Skip to main content

தேவரும் அழுதனர் - கோமான் வெங்கடாச்சாரி

அசோகவனத்தை அனுமன் அழித்துவிட்டான் அவனுடவன் போரிடச்சென்ற அத்தனை அரக்கர் சேனையும், சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள் முதலானவர்களும் அந்த அனுமானால் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற எதிர்பாராத துயரச் செய்தி அரியணையில் வீற்றிருந்த தசமுகனை கலங்க வைத்துவிட்டது. அரியணையினின்றும் வெகுண்டெழுந்தான். தானே நேரில் சென்று அந்த அற்பக்குரங்கை பிடித்து வருவதாகச் சூள் கொட்டிப் புறப்பட்டான் இலங்காதிபதி.

அவனைத்தடுத்து நிறுத்தினான் அந்த அவைக்கண் இருந்த அவனுடைய அருமை மகன் அட்சகுமாரன் என்பவன், “அப்பா தாங்கள் செய்யத் துணிந்த செய்கை சற்றும் பிடிக்கவில்லை. தங்களுடைய வீரமென்ன? மாட்சியென்ன? வந்திருப்பதோ ஒரு அற்பக்குரங்கு. அதைப் பிடித்து வர தாங்களே புறப்பட்டுச் செல்வதானது இலங்கையிலே இனி வீரர் எவருமேயில்லை என்று நம்முடைய பகைவர்களாகிய தேவர்கள் கூட நகைக்கும்படி அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பையல்லவா அளித்து விடும். நான் ஒருவன் இருப்பதை மறந்து விட்டீர்களா? முன்னொரு சமயம் வானுலகம் சென்று தேவேந்திரனை வென்று வருமாறு என் அண்ணன் மேகநாதனை அனுப்பினீர்கள். அதுசமயம் நானும்தான் அந்த அவைக்கண் இருந்தேன். என்னை அனுப்பாமல் என் அண்ணனை அனுப்பினீர்கள். அவரும் சென்று இந்திரனை ஜெயித்து இந்திரஜித்து என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டார். எனக்கு அப்பொழுது அந்த வாய்ப்பை அளிக்கத் தவறிய தாங்கள் இப்பொழுது இக்குரங்கை பிடித்து வரும் வாய்ப்பையாவது எனக்கு மனமுவந்து அளிக்கக் கூடாதா? இப்போதே உத்திரவிடுங்கள். காற்று போல் விரைந்து சென்று அந்தக் கடுவனைப் பிடித்து வந்து தங்கள் கண்முன் நிறுத்துகிறேன். விடை கொடுங்கள் அப்பா” என்று இறைஞ்சினான்.

அட்சகுமாரனனின் வேண்டுகோள் இராவணனுக்கு சரியாகவே தோன்றிற்று. வேண்டிய படைபலத்துடன் சென்று அந்தக் குரங்கை பிடித்து வருமாறு அட்சகுமாரனுக்கு  விடைகொடுத்தனுப்பினான் இராவணன்.

அட்சகுமாரன் பெரும் சேனையுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட அனுமன் அவனை முதலில் இராவணனாக இருக்குமோ என்று சந்தேகித்தான். நெருங்கிப் பார்த்தபொழுது அவனுடைய சந்தேகம் தெளிந்தது. இராவணனாக இல்லாவிட்டாலும் அவனுக்குள்ள வீரம் தன்னுடன் போரிட வரும் இவனுக்கும் இருக்க வேண்டும் என்று அட்சகுமாரனனின் தோற்றத்தைக் கொண்டே அறிந்து கொண்டான் அனுமன். அதனால் சிறந்த முறையிலே அட்சகுமாரனுடன் போர்புரிந்தான் அஞ்சனை சிறுவன். அதன் விளைவு அட்சகுமாரனும் அனுமனால் அடித்துக் கொல்லப்பட்டான். அவனுடன் வந்த சேனையும் அனுமனின் ஆற்றலுக்கு முன் நிற்கமுடியாமல் அழிந்துவிட்டது. அட்சகுமாரன் இறந்து விட்ட செய்தி காட்டுத்தீபோல் இலங்கையின்  மூலைமுடுக்குகளெல்லாம் பரவியது. அட்சகுமாரனின் பேரில் இராவணனுக்கு மட்டுமல்ல. அந்த இலங்கை வாழ் அரக்க அரக்கியர் யாவர்க்குமே அதிகப் பிரியம். அவன் மாண்டுபோன செய்தியை கேட்ட இலங்காவாசிகள் அடைந்த நிலைமையை கம்பன் தனது சிறியதொரு பாடலில்,

