைவரும் சமைந்தார்” என்று. பஞ்ச சேனாதிபதிகளும் மாண்டு போன உண்மையை கேட்டறிந்த இராவணனின் சினத்தீ மேலும் கொழுந்து விட்டெறிகிறது. அடுத்தப்படியாக இராவணன் தங்களை என்ன கேட்பான் என்று மூன்றாமவனுக்குத் தெரியும். குரங்கின் மீது படை கொண்டு போனீர்களே அதில் உங்களைத் தவிர மற்ற யாருமே திரும்பி வரவில்லையா என்று இராவணன் கேட்பான் என்று நிச்சயப்படுத்திக் கொள்கிறான். அதற்கு பதிலும் சொல்லி விடுகிறான். “தாக்கப் போனதில் மீள்வோம் யாமே” என்று.

அதாவது படையெடுத்துப்போன அத்தனை வீரர்களில் தாங்கள் நால்வர் மட்டுமே உயிர்பிழைத்து வந்திருக்கிறார்கள் என்று தெளிவாக்குகிறான் இராவணனுக்கு.

பார்த்தான் நான்காமவன். இது ஏதடா வம்பாகி விட்டது. தங்களைச் சிறந்த வீரர்கள் என்றெண்ணி இராவணன் தங்கள் நால்வரையும் குரங்கின் பால் போர் புரிய மீண்டும் ஏவி விடப்போகிறானே என்ற அச்சம் அவனை ஆட்டி வைக்கிறது. அவனை அறியாமையிலேயே அவனுடைய வாய் உண்மையை கக்கி விடுகிறது இராவணனனிடத்தில். “அதுவும் போர் புரிகிலாமை” என்று தாங்கள் அனுமனுடன் நடந்த போரில் கலந்து கொள்ளவேயில்லை. நெடுந்தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்ததால் தான் தாங்கள் தப்பி வந்து இராவணனிடத்தில் செய்தியைக் கூறமுடிந்தது என்ற உண்மை நிலையை கூறாமல் கூறிவிடுகிறான் அவன்.

“ஓகோ! உங்களைப் போன்ற கயவர்கள் நிறைந்த சேனையைப் பஞ்ச சேனாதிபதிகள் அனுமனுடன் போரிட அழைத்து சென்றதனால்தான் இந்த அவலநிலைமை ஏற்பட காரணமாயிருந்தது; என்று இராவணன் கோவித்துக் கொள்வான் என்று எதிர்பார்த்த நால்வரும் இப்பொழுது ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் பதறி கூறுகிறார்கள். “வானையும் வென்றுலோரை வல்லையின் மடிய நூறி” என்று. பஞ்ச சேனாதிபதிகள் அழைத்துச் சென்ற படைவீரர்கள் சாதாரண வீரர்களல்லர். முன்பொரு சமயம் மேகநாதன் இந்திரனை வென்று வர தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தானே அதே வீரர்கள் தாம் இப்பொழுதும் இந்தக் குரங்கைப் பிடித்துவர பஞ்ச சேனாதிபதிகளுடன் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை மிக எளிதில் அந்த குரங்கானது அடித்துக் கொன்று விட்டது என்ற உண்மையை நால்வரும் எடுத்துக் கூறுகிறார்கள்.

இனிக் கேட்க வேண்டியது என்ன இருக்கிறது? இராவணனுக்கு கோபம் கொந்தளிக்கிறது. கரங்கள் துடிக்கின்றன. இவ்வளவெல்லாம் கூறுகிறீர்களே இப்பொழுது அந்தக்குரங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் அடித்துக் கொன்றுவிட்டு இலங்கையை விட்டு தப்பிஓடி விட்டதா என்று இராவணன் தங்களை அடுத்தப்படியாகக்  கேட்பான் என்று எதிர்ப்பார்த்த அவர்கள்  அவனுக்குத் தகுந்த பதிலை, அவன் கேட்குமுன்னரே கூறிவிடுகிறார்கள். 

“ஏனையர் இன்மை சோம்பி இருந்தக்குரங்கு” என்று. அந்த வலியக்குரங்கு இலங்கையை விட்டு ஓடவில்லை. அது அங்கேயேத்தான் இருக்கிறது. ஆனால் அது சோர்ந்து போய் இருக்கவில்லை. தன்னிடம் போர் புரிவதற்கு மேலும் ஆட்கள் வரவில்லையே என்று சோம்பிப் போய் கிடப்பதாக கூறுகிறார்கள் அந்த நால்வரும். இது இராவணனின் கோபத்தை அதிகமாக்கி அடுத்தபடியாக அட்சகுமாரனை அனுமனிடம் போரிட அனுப்பத் தூண்டுகிறது இப்பொழுது அந்தப்பாடலை முழுதும் பார்ப்போம்.

“தானையுமுலந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார் தாக்கப்
போனதில் மீள்வோம் யாமே; அதுவும் போர் புரிகிலாமை
வானையும் வென்றுளோரை வல்லையின் மடியநூறி
ஏனையர் இன்மை சோம்பி இருந்தக்குரங்கு மென்றான்
(பஞ்ச சேனாதிபதிகள் வதைப்படலம்)


நான்கே அடிகள் கொண்ட இத்தனை சிறிய பாடலிலே நம் கண் முன்னால் ஒரு நாடகத்தையே படம் பிடித்து கட்டும் கம்பனுக்கு நாம் என்ன கைமாறு செய்தால் தான் போதாது!

Comments

Popular posts from this blog

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - கோமான் வெங்கடாச்சாரி

இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி