Skip to main content

கம்பன் காட்டும் ஓர் இரவு பகல் - கோமான் வெங்கடாச்சாரி

        ஒரு பொருளை நாம் காண்பதற்கும் ஒரு கவிஞன் காண்பதற்கும் வேற்றுமை இருக்கத்தான் செய்யும். நீர்ப்பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் கோடையில் பெருக்கற்று அடிசுடும் மணற்பரப்பாகக் காட்சியளிப்பதையும் பசுமை நிறைந்த நிழல் தரும் மரங்களையும் பசையற்று ஒட்டி உலர்ந்த மரங்களையும் மற்ற இயற்கை நமக்கு அளித்திருக்கும் சாதனைகளை நாம் நம் வாழ்கையில் தினந்தோறும் தான் கண்டு கொண்டிருக்கிறோம். அவைகளைக் காணும் நமக்கு கருத்துக்கள் ஒன்றும் எழுவதில்லை. ஆனால் அதேப் பொருள்களைக் காணும் கவிஞர்கள் அவைகளிலுள்ள கருத்துக்களைக் கண்டு தாங்கள் மட்டும் அனுபவிக்காமல் நம் போன்ற பாமரர்களுக்கும் அக்கருத்துக்களை விளக்கத் தவறுவதில்லை. நாம் காணும் ஆற்றைத்தான் ஒளவையும் கண்டிருக்க வேண்டும். ஆற்றில் நிறைய நீர் இருந்த பொழுதும் அது கோடையில் வறண்டு நீரற்ற நிலையில் இருந்த பொழுதும் கண்டிருக்கக் கூடும். அவ்வாறு நீரற்ற நிலையிலும் தன் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் அந்த ஆற்றின் பெருந்தன்மையையும் கண்டிருக்கவேண்டும். உடன் அவருக்கு அதில் ஒரு கருத்துத் தோன்றியிருக்க வேண்டும். அதை வெளிப்படையாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார். நல்ல குடிப்பிறந்தவர்கள் வறுமையடைந்தாலும் தங்களால் இயன்ற உதவியை செய்யத்தவற மாட்டார்கள் என்ற உண்மையை அதனுடன் ஒப்பிட்டு அவர் எடுத்துக் காட்டிய பிறகுதான் நமக்கு விளங்குகிறது. 

கவையாகிக் கொம்பாகி காட்டகத்தில் நிற்கும் மரங்களை நாம் கண்டதுண்டு. அதே மரங்கள் கவிஞர் கண்களில் சபை நடுவே நீட்டோலை வாசியா நின்ற ஒரு குறிப்பறிய முடியாத கல்லாதவனை ஒப்பிட்டுக் காண்பிக்கிறது.

நம் தோட்டங்களிலும் தென்னை மரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அந்த மரங்களால் ஏற்படும் பலன்களைத் துய்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதில் நாம் காணாத ஓர் அரிய கருத்தை கவிஞன் உணர்ந்து நமக்கு காட்டத்தவறவில்லை. ஒருவருக்கு நாம் ஒரு உதவி செய்தால் அது என்று நமக்குப் பயன்தரும் என்று ஐயுறல் வேண்டாம். தென்னையைப் பாருங்கள். அது தான் உண்ட நீரை தலையாலே தரும் இயற்கையை என்று நம்மை அறிவுறுத்துகிறார். இப்படியாக நாம் காண முடியாத நம் கண்களுக்குப் புலப்படாத இயற்கை தரும் அரும்பெரும் கருத்துக்களை கவிஞர்கள் காணத் தவறுவதில்லை. 

கவிச்சக்கரவர்த்தி கம்பன் மட்டும் இயற்கை காட்டும் கருத்துகளைக் காணத் தவறி விடுவானா? நாம் தினந்தோரும் காணும் கதிரவனும், உடுபதியும் கம்பனின் கண்களில் பலக் கருத்தோவியங்களைக் காட்டி வண்ண ஜாலங்கள் புரிகிறார்கள். அவன் பாடிய இராம காதையில் ஆரம்ப முதல் முடிவு வரை பற்பல இடங்களில் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாரெல்லாம் இரவையும் பகலையும் அதன் தலைவர்களாகிய மதியையும், இரவியையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அவற்றுள் ஒன்றை இங்கு நாம் காணப்போகிறோம்.