   “தாவருந் திருநகர் தையாலார் முதல்
    ஏவரும் இடை விழுந்திரங்கி யேங்கினார்”

என்று இரண்டடிகளில் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான்.

அட்சகுமாரன் இறந்தது பற்றி ஒருவர் இருவரல்ல. இராவணன் மண்டோதரி மட்டுமல்ல, இந்திரஜித், கும்பகர்ணன் மட்டுமல்ல. ஆனால் இந்த இலங்கை என்னும் பெரும் மூதூர் எங்குமாக நிறைந்திருந்த யாவரும் அழுது புரண்டு நிலை குலைந்த நிலைமையை நமக்குக் கம்பன் காட்டுகிறான். இதிலென்ன அதிசயமிருக்கிறது? இராவணனுடைய மகன் அட்சகுமாரன். அதாவது இலங்கையின் இளவரசன். அவன் மரணத்தைக் குறித்து அரக்கரோ, அரக்கியோ அழுது அரற்றுவது இயற்கைதானே. இதிலென்ன விந்தை என்று வாசகர்கள் கருதலாம். இதில் விந்தை இல்லைதான். அடுத்த இரண்டடிகளில் நாம் நம் கருத்தை ஊன்றினால் அங்கே அந்த கம்பன் காட்டும் அற்புத விந்தையைக் காணலாம். அதைப் பார்ப்போம்.

இலங்கையெங்கும் ஒரே அழுகை. இராவணனின் செவிகளிலும் இந்த அரற்றல் கேட்டது. காரணமும் அறிந்து கொண்டான். அட்சகுமாரன் அறைப்புண்டு விட்டான் என்ற அவலச்செய்தி அவன் இருபது செவிகளிலும் நாராசமாய்ப் பாய்ந்தது. அவனது கோபம் பொங்கியெழுந்தது. அட்சகுமாரனை வதைத்தது யாராயிருப்பினும் சரி. இதே நொடியில் சென்று அவனை அழிப்பேன் என்று சினம் கொள்கிறான். பார்த்தனர் அங்கிருந்த தேவர்கள். அட்சகுமாரன் இறந்தது பற்றி அந்த தேவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். இருப்பினும் அந்த உணர்ச்சியை அவர்கள் எவ்வாறு வெளிக்காண்பிக்க முடியும்? தங்கள் உண்மை உணர்ச்சி இராவணனுக்குத் தெரிந்துவிட்டால் தங்களை உயிருடன் வைக்க மாட்டானே. அவன் என்ற பயம் அவர்களுக்கு. அதனால் அவர்களும் அரக்கர் அரக்கியரோடு சேர்ந்து நின்று இராவணன் அவைக்களத்தில் அவன் எதிரில் அழுதார்களாம். அதைக் கம்பன் தேவரும் அழுதனர் என்று சுட்டிக் காட்டுகிறான். அதேசமயம் அவர்கள் மனதில் எக்காளமிட்ட ஆனந்தத்தையும் நமக்கு குறிப்பாக எடுத்துக் காட்டத் தவறவில்லை அவன், “களிக்கும் சிந்தையார்” என்ற சொற்றொடரால்.  அவர்கள் அவ்வமயம் அவர்கள் மனதில் கொண்டிருந்த ஆனந்தத்தை நமக்கு அங்கையங்கனிபோல் காட்டுகின்றான். ஆமாம் இதில்தான் என்ன ரசனையிருக்கிறது? அட்சகுமாரன் தங்களுக்கு எதிரி. அவன் இறந்துவிட்டான், அது அவர்களுக்கு உண்மையிலேயே ஆனந்தத்தைத்தான் அளிக்கும். ஆனால் அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து இராவணின் முன் அழாமல் நின்றால் அவனது கோபத்திற்கு ஆளாக வேண்டி நேரிடும். அதனால் உள்ளத்தில் மகிழ்ச்சியிருந்த போதிலும் தாங்கள் அனுதாபப்படுவதாக காட்டிக் கொண்டார்கள். தேவர்கள், இதிலென்ன வியப்பு? என்று யாரும் கேட்கலாம். ஆனால் இதிலும் உலகியல்பை நன்கறிந்த கம்பன் நமக்கு அந்த உண்மையை எடுத்துக்காட்டி நம்மையும் எச்சரிக்கிறான் என்பது இங்கே விளக்கம். இது நிற்க. கம்பன் நமக்கு அளிக்கும் விருந்தாகிய அவனது உயர்ந்த கருத்தை அவனது இந்தப்பாடலின்  மூன்றாவது அடியில் நம் கவனத்தைச் செலுத்தி அதனை நன்கு ரசிப்போம்.

