Posts

அநுமனும் ஆழ்கடலும் - கோமான் வெங்கடாச்சாரி

        மனிதன் தான் செய்த செயல்களைக் கண்டு தானே வியந்து கொள்கிறான். ஆனால் இயற்கை அளிக்கும் அரும்பெரும் அற்புதங்களைக் கண்டு வியக்கத் தவறி விடுகிறான். சாதாரண மனிதனால் காண முடியாத இயற்கையின் அரிய செயல்கள் பரிணாமங்கள் அறிஞர்கள் கண்களில் அருமையாகப் படுகின்றன. அப்படிக்கொத்த இயற்கையின் அரிய சாதனைகளில் ஆழ்கடலும் ஒன்றாகும். தத்துவம் பேசும் தாயுமானவரும் தம் அரும்பெரும் பாக்களுள் ஒன்றில் “ஆழாழி கரையின்றி நிற்கவிலையோ” என்று கடல் கரையின்றி நிற்குந்தன்மையை வியந்து பாராட்டுகின்றார். கடலின் ஆற்றலிலே ஆயிரத்தில் ஒரு பங்கு என்று கூட மதிப்பிடத்தகாத ஆறுகள் அவ்வப்போது பருவகாலங்களில் தங்கள் இருக்கரைகளையும் உடைத்து கொண்டு எத்தனையோ ஊர்களையும் உயிர்களையும் அழித்துவரும் செயல்களை நாம் கேட்டறிகிறோம். அவ்வாறிருக்க, இத்துனை பெரிய அலைகடல் கரையின்றி நிற்கும் தன்மையைக் காணும்போது, நன்கு கற்றறிந்த சான்றோர்களின் அடக்கத்திற்கும் சிறிதளவே கற்ற புல்லறிவாளர்க்கும் இடையே யுள்ள வேறுபாட்டை நம் கண் முன்னால் தெரிய வைக்கிறது எனக்கூறலாம். கல்வியிற் சிறந்த கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இக்கடலின் ஆற்றலையும...

கம்பன் காட்டும் ஓர் இரவு பகல் - கோமான் வெங்கடாச்சாரி

        ஒரு பொருளை நாம் காண்பதற்கும் ஒரு கவிஞன் காண்பதற்கும் வேற்றுமை இருக்கத்தான் செய்யும். நீர்ப்பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் கோடையில் பெருக்கற்று அடிசுடும் மணற்பரப்பாகக் காட்சியளிப்பதையும் பசுமை நிறைந்த நிழல் தரும் மரங்களையும் பசையற்று ஒட்டி உலர்ந்த மரங்களையும் மற்ற இயற்கை நமக்கு அளித்திருக்கும் சாதனைகளை நாம் நம் வாழ்கையில் தினந்தோறும் தான் கண்டு கொண்டிருக்கிறோம். அவைகளைக் காணும் நமக்கு கருத்துக்கள் ஒன்றும் எழுவதில்லை. ஆனால் அதேப் பொருள்களைக் காணும் கவிஞர்கள் அவைகளிலுள்ள கருத்துக்களைக் கண்டு தாங்கள் மட்டும் அனுபவிக்காமல் நம் போன்ற பாமரர்களுக்கும் அக்கருத்துக்களை விளக்கத் தவறுவதில்லை. நாம் காணும் ஆற்றைத்தான் ஒளவையும் கண்டிருக்க வேண்டும். ஆற்றில் நிறைய நீர் இருந்த பொழுதும் அது கோடையில் வறண்டு நீரற்ற நிலையில் இருந்த பொழுதும் கண்டிருக்கக் கூடும். அவ்வாறு நீரற்ற நிலையிலும் தன் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் அந்த ஆற்றின் பெருந்தன்மையையும் கண்டிருக்கவேண்டும். உடன் அவருக்கு அதில் ஒரு கருத்துத் தோன்றியிருக்க வேண்டும். அதை வெளிப்படையாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார். நல்ல கு...

