திரும்பி வாராத் தூது - கோமான் வெங்கடாச்சாரி
ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் அன்றொரு நாள், பச்சைமா மலைபோல் மேனியும், பவளவாயும் கமலம் போன்ற செவ்வியக் கண்களும் உடைய அந்த அரங்கத்து அரவணையானை கண்குளிரக்கண்டு விட்டு வந்திருந்திருந்தாள், அந்தப் பதினெண்பிராயம் நிறையாத பருவமங்கை. அவனுடைய பரந்தநெற்றியும், அகன்று நீண்டு செவ்வரி படர்ந்த கண்களும், கொவ்வைக் கனிவாயும், பரந்த மார்பும், நீண்ட கரங்களும் மூவுலகை, ஈரடியாக அளந்த திருவடிகளும் விரிஞ்சனை ஈன்ற வனசம் போன்ற திருநாபியும் அவளை அவன்பால் மயக்கமுறச் செய்தன. அவனை மறக்க எண்ணியும் அவளால் மறக்க முடியவில்லை. அதே ஏக்கத்தினால் உடல் மெலிய வானாள். எப்பொழுதும் அரங்கத்தாய், அரவணையாய், அழகிய மணவாளா என்றெல்லாம் தன்மனத்திற்குள்ளேயே சொல்லிச் சொல்லி ஏக்கம் கொள்வாள். உற்றார் உறவினர்கள் இடையே சொல்லிக் கொண்டால் தன் ஒரு தலைக் காதலைக் கண்டு பரிகசிப்பார்களோ என்று அவர்களிடமும் சொல்லாமல் இருந்து விட்டாள். எப்பொழுதும் ஒரு உணர்ச்சியற்ற நிலையில் அவள் இருந்து வந்தாள். அன்றும் அப்படித்தான். அரங்க மாளிகையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தலைவிக்கு அவள் பின்னால் அவளுடைய அருமைத் தோழிகள் வந்து நின்றது கூடத் தெரியவி...