தேவர்கள் அழுதது வெளிப்படை. அவர்கள் உள்ளத்திலோ ஒரே ஆனந்த வெள்ளம். ஒரு மனிதனுக்கு இருவகை உணர்ச்சிகள் ஒரே சமயத்தில் தலைதூக்கும்போது இரண்டு உணர்ச்சிகளும் ஒன்றையன்று மோதி எந்த ஒரு உணர்ச்சியையுமே தனித்து நின்று இயங்கும் தன்மை அற்றுவிடும். ஒரே சமயத்தில் உள்ளே மகிழ்ச்சியும், வெளியே அழுகையும் தோன்ற எவராலும் நடிப்பது கடினம். அப்படியே நடிக்க முற்பட்டாலும் அவர்களது உள்ளக்கிடக்கையை அவரதுமுகம் வெளிப்படுத்தி விடும். இதை நமக்கு விளக்க முற்படும் தெய்வப் புலவரும்,

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்”

என்று விளக்கியுள்ளார். இதையறியாதவனா கம்பன்?  தான் எடுத்துக் கொண்ட கதைப்போக்கையும் மாற்றாது அதனுள் நின்ற கருத்தையும் மாற்றாது கனிவகைச் சாறுபோல் நமக்கு ஒரு காவியம் அமைத்துத் தருகிறான் அவன். தேவர்கள் அழுதார்கள். ஆனால் அவர்கள் இராவணன் முன் நின்று கொண்டு அழவில்லை. அவனது கால்களிலேயே அவர்கள் தங்களது முகங்களை பொதிந்து கொண்டு அழுதார்களாம். கண்களினின்றும் மிகுந்த ஆனந்தத்திலும் கண்ணீர் வரலாம். மிகுந்த துன்பத்திலும் கண்ணீர் பெருகலாம். தங்களது கண்ணீரினால் இராவணன் அவர்களது உள்ளக் கிளர்ச்சியைக் கண்டு கொள்ள முடியாது. முகம் ஒன்று தான் தங்கள் உள்ளத்திலுள்ள மகிழ்ச்சியைக் காட்டிக் கொடுத்துவிடமுடியும். தங்கள் முகங்கள் மறைய இராவணனது கால்களிலே விழுந்து புலமபுவத போல் நடித்தால் மன்னனால் அவர்களது உள்ளக் கிடக்கையை அறிந்த கொண்டிட முடியாது. எனவே தான் கம்பன் தன் இறுதி இரண்டு அடிகளில் ‘கவல் கான்மிசை வீழ்ந்து காலன்மா தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தை பார்”  என்கிறான். மீண்டும் ஒருமுறை முழுப்பாடலை படித்தப் பார்த்திடுவோம்.

