இஃதறிந்தாள் சீறாளோ - கோமான் வெங்கடாச்சாரி
தந்தை தாய் வாக்கிய பரிபாலனம் செய்யும் பொருட்டு தனக்கென தன் தந்தையால் அளிக்கப்பட்ட தரணியைத் தன் தம்பிக்காக விட்டு விட்டுத் தம்பி இலக்குவனுடனும் தன்னுயிர் போன்ற தகைசால் பத்தினி சானகியுடனும் சித்திரக்கூடத்திலிருந்து புறப்பட்ட தயரத குமாரனாகிய இராமன் தாபம் மிகுந்த கானகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் முதன்முதலாக எதிர்ப்பட்டவன் விராதன். விராதன் ஓர் இயக்கன். அவனது காம உணர்ச்சியினால் ஏற்பட்ட அறிவீனத்தால் அரக்கனாக பிறக்கும்படி சாபம் பெற்றவன். பின்னர் நிகழவிருக்கும் இராவண வதத்திற்கு சூர்ப்பனகை எவ்வாறு மூலகாரணமாக வந்தமைந்தாளோ அதேபோல் அரக்கர் குல அழிவிற்கு அடிகோலுபவனாக வந்தமைகிறான் விராதன் என்று கூறலாம். விராதன் இராம இலக்குவர்களைத் தன் வலிய திரண்ட தோள்களில் ஏற்றிக்கொண்டு ஆகாயமார்க்கத்தில் செல்வதைக் கண்ட சனககுமாரி சஞ்சலமுற்றுக்கதறியழ, அதுகண்ட இலக்குவனன் தன் அண்ணணாகிய இராமனிடம் சீதையின் துயரைச்சொல்லி விளையாடியது போதும், இனியும் விளையாடவேண்டாம் என்று வேண்டுகிறான். வினைவிளைகாலம் வந்ததையறிந்து கொண்ட அண்ணல் தன் திருவடியால் விராதனை அழுத்த அவனும் பேரிடியால் தாக்குண்ட பெருமலைபோல் தரையில் வீழ்கிறான். அவ்...