கூவத்தின் சிறுபுனலும் அளப்பரும் ஆழ்கடலும் - கோமான் வெங்கடாச்சாரி

       அளத்தற்கரிய ஆழங்காண முடியாத, பெரும் கடல். அதை எடுத்துக் கையாளாத இலக்கியக் கர்த்தாக்களே கிடையாதென்று சொல்லலாம். அந்த அலை கடலிலே காணும் அரும் பெரும் குணங்களை ஆண்டவனோடு ஒப்பிட்டு கூறுவார்கள் பெரியோர். “கருமேக நெடுங்கடல் காரனையான்” என்று இராமனை தான் இயற்றிய இராமகாதையில் கம்பன் குறிப்பிடுகிறான். கடல் வண்ணனென்றும், ஆழிவண்ணனென்றும் பல பெரியோர்கள் ஆண்டவனை வருணித்து உள்ளார்கள். கடல் தன் நிறத்தினால் மட்டும் ஆண்டவனை ஒத்ததாக இருந்தால் அதற்கு அத்தனை சிறப்பு ஏற்பட்டிருக்க நியாயமில்லை. ஆண்டவன் எங்கும் நிறைந்தவன். எல்லாவிடங்களிலும் பரந்து இருக்கிறான். அவனில்லாமல் அணுவும் அசைய முடியாது. இத்தனை சிறந்த குணங்களிருந்தாலும் அவன் பக்தர்களுக்கு மிகவும் எளியவனாக ஆகிறான். எளியவன் மட்டுமென்ன. சில சமயம் அவர்களுக்கு அடிமையாகவும் ஆகிவிடுகிறான். அத்தன்மை அவனுடைய சிறந்த குணத்தைக் காட்டுகிறது. அதே போன்று, உலகத்தில் பூமிப்பரப்பைக் காட்டிலும் கடற்பரப்பு அதிகமென்பது நாம் கண்டும், கேட்டும் அறிந்த உண்மையாகும். அதில் வசிக்கும் ஜீவராசிகள் எத்தனை? அதிலே மறைந்து கிடக்கும் அரும் பெரும் பொருள்கள்...

முரண்பாடுகள் - கோமான் வெங்கடாச்சாரி

     ‘முரண்பாடுகளின் மொத்த தொகுப்பே மனித வாழ்க்கை. முரண்படுவைகளிலிருந்து பிறப்பதே முழுமையான இலக்கியம். முரண்பாடுகளின் சிறப்புகளே மனித வாழ்வைப் பரிமளிக்கச் செய்கிறது’ - ஏதோ ஒரு ஆங்கில கவிஞன் கூறியதைப் படித்ததுண்டு.   தொலைக்காட்சியிலே ‘தமிழக இசை மகான்கள்’ குன்னக்குடியும் வேதவல்லியும் ஸ்வரங்களின் சிறப்பையும், தியாகையரின் கீர்த்தனைகளையும் எடுத்துக் கூறி விவரிக்கின்றனர். ‘நிதி சால சுகமா’- கேட்பதில் தான் என்ன சுகம், தியாகையர் முத்துசாமி தீட்சதரின் மணிப் பிரவாள கீர்த்தனைகள்- இப்படி அரைமணி நேரம் இசையில் மூழ்கியிருந்த நான் - ஏதோ பிதற்றியிருக்க வேண்டும். அருகிலிருந்த என் மகள் ‘அப்பா, நீ சரியான முரண்பாடுகள் உள்ளவர். ஒருநாள் ஜேசுதாஸில் மூழ்குகிறீர்கள். மறுநாள் SPB திடீரென்று ஜாக்சன், மடோனா, போதாக்குறைக்கு சினிமா பாட்டுகள். உன்னைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. “Highly Contraversial” என்றாள். யோசித்தேன். நண்பர்கள் கூட என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு; ‘உன் அரசியல் என்ன? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே. ஒருநாள் எங்களைத் தாக்குகிறாய். மறுநாள் அவர்களைத் தாக்குகிறாய், ...