இராம தூதனாக இலங்கைக்குச் சென்ற அநுமன் தான் கொண்டு வந்த  இராமனின் கணையாழியை சீதையிடம் கொடுத்து அவள் கொடுத்த சூடாமணியை தான் பெற்றுக் கொண்டு அசோகவனத்தை விட்டு வெளியேறினான். அவனுக்குத் தான் ஒரு கள்வனைப் போல  இலங்கையில் புகுந்து யாவர்க்கும் புலனாகாமல் வெளியேறிச் செல்வதைத் தன் வீரத்திற்கு இழுக்காகுமென்று கருதினான். உறக்க நிலையிலே கண்ட இராவணனை நேருக்கு நேராகச் சபையிலே கண்டு அவனுக்கு அறிவு புகட்ட வேண்டுமென்ற ஒரு அவா அநுமன் நெஞ்சில் எழுந்தது. அதற்கு என்ன செய்வதென்று யோசித்து ஒரு முடிவிற்கும் வந்தான்.

தேவேந்திரனால் அளிக்கப்பட்ட இந்த நந்தவனத்தை அழிப்பேன். அப்பொழுது அது கண்டு பொறாத காவலர்கள் என்னுடன் சண்டையிட வருவார்கள். அவர்களைக் கொன்றுவிட்டால் மேலும் அரக்கர்கள் சண்டையிட வருவார்கள் அவர்களையும் கொன்று விட்டேனானால் அரக்கர்களின் எண்ணிக்கை குறைந்து இராவணனே என்னுடன் போர் புரிய வரலாம்.  அப்பொழுது என்னுடைய வீரத்தை அவனிடமே காண்பிக்க ஒரு வாய்ப்பு ஏற்படும் என்றெண்ணினான். எண்ணியவாறே செயலிலும் ஈடுபட்டான். அனுமன் கருதியவாறே அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அனுமனுடன் போரிட்டு அவனால் அடிப்பட்டு இறந்து விட்டனர். மேலும் அரக்கர்கள் வருவார்களாயென்று அனுமன் எதிர்பார்த்து காத்திருக்கிறான். இது நள்ளிரவில் நடந்த சம்பவம்.

அன்று மதிநிறைந்த நன்னாள். இயற்கையாகவே சந்திரன் உதிப்பதும், மறைவதும் நாம் காணும் தினசரி நிகழ்ச்சிகளில் ஒன்றேயாகும். ஆனால் கம்பனின் கண்களுக்கு அது ஒரு புதுக்கருத்தை ஊட்டுகின்றது.

சந்திரன் மறையப்போகிறான். அதாவது காலை மலர்கிறது. சந்திரன் விரைந்து மறையப்போகும் அந்த நிகழ்ச்சிக்கு ஓர் அருமையான காரணத்தைக் காட்டி நம்மை ஆனந்தத்துடன் ஆழ்த்துகிறான், கவி.

இராவணன் தன்னைக் காண நேர்ந்தால் “அடச்சந்திரா இத்தனை காலமாக உன்னைக் காணும் பொழுதெல்லாம் கொவ்வைக் கனியத்த சிவந்த  வாயையுடைய சீதையின் மையல் கொண்ட  காதல் என்னும் தீயால் என்னை சுட்டுக் கொண்டிருந்தாய். இன்றோ... என்னிடம் ஏவல் செய்யும் தேவர்கள் கூட என்னை பரிகசிக்கும் விதத்தில் என் நந்தவனத்தை இந்தக்குரங்கு அழித்து விட்டதை உன் கண்களால் பார்த்துக் கொண்டு இன்னும் இங்கு நின்று கொண்டிருக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சினம்கொள்வானே என்ற பயத்தினால் ஓடி மறைவது போல் கம்பனின் கண்களுக்கு காட்சியளிக்கின்றன. இதை,

  “தொண்டையங்கனி வாய்ச் சீதை துயக்கினாலென்னைச் சுட்டாய்       
விண்ட வானவர் தம்முன்னே விரிபொழிலிறுத்து வீசக்
கண்டனை நின்றாயென்று காணுமேல் அரக்கன் காய்தல்
உண்டென வெருவினான் போலொளித்தனனுடுவின் கோமான்”

என்ற பாடலில் தெளிவுறக் காணலாம்.

சந்திரன் மறைந்துவிட்டான், பொழுது புலர்ந்தது. புல்லினம் ஆர்த்தன. கடலின் அடித்தளத்திலிருந்து புறப்பட்டுவிட்டான் தினகரன். இந்த காட்சியிலும் ஒரு கருத்தை புகுத்த தவறவில்லை கம்பன். தன்னுயிர் போன்ற இராமனுக்கு தன் அடையாளமாக தன்னிடமிருந்த ஒரே ஆபரணமாகிய சூளாமணியை அனுமனிடம் கொடுத்து விட்டாளல்லவா சீதை?