“ தாவருந்த திருநகர் தையலார் முதல்
 ஏவரும் இடை விழுந்திறங்கி யேங்கினார்
 காவலன் கான்மிசை வீழ்ந்து காலன்மா
 தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தைபார்”

கம்ப மேதையின் ஆழ்கடலுள் இது ஒரு நாம் கண்டெடுத்த முத்தல்லவோ!

Comments

Popular posts from this blog

இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி

“இராமகாதையில் ஒரு திருப்பமா?” என்று இந்த கட்டுரையின் தலைப்பைக் காணும் வாசகர்கள் அதிசயத்துடன் என்னைப் பார்த்து கேட்பது என் செவிகளில் விழத்தான் செய்கிறது. கவியாற்றல் படைத்த கம்பனது இராமகாதையில் அப்படிப்பட்ட திருப்பம் என்ன இருக்கிறது? என்றும் பலர் எண்ணலாம். அவர்களுக்கு இந்நூலை எழுத முற்பட்ட நான் விடையளிக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்பதை நன்கு உணராமலில்லை.
ஆம். இராமகாதையில் பல திருப்பங்கள் இருப்பதை, நாம் அதை ஊன்றிக் கவனிக்குமளவில் அறிந்துகொள்ள இயலும். அவைகளுக்கு பல சான்றுகள் உள. அவைகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு கூர்ந்து நோக்குவோம்.
முதலாவதாக தசரத சக்கரவர்த்தியால் தீர்மானிக்கப்பட்டு மறுநாள் காலை நடக்கவிருந்த இராம பட்டாபிஷேகம் அதற்கு முதல் நாள் இரவே கூனியின் சூழ்ச்சியால் நிறைவேறாமல் நின்றுவிடுவதை ஒரு திருப்பம் என்றே கொள்ளலாம். தசரதனின் திட்டப்படி இராம பட்டாபிஷேகம் அன்று நடந்திருக்குமானால் இராமன்  காட்டிற்குச் செல்வதோ, அங்கு சானகியை பிரிய நேரிடுவதோ, அதன் நிமித்தம் இராவணனை அவனுடைய குலத்தோடு வேரறுப்பதோ நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும்.
இராவணனா…

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது.
கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்கு மாறுப…

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - கோமான் வெங்கடாச்சாரி

“அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது”- என்பது ஒளவையின் அருள்வாக்கு. மானிடராய் பிறந்த யாவருமே மனிதர்களாக மாட்டார்கள் என்பது தொல்காப்பியரின் துணிந்த முடிவாகும். ஐம்புலன்களையும் வென்று அறவழிச் செலுத்தும் ஆறாவது புலனாகிய அறிவை ஆளுமைபடைத்தவர்தான் மக்கள். மற்றையோர் மாக்கள் என்பது அன்னாரின் கொள்கை. அவரைக் காட்டிலும் விளக்கம் தருவதில் ஒருபடி மேலே சென்றார் தாயுமானவப் பெருந்தகை. “மனிதரிலே மரங்களுண்டு, மிருகமுண்டு, பட்சியுண்டு மனிதரிலே மனிதருண்டு”என்றெல்லாம் நமக்கு விளங்குமாறு பாடியருளிப் போந்தார் அவர்தம் பாடலிலே. இவர் தம் கருத்தை மேலும் நமக்கு விளக்கமாக்கித் தருகிறார் ஒளவை மூதாட்டியார். அது என்ன நீண்ட வலுத்த கிளைகளைக் கொண்டு ஓங்கிவளர்ந்திருக்கின்றனவே மரங்கள். அவைகள் உண்மையிலேயே நல்ல மரங்களல்ல என்பது அவரது கொள்கை.

      “கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே நிற்கும்
      அவையல்ல நல்ல மரங்கள்”

இதுதான் அன்னார் பாடிய பாடலின் முதலிரண்டு அடிகள். நல்ல பெரிய உருவத்தில் நீண்ட மரங்கள் மக்கள் நடமாட்டமற்ற பெருங்காடுகளில் தானே அதிகமாகக் காணப்படும். நாட்டிலா காணப்படும்? என்று நம் போன்றோர் எண்ணத்தான் தோன்றும். நமது…