பக்தனா! பரமனா! - கோமான் வெங்படாச்சாரி

     “பக்தனா? பரமனா? இருவரில் எவன் பெரியவன் என்று ஒருவர் கேட்டார். பாரெல்லாம் படைத்து அதைக் காத்து வரும் பரமன்தான் பெரியவன் என்ற உண்மையை யாரால்தான் மறுக்கமுடியும் என்று சொன்னார் மற்றவர். இருக்கலாம்; ஆனால் அந்தப் பரமனும் தொண்டர்தம் உள்ளத்தடக்கந்தானே என்று எனக்கு சொல்லத் தோன்றிற்று. ஆம். பாரிடந்து, பாரையுண்டு, பாருமிழந்து, பாரளந்து, பாரையாண்ட, பேரருளானாகிய நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பியாகிய அந்த ஸ்ரீமந் நாராயணன் மூவுலகத்தும் உள்ள ஜீவராசிகள் அத்தனையிலும் உயர்ந்தவன் என்பது ஒரு வகையில் உண்மையேயாயினும் அந்தக் கடல் நீலவண்ணன், கருணைக்கடல் தொண்டர்களின் உள்ளங்களில் நித்தியவாசம் செய்வதைத்தான், பாற்கடலில் வாழ்வதைக்காட்டிலும் பெரிதாகக் கருதுகிறான் என்றால் அது தொண்டர்களின் பெருமையைத்தானே சுட்டிக்காட்டி   நிற்கின்றது. பரமனை பக்தியோகம் ஒன்றினால்தான் கட்டுப்படுத்தமுடியும். அந்தக் காரியம் பரம பக்தர்களால்தான் செய்ய முடிந்த ஒன்றாகும் என்பதை நாம் நமது நாட்டு அரும்பெரும் பொக்கிஷங்களான புராண, இதிகாசங்கள் வாயிலாக அறிந்திருக்கிறோம். செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும், நீர்பூத்த தி...

வேய் தந்த முத்தம் - கோமான் வெங்கடாச்சாரி

மண்ணகத்தேயுள்ள மக்கள் தம் துயரைப் போக்கவும், அதைக்கண்டு விண்ணகத்தேயுள்ள விரிஞ்சன் முதலானோரும் வியந்து நோக்கவும், பொன்னி வளங்கொழிக்கும் பூம்புனலரங்கம். கங்கையிற் புனிதமாய காவிரியின் நடுவே உதயனும் வானவீதியில், தன் வழிச் செல்ல இயலாதவாறு தடுத்து நிற்கும் நெடிய மதில்கள். அவையென்ன சாதாரணமானவையா? ஆடகச் செம்பொன்னாலானவை அவற்றின் எண்ணிக்கைதான் என்ன? ஒன்றா? இரண்டா? ஏழு நெடும்மதில்கள். அதன் நடுவே ஓர் அரங்கம். அதுதான் திருவரங்க பெரிய கோயில். மதில்கள் ஏழுடையது என்று கூறும் போதே அது ஒரு சிறந்த கோட்டை என்பது சொல்லாமலே விளங்குகிறதல்லவா. அதற்குப் பெயர்தான் அரங்க மாளிகை. அந்த மாளிகையின் கதவுகளைப் பற்றிப் பேசவும் வேண்டுமா? ஆணிப் பொற்றகடுரிஞ்சும் மணிகள் பொருந்திய கதவுகள். அவைகளை நிலையாகத் தாங்கும் நீண்ட நெடிய வாயில்கள். இவையெல்லாம் இவ்வாறென்றால் அந்த மாளிகையின் விமான வனப்பைச் சொல்ல வேண்டுமா? மாணிக்க வெயில் பரப்பும் வயிரமணி விமானம் அது. அதன் கீழ், மாளிகைக்குள் பச்சைமாமலை போல் மேனியும், பவழ வாயும், தாமரை நிகர்த்த தடங்கண்களும் பொருந்தி, சீர் பூத்த செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும் நீர்பூத்த திருமகளு...

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது. கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்...