தவசு வேடம் தாங்கி, தசமுகன், தாயாம் சானகியை வானமார்க்கமாக இலங்கைக்கு கொண்டு சென்றானல்லவா?  அச்சமயம் மேற்படியானுடைய இரதம் சுக்ரீவன் முதலிய வானரர்கள்  வாழ்ந்து வந்த கிட்கிந்தையின் மேல் சென்றது. தனக்கு எதிர்பாராத விதத்தில் நேர்ந்த விபத்தினின்றும் தன்னைக் காப்பாற்ற எண்ணி தசமுகனிடம் போர் செய்து தன் வலியிழந்து தரையில் வீழ்ந்துவிட்ட சடாயு ஒருவனைத் தவிர மற்ற எவரும் தசமுகனை எதிர்க்க மாட்டார்கள். தன் இருப்பிடம் தன்னைத் தேடிவரும் தசரதப் புத்திரனுக்கு தெரியாமல் போய்விட்டால் தன் கதி என்னாவது என்று சற்று எண்ணிய சீதை தன் அணிகலன்களை கழற்றி அந்தக் கிட்கிந்தையில் வாழுபவர்களுக்கு கிடைக்குமாறு இரதத்திலிருந்து கீழே எறிந்தாளாம். அந்த அணிகலன்கள் தான் இராமனின் உயிரை காத்து நின்றன. என்பது நாம் அறிந்த உண்மை. தன் வசமிருந்த அணிகலன்கள் யாவற்றையும் கீழே அடையாளமாக இருக்கவேண்டி எறிந்த அந்த சீதை என்ன காரணத்தினாலோ அவளது சூடாமணியை மட்டும் தன்னிடம்  வைத்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுது இராமன் பல அடையாளங்களை அனுமனிடம் சொல்லி அவைகளுக்கெல்லாம் மேலாக தனது கணையாழியை பேரடையாளமாக சீதைக்குக் கொடுத்தனுப்பினான் அல்லவா? அதுபோல் சீதையும் தன் கணவனுக்கு ஒரு பேரடையாளம் கொடுத்தனுப்பிட விரும்பினாள். தன் துகிலில் பொதித்து வைத்திருந்த தனது சூடாமணி அவளது கவனத்திற்கு வந்தது. தன் உயிருக்குயிரான அந்த சூடாமணியைத் தன் உயிரேயன்ன இராமனுக்கு கொடுத்தனுப்பிட தீர்மானித்தாள். அவ்வாறே செய்தும் விட்டாள். அவளிடம் எஞ்சியிருந்த அந்தச் சூடாமணியையும் தற்சமயம் அவள் இழந்து நின்றாள். அதனால் அவள் வறியவளாகி விட்டாள். சாப்பாட்டிற்கே வழியில்லாத ஒரு பரம ஏழை தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் இழந்துவிட்ட நிலைமையில் சீதையும் இருந்தாள். பார்த்தான் அலைகடற்கரசன். அவனால் அந்தச் சீதையின் அவல நிலைமையைக் கண்டு சகித்திருக்க முடியவில்லை. அவளுடைய வறுமையைப் போக்க நினைத்தான். அவளிழந்த ஒரே மிகுதிப் பொருளான அந்தச் சூடாமணியை அவள் விரும்புவதற்கு முன்னராகவே தானே பரிந்து வந்து கொடுக்க எண்ணினான். மகள் வறியவளாகி நின்றால் அவளது வறுமையைப் போக்குவது தானே தந்தையின் கடமை. அதே நிலையில் அன்று கடல் இருந்ததாம். காலையில் கிழக்குச் திசையில் கதிரவன் எழுவது இயற்கை. இதைக் கம்பன் பயன்படுத்திக் கொண்டான். காலை வேளை கடலினின்றும் எழும் கதிரவன் சூடாமணியை போன்று தானே பிரகாசமாக இருப்பான். இந்தக் காட்சியை தன் மனதில் பதித்துக் கொண்ட கவிச்சக்கரவர்த்தி அந்தக் கதிரவன் என்னும் சூடாமணியை சீதைக்கு பரிந்து வந்து கடலரசன் கொடுப்பதாக உருவகப்படுத்தினான். இது ஒரு அபார சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது அந்தப்பாடலை நாமும் பாடிப் பார்க்கலாம்.

“உறுசுடர்ச் சூடைக்காசவ்வுயிரிணையுயிரொப்பானுக்
கறிகுறியாக விட்டாளாதலான் வறியளந்தோ
செறி குழற்சீதைக் கென்றோர் சிகாமணி தெரிந்து வாங்கி
எறி கடலீலவதென்ன வெழுந்தனனிரவி யென்பான்”


இவ்வாறு இரவியையும், மதியையும் அவைகளுடைய இயற்கைத் தன்மைகளைக் கொண்டே ஓர் நாடகம் நடத்தி நம்மைக்களிப்புறச் செய்யும் கம்பன் கவித்திறத்தை நாம் கனவிலும் தான் மறக்கமுடியுமோ!.

Comments

Popular posts from this blog

இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி

“இராமகாதையில் ஒரு திருப்பமா?” என்று இந்த கட்டுரையின் தலைப்பைக் காணும் வாசகர்கள் அதிசயத்துடன் என்னைப் பார்த்து கேட்பது என் செவிகளில் விழத்தான் செய்கிறது. கவியாற்றல் படைத்த கம்பனது இராமகாதையில் அப்படிப்பட்ட திருப்பம் என்ன இருக்கிறது? என்றும் பலர் எண்ணலாம். அவர்களுக்கு இந்நூலை எழுத முற்பட்ட நான் விடையளிக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்பதை நன்கு உணராமலில்லை.
ஆம். இராமகாதையில் பல திருப்பங்கள் இருப்பதை, நாம் அதை ஊன்றிக் கவனிக்குமளவில் அறிந்துகொள்ள இயலும். அவைகளுக்கு பல சான்றுகள் உள. அவைகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு கூர்ந்து நோக்குவோம்.
முதலாவதாக தசரத சக்கரவர்த்தியால் தீர்மானிக்கப்பட்டு மறுநாள் காலை நடக்கவிருந்த இராம பட்டாபிஷேகம் அதற்கு முதல் நாள் இரவே கூனியின் சூழ்ச்சியால் நிறைவேறாமல் நின்றுவிடுவதை ஒரு திருப்பம் என்றே கொள்ளலாம். தசரதனின் திட்டப்படி இராம பட்டாபிஷேகம் அன்று நடந்திருக்குமானால் இராமன்  காட்டிற்குச் செல்வதோ, அங்கு சானகியை பிரிய நேரிடுவதோ, அதன் நிமித்தம் இராவணனை அவனுடைய குலத்தோடு வேரறுப்பதோ நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும்.
இராவணனா…

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது.
கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்கு மாறுப…

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - கோமான் வெங்கடாச்சாரி

“அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது”- என்பது ஒளவையின் அருள்வாக்கு. மானிடராய் பிறந்த யாவருமே மனிதர்களாக மாட்டார்கள் என்பது தொல்காப்பியரின் துணிந்த முடிவாகும். ஐம்புலன்களையும் வென்று அறவழிச் செலுத்தும் ஆறாவது புலனாகிய அறிவை ஆளுமைபடைத்தவர்தான் மக்கள். மற்றையோர் மாக்கள் என்பது அன்னாரின் கொள்கை. அவரைக் காட்டிலும் விளக்கம் தருவதில் ஒருபடி மேலே சென்றார் தாயுமானவப் பெருந்தகை. “மனிதரிலே மரங்களுண்டு, மிருகமுண்டு, பட்சியுண்டு மனிதரிலே மனிதருண்டு”என்றெல்லாம் நமக்கு விளங்குமாறு பாடியருளிப் போந்தார் அவர்தம் பாடலிலே. இவர் தம் கருத்தை மேலும் நமக்கு விளக்கமாக்கித் தருகிறார் ஒளவை மூதாட்டியார். அது என்ன நீண்ட வலுத்த கிளைகளைக் கொண்டு ஓங்கிவளர்ந்திருக்கின்றனவே மரங்கள். அவைகள் உண்மையிலேயே நல்ல மரங்களல்ல என்பது அவரது கொள்கை.

      “கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே நிற்கும்
      அவையல்ல நல்ல மரங்கள்”

இதுதான் அன்னார் பாடிய பாடலின் முதலிரண்டு அடிகள். நல்ல பெரிய உருவத்தில் நீண்ட மரங்கள் மக்கள் நடமாட்டமற்ற பெருங்காடுகளில் தானே அதிகமாகக் காணப்படும். நாட்டிலா காணப்படும்? என்று நம் போன்றோர் எண்ணத்தான் தோன்றும். நமது…